
ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் மூலம்; ஊடக சுதந்திரத்திற்கு விரைவில் சாவு மணி
உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றுமாக இருந்தால், அது இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்கான சாவு மணியாகவே அமையும் என்று, அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியில் சுயாதீனமாக இயங்கும் சுதந்திர மக்கள் சபையை சேர்ந்த முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் போராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகம் கருதப்படுகின்றது. இலங்கையின் அரசியலமைப்பில் 14 ஆவது சரத்தில் கருத்து சுதந்திரம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து மனித உரிமைகளை அனுபவிப்பதற்கானதாகவே ஊடகங்கள் உள்ளன. ஊடகங்கள் இன்றி மற்றைய உரிமைகளை அனுபவிக்க முடியாது. இந்நிலையில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச சட்டமூலத்தை சட்டமாக்க நாங்கள் இடமளித்தால் ஊடக சுதந்திரத்தின் சாவு மணியாகவே இருக்கும். இதுவொரு யோசனை மட்டுமே என்று அரசாங்கம் கூறுகின்றது. இது முற்றிலும் தவறாகும்.
இதுவொரு யோசனையாக இருந்தாலும் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கான சட்டமூலமே. இதில் 33 சரத்துக்கள் உள்ளன. இதன்மூலம் இலங்கையின் ஊடக சுதந்திரம் முற்றிலும் பாதிக்கப்படும். தற்போது நாட்டில் தனியார் ஊடகங்களே அதிகளவில் உள்ளன. இவை மக்களுக்கு பெரும் சேவைகளை செய்துள்ளன. ஊடக நிறுவனங்கள் அனுமதிப்பத்திரங்களை பெற்றுள்ளன. 57 வருடங்களாக ஊடகங்கள் அதன்படி செயற்படுகின்றன. இவ்வாறான நிலைமையில் அரசாங்கம் கொண்டுவரும் சட்டமூலம் நிறைவேறினால் 6 மாதங்களில் தற்போதைய நடைமுறை இல்லாது போய் ஊடக நிறுவனங்கள் மூடப்படும் நிலைமை ஏற்படலாம். அரசாங்கத்திற்கு இணங்கி செயற்படாத ஊடக நிறுவனங்களுக்கு அனுமதிப் பத்திரம் கிடைக்காது போகலாம்.
இவ்வாறு நடக்குமாக இருந்தால் உண்மைகளை மக்களுக்கு தெரிந்துகொள்ள முடியாது போகும். இதனால் ஊழல் மோசடிகள் அதிகரிக்கலாம். ஆகவே இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பின்னர் அதற்கு எதிராக நீதிமன்ற மற்றும் அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

