
அரசுக்கு ஆபத்தா?; பெரும்பான்மைக்கு அச்சுறுத்தல்
பாராளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொண்டுள்ள போதும் கட்சியின் செயற்பாடுகளில் பலர் அதிருப்தி கொண்டுள்ளதால் அரசு எப்போதும் பெரும்பான்மையை இழக்கும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணையில் அரசாங்கம் 123 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற போதிலும் அரசாங்கத்திற்குள் கடும் அதிர்வு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
ஜனக ரத்நாயக்கவுக்கு எதிரான பிரேரணையில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது என மொட்டு கட்சியைச் சேர்ந்த 15 பேர் கொண்ட முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்கள் குழு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை சந்தித்து தெரிவித்ததையடுத்து இந்த நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் இக்குழுவினரின் பிரச்சினையை தீர்த்து 123 வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக ஏற்கனவே டுபாயில் தங்கியிருந்த பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
எனினும் இந்த வாக்களிப்புடன் மேலும் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ஜப்பானில் இருந்த ஜனாதிபதியால் உடனடியாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயான அவசர கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாடுகளில் பலர் அதிருப்தி கொண்டுள்ளதால் அரசு எப்போதும் பெரும்பான்மையை இழக்கும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

