சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை பாதுகாக்க அலி சப்ரி முற்படுகிறாரா?;  வரலாறு தெரியாமல் வகுப்பெடுக்கக் கூடாது

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை பாதுகாக்க அலி சப்ரி முற்படுகிறாரா?; வரலாறு தெரியாமல் வகுப்பெடுக்கக் கூடாது

சிங்கள பேரினவாத அரசாங்கத்திற்கான சர்வதேசத்திடம் வாக்காலத்து வாங்கும் அமைச்சர் அலி சப்ரிக்கு தமிழ் மக்களுக்கு வகுப்பெடுக்கும் உரிமை இல்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:-

அண்மையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமிழ் மக்களை நோக்கி ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதாவது புலம்பெயர்ந்தவர்களின் நிகழ்ச்சிநிரலை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம். அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று தமிழ் மக்கள் தங்களை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்பதுடன், மீண்டும் தமிழீழம் என்ற கோரிக்கையை முன்வைக்கும் நிலைமைக்கு போகக் கூடாது என்ற தோரணையில் கருத்தை வெளியிட்டுள்ளார்.

சிங்கள பேரினவாதத்தை கட்டவிழ்த்து விடும் அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் வக்காலத்து வாங்குகின்ற ஒருவராகத்தான் அலி சப்ரி உள்ளார்.

இந்த நாட்டில் முஸ்லீம் மக்கள் மீது உங்கள் சட்டங்கள் அனாவசியமாக பாய்கின்றது.இங்குள்ள தமிழ் மக்கள் விரட்டி அடிக்கப்பட்டுத்தான், இன்று புலம்பெயர் தமிழர்களாக உலகம் முழுவதும் தமிழர்கள் சென்றுள்ளார்கள். இந்த மக்கள் ஏன் விரட்டியடிக்கப்பட்டார்கள், உலக நாடுகளில் ஏன் புலம்பெயர்ந்து உள்ளார்கள் என்பதற்கான காரணங்களை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

தான் மட்டும்தான் நீதியானவர் என்ற தோரணையில் அவர் பேசக் கூடாது. இந்த நாட்டில் ஏன் யுத்தம் ஏற்பட்டது? இங்கிருந்து தமிழ் மக்கள் ஏன், எவ்வாறு துரத்தியடிக்கப்பட்டார்கள்? நாட்டு மக்கள் அனைவருக்கும் சமத்துவமான நீதி உள்ளதா? என்பதை அமைச்சர் அலி சப்ரி தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் முதன்மையான மதமாக பௌத்த மதம்தான் உள்ளது. அந்த சிங்கள பௌத்தத்தை வட,கிழக்கில் நிலைநிறுத்த பல முயற்சிகளை அரசு மேற்கொண்டுவருவதையும் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

புலம்பெயர் மக்களிடம் வித்தியாசமான நிகழ்ச்சிநிரல் உள்ளதாக கூறும் அலி சப்ரி, நாட்டில் வாழும் தமிழ் மக்கள் தமது அரசியல் கோரிக்கைக்காக பல வருடங்களாக போராடி வருகின்றார்கள்.

அதுமட்டுமல்லாமல் அலி சப்ரி வெளிநாடுகளுக்கு பயங்கரவாத தடைச் சட்டம் இல்லாமல் செய்யப்படும் என்றும் நாட்டில் இன, மத நல்லிணக்கத்திற்கான வேலைத் திட்டங்கள் நடைபெறுகின்றது என்றும் கூறுகின்றார்.

முதலில் நாட்டு மக்களுக்கு அவர் இன, மத நல்லிணக்கத்திற்காக என்ன அரசியல் வேலைத்திட்டங்கள் வைத்துள்ளீர்கள் என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும்

உள்நாட்டில் உள்ள சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை பாதுகாக்கவே சர்வதேச ரீதியில் அலி சப்ரி பேசுகின்றாரே தவிர, இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கான சமத்துவத்தை அல்லது நீதியை நிலைநாட்டுவதற்காக அவர் பேசவில்லை.

அவரும் ஒரு சிறுபான்மை இனத்தவர்தான். ஆனால் அவருடைய கருத்துக்கள் அனைத்தும் இந்த நாட்டில் வாழும் மக்களுக்கான சமத்துவமானதான இல்லை.

ஆகவே புலம்பெயர் தமிழ் மக்கள் என்ன நிகழ்ச்சி நிரலை கொண்டுள்ளார்கள் என்பது குறித்து தமிழ் மக்களுக்கு வகுப்பெடுத்வதை விடுத்து, நீங்கள் இந்த அரசுக்கு சர்வதேச ரீதியில் வக்காலத்து வாங்குவதற்காக கூறும் விடயங்களில் உண்மைத்தன்மை உள்ளதா என்பது குறித்து நீங்களே உங்களை கேட்டுக் கொள்ளுங்கள்.

உண்மைகளை கண்டறிவதற்கான குழு ஒன்றை நிறுவுவதாக கூறுகின்றார். அதற்கு முன் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வினை காண வேண்டும். தென்னாபிரிக்காவில் மக்களுக்கான தீர்வினை கண்டறிந்த பின்புதான் நெல்சன் மண்டேலா உண்மைகளை கண்டறிவதற்கான குழுவினை நியமித்தார்.

ஆனால் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக இவ்வாறான குழு உருவாக்குவதாக கூறுவது என்பது பிழையான விடயம்.

மகாவலி தண்ணீரே வராத வடக்கு மாகாணத்திற்கு புதிய பல வலயங்களை உருவாக்கி காணிகளை பறிமுதல் செய்யும் யுத்திகள் கொண்டுவரப்படுகின்றது.

பலஸ்தீனத்தில் மொசாட் என்னும் உளவு அமைப்பு, முஸ்லீம் மக்களிடம் இருந்து பறித்தெடுத்த பகுதிகளில் இஸ்ரேலிய குடியேற்றங்களை அமைத்து பலஸ்தீன மக்களை அங்கிருந்தும் அவர்களின் மண்ணைவிட்டும் விரட்டும் செயற்பாடுகளை செய்து வருகின்றது.

அதே போன்று மொசாட்டினுடைய நடவடிக்கைகளை பின்பற்றித்தான், சிங்கள ஆட்சியாளர்களும் தமிழ் மக்கள் செறிந்து வாழக்கூடிய பகுதிகளை அவ்வாறான குடியேற்றங்களை செய்து வருகின்றார்கள். இதன் காரணமாகத்தான் மணலாறு இன்று வெலிஓயா என்று மாற்றப்பட்டுள்ளது.

ஆகவே இன நல்லிணக்கம் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் வகுப்பெடுக்கும் அலி சப்ரி போன்றவர்கள் நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு நடக்கும் மோசமான நடவடிக்கைகளை நிறுத்த முன்வர வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )