மதத்தின் பெயரால் இனக்கருவறுப்பு

மதத்தின் பெயரால் இனக்கருவறுப்பு

போர் முடிவடைந்து விட்டது என்ற சிங்கள அரசின் அறைகூவல், விமானத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள், ஷெல்லடிகள், துப்பாக்கிச் சூடுகள் என்று தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்லும் சந்தர்ப்பத்தை இனவாதிகளிடமிருந்து பறித்துவிட்டது. எனினும் இனவழிப்பு நிறுத்தப்பட்டு விட்டது என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. வடிவங்கள் மாற்றப்பட்டு அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இனவழிப்பை புதிய புதிய வடிவங்களில் அரங்கேற்றி, இலங்கையை சிங்கள பௌத்த நாடாக மட்டும் ஆக்குவதே குறிக்கோளாக இயங்கி வருகிறது அரசு. தமிழர் தாயகப்பகுதியில் தமிழ்க் குடிகளின் இனப் பரம்பலைக் குறைத்து, ‘தமிழர் தாயகம்’ என்ற கோட்பாட்டை அழிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது அது. தமிழர் பிரதேசத்தில் இராணுவ உதவியுடன் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்படுகின்றன.

இலங்கையின் தொல்லியல் திணைக்களம் ‘சிறிலங்கா முழுக்க முழுக்க ஒரு சிங்கள பௌத்த நாடு’ என்ற கொள்கையுடன் இயங்குவதால், ஏக்கர் கணக்கான தமிழர் காணிகள், தொன்மை வாய்ந்த புராதனக் கோவில்கள், சிறப்பு வாய்ந்த நிலப்பரப்புகள், முக்கியமான உயர்ந்த நிலப்பரப்புகள் என்பன இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப் பட்டுள்ளன. அந்த இடங்களினுள் மக்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.

தமிழர் தொன்மையான குடிகள் என்பதற்கான சான்றுகளான கல்வெட்டுகள், எச்சங்கள், புராதன சின்னங்கள், சிலைகள், வடிகால்கள், தூபிகள், மண்டபங்கள், போன்ற அத்தனையும் இங்கு அழிக்கப்படுகின்றன. அந்த இடங்களில் சிங்களர்களே வாழ்ந்தார்கள் என்று நிறுவுவதற்காக போலியான ஆதாரங்கள் வைக்கப்படுகின்றன.

கடந்த சில வருடங்களாக, ஆதிகாலத்தில் தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் பரவலாக ‘தமிழ்ப் பௌத்தம்’ இருந்தது என்று நிறுவுவதற்கு பிரயத்தனப் படுகின்றனர் இவர்கள். தமிழர் வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் பௌத்த விகாரைகள் எழுப்பப்படுகின்றன.

புகழ்பூத்த சைவத்தலங்கள் கூட தொல்லியல் ஆராய்ச்சி என்ற பெயரில் மூடப்பட்டு, அங்கு அகழ்வின்போது பௌத்தம் இருந்ததற்கான சின்னங்கள் கிடைத்ததாக நிரூபிக்கப்படுகிறது. மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் அவர்களின் அனுமதி இல்லாமலே பிடுங்கப்பட்டு, அவற்றில் விகாரைகள் கட்டப்படுகின்றன. அதே சமயத்தில் முகம் தெரியாதவர்களால் சைவக் கோவில்கள் அடித்து நொருக்கப்படுகின்றன, விக்கிரகங்கள் சிதைக்கப்படுகின்றன.

தமிழ்த்தரப்புக்கு நியாயம் கிடைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று சொல்லும் அதே நேரம் அருண் சித்தார்த் போன்ற புல்லுருவிகளை வைத்து பௌத்த மயமாக்கலை நியாயப்படுத்தும் நடவடிக்கைகளில் இராணுவப் புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் ஈடுபடுகிறார்கள்.

இன, மத பாகுபாடுகளைக் கடந்து இலங்கையின் வரலாற்றைப் பேணுவதுதான் தொல்லியல் திணைக்களத்தின் முக்கிய இலக்கு என்று அரசின் அதிகாரத்தில் இருப்பவர்கள் அடிக்கடி அறிக்கைகள் விடுகிறார்கள். அது பெரும்பான்மை சிங்களவருக்காக மட்டுமே செயற்படுவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

இனத் துவேசத்துடன் தீட்டப்பட்ட சட்டங்கள் பெரும்பான்மையினர் பக்கம்தான் வளையும். சமயங்களில் நீதிமன்று நியாயமான தீர்ப்பைச் சொன்னாலும், சட்டம் மீறப்பட்டு பௌத்தம் மட்டுமே பாதுகாக்கப்படும் என்பதற்கு குருந்தனூர் மலை விவகாரத்தில் நீதிமன்ற ஆணை மீறப்பட்டதும், மீறப்பட்டமைக்காக எந்தத் தண்டனையும் கொடுக்க முடியவில்லை என்பதும் சான்றாக அமைகின்றன.

வாழ வக்கற்று பிற நாடுகளிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் சிறிலங்காவில், குறிப்பாக தமிழர் தாயகப் பிரதேசத்தில், கண்மூடித் திறப்பதற்குள் விகாரைகள் முளைப்பதும், அவை கோலாகலமாகத் திறந்து வைக்கப்படுவதும் நாளாந்த நிகழ்வாகி விட்டன. இவற்றிற்கான பணம் எங்கிருந்து கிடைக்கிறது? சைவ, கிறிஸ்தவ, முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் தமிழர் தாயகப் பரப்பில் விகாரைகளுக்கு என்ன வேலை?

இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகக் கட்டப்படுகிறது என்று காரணம் சொல்லப்படுகிறது. போர் முடிவடைந்த பின் இராணுவத்தினருக்கு இங்கு என்ன வேலை? இராணுவ முகாம்கள் அப்புறப்படுத்தப்பட்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இதில், விகாரைகளுக்கு என்ன தேவை?

போரில் கொல்லப்பட்டவர்களிற்கான நினைவேந்தலை வீட்டினுள் இருந்தபடியே செய்யட்டும், வீட்டில் விளக்கேற்றட்டும், கஞ்சி காய்ச்சட்டும் என்று திமிருடன் அறிக்கை விடுகிறார்கள் அரச அதிகாரத்தில் இருப்பவர்கள். அப்படியிருக்க வணங்குதல்களையும் ஏன் இராணுவ கூடாரங்களினுள் செய்யக் கூடாது?

எங்களது அடிப்படைச் சுதந்திரமான எந்த மதத்தை வணங்குவது என்ற உரிமைகூட இந்த நாட்டில் மறுதலிக்கப்படுகிறது. விகாரைகள் கட்டுவதற்கு எதிராக கோசம் போடுவது, போராட்டம் நடத்துவது, விகாரைகளில் விழாக்கள் நடைபெறுவதற்குத் தடையாக இருப்பது என்பன தண்டனைக்குரிய குற்றம் என்கிறது நீதிமன்றத் தீர்ப்பு. அரசும் அரச எந்திரமும் மறைமுகமாக மதக்கலவரத்தை உண்டுபண்ணும் வேலையை கச்சிதமாகச் செய்கின்றன.

இதன் ஒரு பகுதியாகத்தான் தையிட்டியில் அத்துமீறி அபகரிக்கப்பட்ட காணியில் விகாரையும் தூபியும் கட்டி திறப்புவிழா செய்தவர்கள் பக்கம் – சட்டவிரோத கட்டுமானங்களுக்கு சார்பாக – நின்று நியாயம் கேட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. சட்டவிரோத கட்டுமானங்களுக்கும், வழிபாட்டுக்கும் குந்தகம் விளைவிக்காமல் ஓரமாக நின்று கோசம் போடுமாறு பாடம் நடத்தும் நீதிமன்றங்கள் இந்த நாட்டில் என்ன நியாயமான தீர்ப்பை எமது மக்களுக்கு வழங்கிவிடப் போகின்றன? தனியார் காணியில் நின்று போராட்டம் நடத்தியவர்களை காவற்துறையினர் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றதுகூட நீதிமன்றின் கண்களில் குற்றமாகத் தெரியவில்லை.

கீரிமலை சிவன் ஆலயம், சடையம்மா மடம், முருகன் கோவில் என்பன அழிக்கப்பட்டு அங்கு சனாதிபதி மாளிகை கட்டப்பட்டிருக்கிறது. காங்கேசன்துறையில் சைவக் கோவிலும் அதன் சூழலும் அழிக்கப்பட்டு கெமுனு விகாரை எழுந்துள்ளது. வெடுக்குநாறி மலையில் ஆதி சிவன் கோவில் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி விகாரை கட்டப்பட்டு விட்டது. வவுனியா பூவரசங்குளத்தில் பிள்ளையார் விக்கிரகங்கள், சூலம் என்பன சிதைக்கப் பட்டிருக்கின்றன.

திருகோணமலை குஞ்சுமப் பெரியசாமி கோவில் அடித்து நொருக்கப்பட்டு விட்டது. திருமலை ஶ்ரீமலை நீலியம்மன் கோவில் அழிக்கப்பட்டு விட்டது. மட்டு குசலமலை சைவக்குமரன் ஆலய சிற்பங்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. முல்லை செம்மலையிலுள்ள நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் எதிர்ப்பையும் மீறி பிக்கு ஒருவருக்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளன.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தனியார் காணிகளில் விகாரைகள் கட்டப்படுகின்றன. உருத்திரபுரம் சிவன் ஆலயத்தின் 2400 ஆண்டுகள் பழமையான சிவ வழிபாட்டை எடுத்துச் சொல்லும் ஆவுடை லிங்கங்களும், சூலங்களும், மட்பாண்டங்களும், சுடுமண் உருவங்களும் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் தனிமைப்படுத்தப்பட்டு, பௌத்த மயமாக்கத் தயாராக்கப்படுகின்றன.

திருகோணமலையின் அரிசிமலைப் பிரதேசம் விகாரைகளும், காணி அபகரிப்புகளுமாக முற்று முழுதான பௌத்த மயமாக்கலை எதிர் கொண்டுள்ளது. இவை எவற்றிற்கும் எந்த விசாரணைகளும் நடத்தப்படவும் இல்லை… யாரும் கைது செய்யப்படவும் இல்லை. இந்தப் பட்டியல் தொடர்ந்து கொண்டே செல்லும்.

மறுபுறம், பொய்களின் மொத்த உருவமாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க, ஒரு சனாதிபதியாக அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவியுங்கள் என்று நான் எவ்வாறு உத்தரவிட முடியும் என்று தமிழரசுக் கட்சியினரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதே ரணில் எதிர்க்கட்சித் தலைவராக, காணிகளை விடுவித்தல் தொடர்பான போராட்டத்தில் 2013 இல் கலந்து கொண்டிருந்தார். அப்போது தெல்லிப்பழை ஆலய வாசலில் நின்று பறிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று முழங்கியவர் அவர். தட்டிக் கேட்க எவருமற்று நாதியற்று நிற்கிறது தமிழினம். நாங்கள்தான் எங்களுக்காக பேசவேண்டும்.

தனித்தனியாக நின்று குரல் கொடுக்காமல் ஒருமித்து நின்று போராடினால் அன்றி எங்களால் எமது மண்ணைத் தக்க வைக்க முடியாது. புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்கள் தத்தமது நாடுகளிற்கு இந்தப் பிரச்சனைகளை எடுத்துச் சென்று இலங்கை அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த வேண்டும். மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களே இப்போது எங்களின் தலையாய தேவை.

    -பாரி.
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )