
வலி சுமந்த நினைவுகள்
பல தடைகளைக் கடந்து, மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எமைக் கடந்து போயுள்ளது. இலட்சோப இலட்சம் மக்களையும் போராளிகளையும் விழுங்கிய இனப்படுகொலையின் வலியும் ரணமும் சற்றும் ஆறவில்லை. வருடங்கள் பதினான்கு கடந்தும் எமக்கான நீதி கிடைக்காமல் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறோம் நாம்.
இரசாயனக் குண்டுகள், கொத்துக் குண்டுகள் என்று பல்வேறு வடிவங்களில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கான நீதி இன்னமும் கிடைக்கவில்லை. விசாரணையின் பின் விடுவிக்கப்படுவார்கள் என்ற உத்தரவாதத்துடன் பெற்றவர்களினால் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளின் நிலை என்ன என்பது இன்னமும் தெரியவில்லை. எதற்காக எம்மைக் குறிவைக்கிறார்கள் என்று தெரியாமலே அவயவங்களை இழந்த மக்களுக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை. தமது சொந்த நிலத்தில் மீண்டும் குடியேற முடியாமல் பல்லாயிரம் பேர் இன்னமும் அல்லல் படுகின்றனர்.
எமக்கான எந்த நீதியும் கிடைக்காத நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினைக் குழப்புவதன் மூலம் இந்தப் பேரழிவை மக்கள் மனங்களில் இருந்து விலக்க முடியுமா என்ன? திட்டமிட்ட வகையில் இந்த மனிதப் பேரவலத்தை நிகழ்த்திய சிங்கள அரசு, தனது அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி நினைவேந்தல் நிகழ்வைத் தடுக்க படாதபாடு படுவதையும் இத்தனை வருடங்களாக நாங்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
முள்ளிவாய்க்காலிலும் யாழ் பல்கலைக்கழகத்திலும் கட்டப்பட்டிருந்த நினைவுத்தூபிகளை இரவோடிரவாகச் சிதைத்து வெறியாட்டம் ஆடியதையும் நாங்கள் மறந்து விடவில்லை. நினைவு வாரத்தின் முன்பே தடையுத்தரவு போட்டு மக்களைக் கைது செய்வதும், அந்த இடத்தில் மக்கள் ஒன்றுகூடி விளக்கு ஏற்ற விடாமல் இராணுவத்தின் கட்டுப்பாட்டினுள் அந்தப் பிரதேசத்தைப் பூட்டி வைப்பதுமாக இறந்தவர்களை நினைவுகூரத் தடைவிதிக்கும் அதே இலங்கை அரசு, எம் மக்களிற்கான காவலன் நானே என வெளியுலகிற்கும் வேசம் போடுகிறது.
நல்லிணக்கம் மற்றும் மீளிணைப்பை வெளிக்காட்டும் வகையில், மறைந்த போராளிகளுக்கும், பொதுமக்களிற்கும் மற்றும் உயிர்நீத்த முப்படையினர், பொலிஸ் அலுவலர்கள் ஆகியோருக்கும் கொழும்பில் ஒரு பொது நினைவுத்தூபி அமைக்கப்படும் என்ற சனாதிபதியின் அறிவிப்பும் வெளியுலகிற்காக போடப்படும் ஒரு வேடம்தான்.
மக்கள் படுகொலைக்கு காரணமாக இருந்தவர்களே அவர்களுக்கு நினைவுத்தூபி, அதுவும் தலைநகரில் எழுப்பப் போகிறார்களாம். அதுவும் கொன்றவர்கள், கொல்லப்பட்டவர்கள் எல்லோருக்கும் பொதுவாக. தாங்கள் படுகொலை செய்ததை ஏற்றுக் கொள்ளாத அரசு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலையைத் தெரிவிக்க முடியாத ஒரு அரசு, இறந்தவர்களுக்கு நினைவேந்தல் செய்யத் தடை விதிக்கும் அரசு, விளக்கு ஏற்றுவதையும் கஞ்சி உண்பதையும் வீட்டினுள் இருந்தே செய்யுங்கள் என ஈவிரக்கமின்றிக் கூறும் ஒரு அரசு நினைவுத்தூபி கட்டி மரியாதை செலுத்தப் போகிறதாம்.
இதே அரசுதான் அத்தனை துயிலுமில்லங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கியது. நினைவாலயங்கள், மண்டபங்கள், நடுகற்கள், தூபிகள் என்று அனைத்தையும் அழித்துச் சிதைத்தது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அடிப்படை உரிமைகளையும் தர மறுக்கிறது.
இனப்பிரச்சனைக்கு சரியான ஒரு தீர்வைத் தந்திருந்தால் இவ்வளவு மரணங்கள் ஏற்பட்டிருக்குமா? திட்டமிட்ட ஒரு இன அழிப்பு நடவடிக்கையின் விளைவாக இத்தனை லட்சம் உயிர்களைக் காவு வாங்கியவர்கள் பொறுப்புக் கூறாமல் தப்பிக்க முடியாது.
எமது மக்களுக்கு சொல்லொணாத் துன்பங்களை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கொல்லப்பட்டவர்களையும் கொன்றவர்களையும் ஒன்றாக நினைவுகூரும் நினைவுத்தூபி கட்ட அமைச்சரவை கொடுத்த அனுமதியானது கொலைகாரர் தப்பிப்பதற்குச் செய்யப்பட்ட யுக்தி. தமிழினத்தின் சார்பாக இதனை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்.
நல்லிணக்கம், மீளிணைப்பு என்பனவற்றை வெளிக்காட்ட வேண்டுமென்றால் இனப்படுகொலை செய்தவர்களை சட்டத்தின் முன் கொண்டுவாருங்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குங்கள்.அரசியற் கைதிகள் என்ற போர்வையில் விசாரணை எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரம் தமிழ்க் கைதிகளை விடுதலை செய்யுங்கள். பறிக்கப்பட்ட நிலங்களையும் அவர்கள் வணக்கத் தலங்களையும் மீண்டும் அவர்களிடமே கையளியுங்கள்.
மொத்தத்தில், அடிப்படை உரிமைகளைக்கூட வழங்காது துன்புறுத்துவதை நிறுத்தி எம் மக்களை வாழ விடுங்கள். இவை எவற்றையும் செய்யும் எண்ணம் துளிகூட இல்லாமல், இனிக்கப் பேசி முதுகில் குத்தும் இனவாதிகளை தமிழினம் என்றும் மன்னிக்கப் போவதில்லை.