
மாகாணசபை தேர்தல்கள்(திருத்தம்) சட்டமூலம் ; சுமந்திரன் முன்வைத்தது அரசியலமைப்புக்கு முரணல்ல
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட “மாகா ணசபை தேர்தல்கள்(திருத்தம்)” எனும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நிலையிலேயே “மாகாணசபை தேர்தல்கள்(திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.
1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க, மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்துவதற்கான குறித்த சட்டமூலம்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனால் தனிநபர் சட்டமூலமாக கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.
மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் தனிப்பட்ட உறுப்பினர் முன்மொழிவாக முதலில் வெளியிடப்பட்டதுடன் மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டது.
இவ்வாறான நிலையில் இதனை சிலர் நீதிமன்ற சவாலுக்குட்படுத்தினர் . இது தொடர்பில் ஆராய்ந்த உயர் நீதிமன்றம் தனது வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்த நிலையிலேயே அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “மாகாணசபை தேர்தல்கள்(திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட மனு மீதான
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்திருப்பதாக சபாநாயகர் நேற்று செவ்வாய்க்கிழமை சபைக்கு அறிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தில் “மாகாணசபை தேர்தல்கள்(திருத்தம்)” எனும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல .சட்டமூலத்தின் 3 ஆம் வாசகத்தினை திருத்துவதற்கும் மற்றும் 4ஆம் வாசத்தின் நீக்குவதற்குமான
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டு சட்டமூலமோ அல்லது அதன் எந்த ஏற்பாடுகளுமோ அரசியலமைப்பக்கு முரண்பாடானதல்ல என உயர் நீதிமன்றம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.
சுமந்திரன் எம்.பி.யின் “மாகணசபை தேர்தல்கள்(திருத்தம்)” எனும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டால் அதனை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்பதுடன் பழைய வாக்களிப்பு முறையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

