பின் முள்ளிவாய்க்கால்

பின் முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் தாயகத்தின் வட-கிழக்கு கடலோரத்தில் உள்ள ஒரு இடம். இன்றோ இச்சொல் தாங்க முடியாத வலியை புணர்ந்து வீறுகொண்ட ஒரு சக்தியை கருவுற்றிருக்கிறது. இதுபெற்றெடுக்க போகும் அச்சக்தி எவ்வாறிருக்கும்?
2007 2008 ம் ஆண்டுகளில் அக்கருவின் வரலாறு வடிவெடுகிறது. ஒவ்வெரு வீட்டிலும் பதுங்கு குழிகள், தொடரும் இடப்பெயர்வுகள், மீண்டும் மீண்டும் இடம்பெயர்ந்த இடங்களில் பதுங்கு குழிகள் வெட்டுதல், வீதியோரங்களில் வாழ்க்கை, உணவு மருந்து அற்ற வாழ்க்கை, வாழ்க்கையின் அடிப்படை தேவைகள் எதுவுமே கிடைக்காத வாழ்க்கை. இரண்டு ஆண்டுகளும் வானத்தில் எம்மை தேடி வந்த குண்டு விமானங்களை தேடின பார்வை. விமானக் குண்டுகளாலும் செல்வீச்சுக்களாலும் கிளேமோர் தாக்குதல்களாலும் பொதுமக்கள் சாவு சதாரணமாகிவிட்ட வாழ்க்கை.

2009 சனவரியிலிருந்து ஏப்பிரல் வரை மக்கள் கொலைகளை அதிகரிப்பதற்காக பாதுகாப்பு வலயங்கள் என்று பெயர் சூட்டப்பட்ட மூன்று கொலைக்களங்கள். 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால். மணலில் கட்டப்பட்ட பதுங்கு குழிகள் சரிவதும் அதிலிருந்து வெளியே வருவதே சாவைத் தேடி என்றாகிவிட்ட வாழ்க்கை. இறந்த குழந்தையுடன் தாய், தாயின் வயிற்றிலிருந்து செல்துண்டுகளுடன் பிறக்கும் குழந்தை, தொடர்ந்த கைதுகளும் காணாமல் போதல்களும். இதுதான் தாங்க முடியாத வலியை புணர்ந்து வீறுகொண்ட ஒரு சக்தியை கருவுற்றிருக்கும் முள்ளிவாய்க்கால்.

இப்போது பின் முள்ளிவாய்க்கால் காலம். இது வெளியாரின் காலம். முள்ளிவாய்க்காலை நியாயப்படுத்துவது ஒருபுறமும், குற்றம் செய்த தங்கள் மனச்சாட்சிக்கு மருந்தாக சிங்கள அரசை கண்டிப்பது ஒருபுறமும், தாம் ஈழத்தமிழரை பற்றி கரிசனை கொள்வதாக ஏமாற்றுவதற்கு சில செயற்பாடுகளும் என்றாகிவிட்ட காலம். அவ்வாறு வந்ததுதான் பாதி உண்மைகளை மட்டுமே பேசிய சனல்-4 ஆவணப்படங்கள். ஃபிரான்சிஸ் ஹரிசன், யஸ்மின் சூக்கா போன்றவர்களும் இதே போலத்தான் – அதிகார சக்திகளிடம் சம்பளம் வாங்கி ஈழத்தமிழர்களுக்காக கண்ணீர் வடிப்பவர்கள்.

மூன்று நிபுணர்கள் கொண்ட ஐநா குழு அறிக்கையோ இனவழிப்பு என்று சொல்ல மறுத்தது. பின்னர் ஐநாவின் ஒரு பெற்ரி அறிக்கை தன் நற்பெயரை நிலைநாட்ட தன்னையே கண்டித்தது. ஆனால் அதில் தமிழருக்கு என்ன கிடைத்தது? தொடர்ந்து ஐநா மனித உரிமை கவுன்சில் இதை தன் கையில் எடுத்து 19/2, 22/1, 25/1, 30/1, 34/1, 40/1 என்று தமிழர் என்ற சொல்லே இல்லாத பல ஏமாற்று தீர்மானங்கள்.

2019 இல் ஐநாவின் இனவழிப்பு தடுத்தலுக்கான ஆலோசகர் மதம் சார்ந்த வன்முறைகளை கண்டிக்கும் போது இஸ்லமியர்கள் என்றும் கிறிஸ்தவர்கள் என்றும் குறிப்பிடுகிறார். தமிழர்கள் என்ற ஒரு இனம் மட்டும் ஐநாவின் பார்வையில் இத்தீவில் கிடையவே கிடையாது. இடையில் சிங்கள அரசு ஏற்கவேஏற்காது என்று தெரிந்தும் கலப்பு நீதிமன்றம் ஒன்றை ஐநா முன்மொழிகிறது.

2018 இல் வருகிறார் கோதபாய என்னும் சிங்கள தலைவர். மேற்சொன்ன வெளியாருக்கு பயம் தட்டியது. ஐநாவின் கூச்சல் பல படிகள் மேலே போனது. ஐநாவின் மனித உரிமை ஆணையாளரின், இவர் ஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு வெளியே இயங்குபவர், கடுமையான ஒரு அறிக்கையில் சிங்கள அரசை சர்வதேச குற்றவியல் மன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றது.

