
உலக உழைப்போர் நாள்
-இன்பா
மே 1 உலக உழைப்பாளர் நாள். மேலாதிக்க, முதலாளி வர்க்கத்தின் நலன்களில் மட்டுமே குறியாகவிருந்த தலைமைகளிடமிருந்து தமக்குரிய அடிப்படை உரிமைகளை வெற்றிகொண்டதன் குறியீடாக உழைக்கும் வர்க்கத்தினால் கொண்டாடப்படும் ஒரு நாள். உலகமெங்கும், உழைத்துச் சோர்ந்து போனவர்களின் எழுச்சிப் பெருநாள் இந்நாள். இந்நாளை 66 நாடுகள் உத்தியோக பூர்வமாக விடுமுறை நாளாக அங்கீகரித்திருக்கிறார்கள்.
மே 1 உழைப்பாளர் நாளாகி இன்றுடன் 127 ஆண்டுகளாகின்றன. பன்னெடுங் காலமாக, உழைப்போர் தமதுரிமைக்காக குரல் எழுப்பியிருந்த போதிலும் அவை எவையும் செவிசாய்க்கப்பட்டதுமில்லை, பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதுமில்லை. மே 1, 1889 அன்று 13,000 இற்கும் மேற்பட்ட பணியிடங்களில் இருந்து வெளியேறி, வேலைமறிப்புசெய்து, அமெரிக்காவின் சிக்காகோ நகர வீதிகளில் இறங்கிப் போராடிய 40,000 இற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் கூட்டம் உழைப்பாளிகளின் பலம் என்ன என்பதை உலகிற்கு காட்டிய ஆரம்ப நாளாகியது. மறுநாள் அந்தக் கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகி 100,000 இனைத் தாண்டியது. “நாள் முழுவதும் வேலை செய்யும் நிலையை மாற்று, 8 மணிநேர வேலை கொடு” என்ற கோசம் முதலாளித்துவ ஆதிக்க சக்திகளை நடுநடுங்கச் செய்தது. போராட்டத்தை நசுக்க கங்கணம் கட்டினார்கள் அவர்கள். பிறிதொருநாளில், Hay Market சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதி ஊர்வலத்தில் முகம் தெரியாத ஒருவன் வீசிய குண்டு 7 காவல்துறையினரதும் 8 பொதுமக்களினதும் உயிரைக் குடிக்க கட்டுக்கடங்கா கலவரம் வெடித்தது.
அப்பாவிகளான 8 பேர் கைது செய்யப்பட்டனர். 7 பேருக்கு மரணதண்டனையும் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையுமாக ஒருதலைப் பட்சமாக நீதிபதி சொன்ன தீர்ப்பு உலகம் முழுவதிலுமிருந்த உழைப்பாளிகளிடையே எதிர்ப்பலைகளை ஏற்படுத்தின. உலகெங்கும் பரவலாக தொழிலாளர் போராட்டங்கள் அரங்கேறின.8 மணிநேர கோரிக்கையில் உழைப்போர் வெற்றி கண்டனர்.1894ல் மே தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. இது வரலாறு.
கடந்த நூற்றாண்டில் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது? தொழிலாளர்களிற்கு பதிலாக இயந்திரங்கள் அந்த வேலையைச் செய்யத் தொடங்கியிருக்கின்றன. இருப்பினும் ஃப்ரே மற்றும் ரஹ்பரி 2016 ஆய்வின்படி, சமநிலையில், தொழில் நுட்பம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. தொழில்நுட்ப முன்னேற்றம் வாழ்க்கைத்தரத்தை மாற்றியுள்ளது. ஆயுட்காலம் அதிகரித்துள்ளது.அடிப்படை சுகாதாரம், கல்வி பரவலாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான உழைப்பாளிகள் தங்கள் வருமானம் அதிகரித்திருப்பதை உணர்கிறார்கள். இவை அனைத்தும் உண்மைதான் என்றபோதிலும் வெளியே பிரதிபலிக்கின்ற இந்த வளர்ச்சி போன்ற தோற்றப்பாடு முதலாளித்துவ வர்க்கத்தைத் திருப்திப் படுத்துவதாகவே உள்ளது.
முதலாளி வர்க்கம் அதிதிறன் வாய்ந்த தொழில்நுட்ப செயற்பாடுகளை உள்வாங்கி, பாரிய சந்தைப்படுத்தல்களை மேற்கொண்டு இலாபங்களைக் குவித்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். அந்த வாழ்க்கை தொடர வேண்டுமானால், மேலும் மேலும் அதிக இலாபம் குவிக்க வேண்டுமானால், உழைப்பாளிகள் அதற்கு ஈடுகொடுக்கும் உடல்நிலையில் இருக்க வேண்டியது அவசியம் என்ற எண்ணப்பாட்டின் வெளிப்பாடுதான் உழைப்பாளிகள் வாழ்வில் ஒரு சிறிய ஏற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதலாளிகளினதும் நாட்டினதும் பொருளாதார நிலையை உச்சத்திற்கு கொண்டுபோக இரவும் பகலும் மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்துபோகும் இந்த தொழிலாளிகள் வாழ்வில் மகிழ்ச்சியுண்டா? ஏதோவொரு காரணத்திற்காக கவலைப்படாத நாட்கள் புலர்ந்ததுண்டா? உழைப்பு உயர்ந்து வருமானம் பெருகும்போது அதை உயர்த்தியோர் வாழ்வும் வளம்பெறும் என்று அவர்கள் மனங்களில் விதைக்கப்பட்ட முதலாளித்துவ சிந்தனை கானல்நீரை துரத்துவதிலேயே இவர்கள் வாழ்வு முடிந்து விடுகிறது.
அண்மைக்காலங்களில், ரோபோவால் ( Robot ) தூண்டப்பட்ட வேலையிழப்பு தொடர்பான கவலைகள் இல்லையென்பதை மறுக்க முடியாது. தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு இசைவாக, குறைந்த திறன், நடுத்தர திறன் மற்றும் உயர் திறன் வேலைகளுக்கு இசைவாக உழைப்போர் தம்மை மாற்றியமைத்து தமக்கும் முதலாளிகளுக்குமிடையில் சமநிலையைப் பேண முயற்சிக்கிறார்கள். ஆனாலும் அண்மைக்காலத்திய இயங்குதள சந்தைகளின் எழுச்சி, மக்கள் பணிபுரியும் முறையையும் அவர்கள் பணிபுரியும் விதிமுறைகளையும் மாற்றுகிறது. இது முறையான மற்றும் முறைசாரா வேலைகளுக்கிடையிலுள்ள பழுவை அதிகரிக்கிறது.ஏனெனில், உழைப்போர் பொதுவாக்குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட வேலையில் உள்ளனர். பெரும்பாலான உழைப்போர் சட்டங்கள் தெளிவாகவும் இல்லை, சரியாக நடைமுறைப்படுத்தப் படுவதும் இல்லை.
பணியாளர்களுக்கான முதலாளிகளின் பொறுப்புகள் பணியாளர் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காது முதலாளி நலன் சார்ந்த அணுகலாகவே உள்ளது. எல்லோருக்கும் ஓய்வூதியம் என்ற நிலை இல்லை, சுகாதாரம் அல்லது வேலையின்மை காப்பீட்டுத் திட்டங்கள் இல்லை, நீண்டகால, ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வோருக்கு தொழிலாளர்களுக்கான பாதுகாப்புகள் எதுவுமில்லை.அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடும் எமது தாயகம் போன்ற நாடுகளிலும், தன்மக்களின் உழைப்பைச் சுரண்டி முதலாளிகளின் நலன்களை மட்டுமே பேணும் பல நாடுகளிலும் சட்டம் என்பதே கேலிக்கூத்தாயுள்ளது. ஊழலும் அடாவடிகளும் வேரோடியுள்ள இடத்தில் சட்டம், ஒழுங்கு என்பதெல்லாம் வெறும் சம்பிரதாயம்தான். உலக சனத்தொகையில் 51% ஆண்களும் 49% பெண்களும் இருப்பதாக புள்ளிவிபரம் ஒன்று குறிப்பிடுகிறது. எனினும் தொழில் அடிப்படையில் பார்க்கும்போது இந்த விகிதாசாரத்திற்கிடையிலான இடைவெளி குறிப்பிடத்தக்கதாகவுள்ளது.
எமது தாயகத்தைப் பொறுத்தவரை, இனஅழிப்பு நடவடிக்கைகள், அதனால் விளைந்த அங்கவீனங்கள், இடப்பெயர்வுகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், பெண்கள் மீதான திட்டமிட்ட வன்முறை மற்றும் உரிமை மீறல் என்பனவும் அதைத் தொடர்ந்த தொடர் அவலங்களும் சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களும் பெண்தலைமைத்துவ குடும்பங்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்துச் செல்கிறது. அதேசமயம் கல்வித்தரம் குறைவடைந்து செல்கிறது. முன்னேறிச் செல்லும் உலக தொழில்மயமாக்கலுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் முகம் கொடுத்து எமது தாயகத்தை வளர்த்தெடுக்க நாங்கள் ஒருமித்து கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. ஒன்றிணைவோம். எங்கள் தாயகத்தையும் அடுத்த தலைமுறையையும் கட்டமைப்போம்.