8 கோடிக்கு 7 கோடி ரூபா அபராதம் 7 கோடிக்கு 75 இலட்சம் ரூபாவே அபராதம்;   அலி சப்ரி ரஹீம் எம்.பி.விடயத்தில் ஏன் இந்த பாராபட்சம்

8 கோடிக்கு 7 கோடி ரூபா அபராதம் 7 கோடிக்கு 75 இலட்சம் ரூபாவே அபராதம்; அலி சப்ரி ரஹீம் எம்.பி.விடயத்தில் ஏன் இந்த பாராபட்சம்

கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக சட்டவிரோதமாக 8 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கொண்டு வந்த நபருக்கு 7 கோடி ரூபா அபராதம் . ஆனால் 7 கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் செல்போன்களைக் கொண்டு வந்த போது பிடிபட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி.க்கு 75 இலட்சம் ரூபாவே அபராதம் .இது எந்த வகையில் நியாயம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்தே இவ்வாறு கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கடமைப்பட்டுள்ளனர் . ,இது தொடர்பில் பல சரத்துக்கள் உள்ள போதிலும் அண்மையில் விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த தங்கம் மற்றும் செல்போன்களுடன் பிடிபட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி. மீது ஏன் சட்டம் உரிய முறையில் பிரயோகிக்கப்படவில்லை?

கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக சட்டவிரோதமாக 8 கோடி ரூபா பெறுமதியான 4. 6 கிலோ தங்கத்தை கொண்டு வந்தவருக்கு 7 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது, அதனை செலுத்த முடியாமல் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் 7 கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் செல்போன்களைக் கொண்டு வந்த போது பிடிபட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி.க்கு 75 இலட்சம் ரூபாவே அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையில் நியாயமானது?

அலி சப்ரி ரஹீம் எம்.பி.ன் இந்த சட்டவிரோத செயலானது பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அவமானப்படுத்தும் வகையிலானது. இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

நாட்டின் குடிமகனுக்கு ஒரு கவனிப்பும், பாராளுமன்ற உறுப்பினருக்கு மற்றொரு கவனிப்பும் நடைமுறைப்படுத்துவதா ”சிஸ்டம் சேஞ்” ?அதனால் இதற்குப் பின்னால் இருக்கும் மறைமுக சக்தி எது எனக்கேள்வி எழுப்பினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )