
ரணிலுக்கு 99 வயதாகும் போதே தேர்தல் நடக்கும்
2048 ஆம் ஆண்டிலேயே நாட்டுக்கு பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படப் போகின்றது என்றால், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 99 வயதாகும் போதுதான் தேர்தலை நடத்த வேண்டிவரும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விமான கட்டளை சட்டங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அதன்போது மரிக்கார் எம்.பி தொடர்ந்து கூறுகையில்,
ஆளும் தரப்பினர் பக்கத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி தேர்தலுக்கும் தயார், பொதுத் தேர்தலுக்கும் தயார் என்று கூறுகின்றனர். ஆனால் இப்போது தேர்தல் வேண்டாம் என்றும் கூறுகின்றனர். இவை திரிபுபடுத்தப்பட்ட கதைகளே. நுவரெலியாவில் ஜனாதிபதி கருத்தொன்றை கூறியுள்ளார். இது நரிக்கு திராட்சைப் பழம் புளிக்கும் கதையை போன்றே உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு தேர்தல் என்பது ஒவ்வாமையையாகவே உள்ளது. மொட்டுக் கட்சியினருக்கும் அவ்வாறுதான். அவர்களுக்கு மக்கள் வாக்குகள் இல்லை, வேட்பாளர்கள் இல்லை என்பதற்காக நாங்கள் என்ன செய்வது.
இவ்வளவு காலம் தேசிய பாதுகாப்பு பற்றியே கதைத்தனர். இப்போது பொருளாதார ஸ்தீரதன்மை தொடர்பில் கதைக்கின்றனர். ஜனாதிபதி கூறுவதை போன்று 2048 இலேயே பொருளாதார ஸ்தீரத்தன்மை ஏற்படப் போகின்றது. அப்படியென்றால் 99 வயதில்தான் இந்த ஜனாதிபதியினால் தேர்தலை நடத்த வேண்டி வரும்.
தேர்தலை ஒத்திவைத்து எவ்வாறான ஆட்சியை கொண்டுவரப் போகின்றீர்கள் என்று கேட்கின்றேன். தேர்தலை இவர்கள் ஒத்திவைத்து என்ன செய்கின்றார் என்பதனை கூறுகின்றேன். கந்தானையில் 33 ஏக்கர் நிலத்தை பேர்ச்சர்ஸ் ஒன்று 33 ரூபா என்ற அடிப்படையில் ஹோம் லேன்ட் என்ற நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர். இந்தக் காணியின் உண்மையான மதிப்பு 1760 மில்லியன் ரூபாவாகும். இவ்வாறான வேலைகளையே செய்கின்றனர். கொழும்பு 7இல் இருக்கும் டீல்காரர்களே தேர்தல் வேண்டாம் என்று கூறுகின்றனர்.
ஜனாதிபதிக்கு 99 வயதாகும் போதே நாட்டின் பொருளாதாரம் ஸ்திர நிலைக்கு வரும் என்றால், அவர் இன்னும் 25 வருடங்களுக்கு ஆட்சியில் இருப்பதற்கு இடமளித்து, இந்த நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்க மக்கள் தயாராக இல்லை என்றார்.