இன்று பல தமிழர்களுக்கு பூகோள அரசியல் காற்றோடு அடித்து செல்லப்படும் ஐநாவைப் பற்றி ஒரளவு விழிப்புணர்வு வந்து விட்டது. இது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமே நடப்பதல்ல என்ற புரிதலும், ஐநா என்ற அமைப்பே வல்லரசுகளின் கையில் அகப்பட்டு கிடக்கும் ஒரு அமைப்புத்தான் என்ற தெளிவும் எமக்கு தேவைதான். இதையும்விட முக்கியமாக, பாலஸ்தீனர்களையும் குர்துக்களையும் போல நாமும் வல்லரசுகளின் முக்கிய தேவைகள் என்ற வலைப்பின்னலில் சிக்கியுள்ளோம் என்ற புரிதலையும் அடைய வேண்டும். பெரும் சக்திகளின் கப்பல் படை மற்றும் வர்த்தக கடற் பாதைகளின் தேவைகளே எம்மை இதில் சிக்க வைத்துள்ளன.

ஒரு குர்து ஊடகவியலாளருக்கும் பேராசிரியர் அன்டி ஹிகின்பொத்தமுக்கும் இடையே நடந்த உரையாடிலின் சிறு பகுதியை கீழே பாருங்கள்.

கேள்வி: ஐநா என்பது நாடுகளின் அமைப்பு என்பதால் அது எடுக்கும் முடிவுகள் ஐநாவில் உள்ள வல்லரசுகளின் நலன்களுக்கு எதிராக ஒருபோதும் இருக்காது என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறோம். ….

இப்போது பேராசிரியர் குறுக்கிட்டு கேள்வியை திருத்துகிறார்.
“நீங்கள் சொன்னது சரி. இந்த அரசுகளின் கூட்டமைப்பில் நாடு இல்லாத தேசங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது எப்போதும் நடந்து வருவதுதான். அப்படித்தான் அது இருக்கும். ஆனால் உலகில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இதற்கு மேலும் ஒரு சிக்கல் உள்ளது. துரதிஷ்டவசமாக துருக்கி மக்களின் நிலம் மத்திய கிழக்கில் இருக்கிறது. பாலஸ்தீன மக்களும் இதே காரணத்தில் துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். தமிழர்களும் அதே போலத்தான். இவர்கள் எல்லோருமே ஏகாதிபத்திய சக்திகளின் தேவைகளில் அகப்பட்டு திணறுகிறார்கள் ……”

பலஸ்தீனர்களைப் போலவும் குர்துக்களைப் போலவும் நாமும் வல்லரசுகளின் தேவைகள் என்ற வலையில் சிக்குண்டு இருந்தால், இதிலிருந்து விடுபட இவர்களுக்கு வழி உண்டா? பாலஸ்தீனர்களுக்கு நடந்ததை நடந்துகொண்டிருப்பதை பார்க்கும்போது ஏனைய உலக அரசுகளின் ஆதரவு இருந்தாலும் கூட இவ்வாறு வல்லரசுகளின் தேவைகளில் சிக்குண்டு இருக்கும் தேசிய இனங்களுக்கு விடிவு வராது என்றே தோன்றகிறது அல்லவா? முக்கியமாக நவதாராளவாதம் கோலச்சும் உலகில் இதுதான் நிலைமை. ஒருவிதத்தில் பார்த்தால் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு புரிந்துணர்வு வந்தாலும் கூட வல்லரசுகளின் தேவைகள் இத்தீவை சும்மா விடப்போவதில்லை. ஏதாவது முரண்களை தோற்றுவித்து அதனூடாக தங்கள் ஆதிக்கத்தை இத்தீவில் நிலைநாட்டவே முயற்சிப்பார்கள் என்றுதான் தோன்றகிறது. இதிலும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் தமிழர்களாகத்தான் இருப்பார்கள்.

நவதாராளவாத உலக ஒழுங்கும், அதையொட்டிய வல்லரசுகள் ஆதிக்கம் செலுத்தும் பூகோள அரசியலும், அதனோடு இசைவாக இயங்கும் ஐநாவும் உள்ளவரை ஈழத்தமிழருக்கான தீர்வு எனக்கூறப்படுவது இருவகையாக அமையலாம் போல் தென்படுகிறது. ஒன்று, வேறுபட்ட வடிவங்களில் தமிழின அழிப்பு தொடர அனுமதிப்பது இரண்டு, இஸ்ரேல் போன்ற ஒரு தீர்வை ஏற்படுத்தி, ஆதிக்க சக்திகளுக்காக கொடுஞ் செயல்கள் புரியும் ஒரு இயந்திரமாக தமிழர்களை பயன்படுத்துவது. இவ்விரண்டு முடிவுகளில் மிகவும் வேண்டாத வழி எதுவென்று கேட்டால் தமிழர்கள் என்ன சொல்வார்கள்? முதலாவது வழியா அல்லது இரண்டாவது வழியா? எனக்கு இரண்டாவது வழிதான் மிகவும் வேண்டத்தகாத வழியாக தோன்றுகிறது. ஆனால் தமிழர்கள் பலர் இரண்டாவது வழியில் செல்கிறார்கள் போல உங்களுக்கு தெரிகிறதா? இவ்விரண்டையும் விட நாம் ஏக்கத்துடன் எதிர்பார்க்கும் மூன்றாவது இடமொன்றும் உண்டு.
அதுதான் ஒரு புதிய நீதியான உலக ஒழுங்கில் எமக்கான தீர்வு.

இதே வெளியீட்டில் வரும்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )