
சொந்தமண்
-இராஜநாயகன் -
“கந்த….ஆ…ஆ..அ ..அ”
முருகேசரின் இந்த அழைப்பு அந்தக் கந்தக் கடவுளுக்குக் கேட்டதோ
என்னவோ, அந்த பாரிய வேப்ப மரத்தின் கீழ், பாத்தியிலிருந்து பிடுங்கி நாற்புறமும் எறிந்துவிட்ட பனங்கிழங்குகள் போல் படுத்திருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்குக் கேட்டது. அவர்களின் தூக்கமும்
சற்றுக் கலைந்தது.
முருகேசர் எழுந்து நின்றார். ஏதோ ஓரு திசை நோக்கிக் கை கூப்பி மீண்டும் “கந்தா ,கந்தா ஆஆ”
என்றழைத்தார். தளர்ந்திருந்த நாலுமுழத்தைச் சீராக உடுத்தார். நலமுண்டுத் துண்டை உதறி தோளில் போட்டார். குனிந்து சிறு
துணிப்பை ஒன்றை எடுத்தார். புறப்பட்டு விட்டார்.
தூரத்தில் சேவல் ஒன்றின் ‘கொக்கரக்கோ’ கேட்டது.
நேரம் அதிகாலை நாலரைமணியாக இருக்கும். இயல்பு நிலை
குறையாமலிருந்தால், நல்லூர் கந்தசாமி கோயில் ஆயத்தமணி நாதம் முருகேசரின் கோண்டாவில் விவசாயிகளைத் துயிலெழுப்பி அவரவர்கள் தோட்ட நிலங்களுக்கு அனுப்பியிருக்கும். அவர்களுடன் முருகேசரும்
நார்க்கடகத்தில் இலைச்சருகுகளைத் தலையில் தாங்கி,தோளில் மண்வெட்டியுடன் தன் நிலத்தை நோக்கி சென்றிருப்பார்.
இன்று…..?
‘எங்கு செல்கிறோம்’ என்ற இலக்கின்றி, ‘என்ன செய்யப் போகிறோம்’ என்ற விடை கிடைக்காத வினாவைச் சுமந்து கொண்டு அலை அலையாக வந்த பல நூறாயிரம் மக்கள் வெள்ளத்தில் ஒரு துளி
முருகேசர். அத் துளியோடு ஒட்டிக்கொண்ட மற்றிரு துளிகள் மனைவி மீனாட்சியும்,மகள் பூமணியும்.
மனிதத் திரட்சியை ஊடறுத்தோ அல்லது அதனுடன் அள்ளுண்டோ
செல்ல இயலாமல் வீதி ஓரத்தில் ஒதுக்கப்பட்ட சில நூறு மனிதருள்
இவர்களும் சேர்த்தி.
கைதடி வயோதிபர் இல்லத்துக்குச் சற்று அப்பால் வீதியை முகப்பாய்க் கொண்ட பெரிய வெறுங்காணியினுள்ளே கண்ட பாரிய வேம்பு
இவர்களுக்குத் தற்காலிக புகலிடந் தந்தது.
இரவு தங்கிச் செல்லலாம். குழந்தை குஞ்சுகளுடன் தாய்மார் பலர், வயோதிபம் வாட்டும் ஒரு சிலர், வெவ்வெறு நோய் நொடி
கண்டவர்கள், ஆணும், பெண்ணுமாய் இளசுகள் என்பவர்களோடு மூட்டை முடிச்சுகளும் அங்கு பரந்து கிடந்தன. ஆடுகள், குட்டிகள் அங்கும் மிங்கும்,
நாய்கள் சில. ஓடித் திரிந்தன பல சைக்கிள்கள்.
முருகேசரின் ‘கந்தா’ அழைப்பொலி கேட்டு மீனாட்சியும்,பூமணியும்
விழித்தெழுந்து அமர்ந்தார்கள். அவர் புறப்பட்டு விட்டார் என்பதைக் கண்டதுமே அவர்கள் சுறுசுறுப்பானார்கள். அவருடைய போக்கு அவர்களுக்குப் பழக்கமானது. அவர் எந்த நேரத்தில் என்ன செய்வார் என்று குறிப்பாலுணர்ந்து இவர்கள் நடந்து கொள்ள வேண்டும். நடந்து கொள்வார்கள். ‘ஏன்’ என்று கேட்க மாட்டார்கள். அவர் செய்வதெல்லாம் ‘சரி’ என்பது இவர்கள் தீர்மானம்.
தாமதமின்றி தமது சிறிய பைகள் இரண்டைத் தூக்கிக்யோராய்
முருகேசரைத் தொடர ஆயத்தமானார்கள்.
புறப்பட்ட முருகேசருக்கும் வீதிக்குமிடையே முப்பது மீற்றர் தூரம். வழியில் கால்மாடு தலைமாடு பேதமின்றி ஆண், பெண்.
சிறுவர் சிறுமியர், பரந்து படுத்திருந்தார்கள்.
மிகச் சாவதனமாக காற் சுவடுகளைநீட்டியும், மக்களைத் தாண்டி அவர் வீதிக்கு சென்று மிதக்க முடிந்தது. மீனாட்சியும் மகளும் சிரமங்களினூடாக ஒருவழியாக வீதிக்கு வந்து விட்டார்கள்.
வீதியில் மக்கள் நடமாட்டந் தொடங்கி விட்டது. மங்கிய ஒளியிலும் பூமணி வீதியின் இருபுறமும் கூர்ந்துநோக்கினாள். அசாதாரண உயரம் கொண்ட முருகேசர் எந்தக் கூட்டத்தில் நின்றாலும் இலகுவில் கண்டு கொள்ளலாம். கைதடிச்சந்தியை நோக்கிச் செல்வோரிடையே
அவரில்லை.எதிர்புறம் நாவற்குழிக்கு போகும் திசையில் முருகேசரின்
வேகநடை தெரிகிறது.
நேற்று வந்த பாதையில் திரும்பிச் செல்கிறார்.
‘ஏன்? வீடு நோக்கியா?’
ஒட்டமும் நடையுமாய் இருவரும் முருகேசருக்குப் பின்னால்
பத்து மீற்றர் தூரத்துக்கு வந்து விட்டார்கள். நாவற்குழி சந்தி எதிரே
ஓரு காலத்தில் புகைவண்டி நிலையமாகவிருந்த இடத்தில், மேடை அடங்க மக்கள் படுத்துக் கிடந்தார்கள். முருகேசர் நின்றார். துணிப்பையைத் தோளில் கொழுவினார். கைகளை உச்சியில் குவித்து நான்கு திசையும் சுற்றி சுற்றி வணங்கினார்.
‘கந்தா’ என இரங்கி அழுவாராய் அவனிடம் விடை பெற்றார். பின்னர்
கேரதீவுப் பாதையில் நடக்கத் தொடங்கினார்.
வைகறை ஐந்து மணி இருக்கும். நாவற்குழி குடிமனையுடாகச் செல்லும் வீதியின் இரு மருங்கும் சாக்குகள் விரித்து சில்லறைக்கடைகள் முளைத்துக் கொண்டிருந்தன. பாதையின் ஓரத்திலிருந்த வெறும் காணிகளுள் மரங்களின் கீழும்,வான்முகட்டின் கீழும் இடம்பெயர்ந்தோர் பலர் நித்திரையிலிருந்தார்கள்.
முருகேசரின் இயல்பு நடை வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவர் மனைவியும் மகளும் நாயோட்டத்தில் சென்றார்கள்.
மறவன் புலவு…
இரு புறமும் வயல்கள், நெற் பயிர் சோர்ந்து கிடக்கிறது. ஒரு வயலோரத்தில் சிறு கொட்டில் கோயில். வயல் காக்குந் தெய்வக் கோயில். காலைப் பூசைக்கு ஆயத்தங்கள் நடை பெறுகின்றன.
முருகேசர் நின்றார் கோயிலின் வடகிழக்கு மூலையில் வயலோரத்தில் ஒரு கிணறு. கை வாளியால் நீர் மொண்டு கை கால் முகம் கழுவியும் நீர் குடித்தும் சிலர் மீண்டனர்.
கிணற்றடியில் எவருமில்லாத போது முருகேசர் அங்கு போனார். நலமுண்டுத்துண்டையும், துணிப்பையையும் ஒரு கல்லின் மேல் வைத்தார். நாலுமுழத்தோடு ஒரு காகக் குளிப்பு குளித்தார்.
ஈரவேட்டியுடலுடன் கோவில் வாயிலுக்கு வந்தார்
இச்சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி மீனாட்சியும் மகளும்
கிணற்றடிக்குப் போய் கை,கால்,முகம்கழுவி, தாக சாந்தி செய்து கோயிலுக்கு வந்தார்கள்.
‘அரோகரா’ ஒலி மத்தியில்,சுவாமிக்குப் பஞ்சாலாத்தி காட்டிக் கொண்டிருந்தார் பூசகர். இவர்களும் தரிசித்து வணங்கினார்கள்.வீபூதிப் பிரசாதம் பெற்றார்கள்.
பின்னர் அங்கு நின்ற பத்துப் பன்னிரண்டு பேரிடையே
முருகேசரைத் தேடினார்கள். அங்கு அவரில்லை. வீதியை திரும்பி பார்த்தார்கள். நேர் வீதி. பார்வை செல்லும் தூரம் வரை இரு புறமும் பார்த்தார்கள்.
அவரைக் காணவில்லை.
ஈர வேட்டி நல்ல உயரம். சிறிய துணிப்பை அடையாளங் கூறி
விசாரித்தார்கள்.
சற்று முன்னர் அவர் கேரதீவுப் பக்கஞ் சென்று விட்டாராம். இவர்கள் வீதியில் இறங்கி நடக்க தொடங்கினார்கள். வீதியிலெங்கும் அந்த நெடிய உருவத்தைக் காணவில்லை.
இவர்களுக்குப் பின்னால் சிறுவனொருவன் ஓடி வந்தான். அவர்களிடம் ஒரு துணிப்பையைக் கொடுத்தான்.முருகேசரின் பை.
“இது ஆர் தந்தது?”
“அந்த ஐயா உங்களிட்ட கொடுக்கட்டாம்”
“அந்த ஐயா எங்கை?”
“குடுக்கச் சொல்லிட்டுப் போட்டுப் போட்டார்.”
சிறுவன் கேரதீவுச் சந்திப் பக்கம் கை நீட்டிக் காட்டினான்.
பூமணி பையினுள்ளே பார்த்தாள். ஓரு கடதாசிப் பை உள்ளே சில பணத்தாள்கள் எண்ணினாள். சிறிய, பெரிய தாள்களில் நாலாயிரத்தறுநூறு ரூபா.
“அம்மா இதுக்கை காசிருக்கு”
அம்மாவுக்கு இது கேட்கவில்லை. கணவனைக் காணாத, பறிகொடுத்த தமிழச்சியாய் அவள் நினைவிழந்தாள். நிலத்தில் சரிந்து விழவிருந்த தாயை மகள் அணைத்தாள். நிலத்தில் அமர்ந்து,தாயின் தலையைத் தன் மடியில் தாங்கினாள்.
மீனாட்சிக்கு வியர்த்துக் கொட்டியது. குளிர்ந்த இந்த காலை வேளையில் இப்படி ஒரு வியர்வையா? பசியா?
துணிப்பையால் தாயின் முகத்தைத் துடைத்தாள்.
துடைத்தலைத் தொடர்ந்த போது பூமணிக்கு அழுகை வந்து விட்டது.
பரம்பரைபரம்பரையாக சீவிய காலம் முழுவதும் சிறுக சிறுக சேர்த்த உடமைகளை தற்காலிகமாகவேனும் கைவிட்டு, எங்கு? ஏன்?, என்ன செய்ய? எனப் புரியாமல் ஓரொரு துளியாகச் சென்று கொண்டிருந்த மனிதப்பேரவையில் எவரும் இவர்களைத் திரும்பியும் நோக்கவில்லை.
பேரவை நகரத் தொடங்கி விட்டது. வீதி நிறைந்து மக்கள் கிழக்குத் திசையில் நகர்கிறார்கள். வெயிலும் ஏறத் தொடங்கி விட்டது.
தங்கி ஆற நிழலில்லை. இப்படியே இருந்தால்……?
மீனாட்சி சற்றுத் தேறி விட்டாள்.கண்கள் திறக்க வெருட்சி தெரிந்தது. அரை மணிநேர மயக்கம் தீர்ந்து மகளின் மடியிலிருந்து எழுந்தாள்.
“அப்பா வந்திட்டாரா?”
பூமணி பதில் தரவில்லை.
“எழும்பு போய் தேடுவம்”
நடக்கத் தொடங்கினார்கள்.
கணவனைக் காணாத வெப்பியாரம் உள்ளே. வெளியே வெயில்.
ஒரு மணி நேர நகர்வின் பின் கேரதீவுச் சந்திக்கு வந்து சேர்ந்தார்கள். மர நிழலின் அரவணைப்பில் பலர் ஆறிக் கொண்டிருந்தார்கள். இவர்களும் அங்கு ஒதுங்கினார்கள்.
நகர்வதையே நோக்காக,வெயிலையும்,களைப்பையும் பொருள் செய்யாது மக்கள் சாவகச்சேரி நோக்கி செல்கிறார்கள். சிறுவர்,
சிறுமியர் வாடிய கீரைத்தண்டுகளாய் பெற்றோரின் பின்னால் ஓட்டமும் நடையுமாய் செல்கிறார்கள். பூமணியும்,தாயும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். வழியெல்லாம் திரள் திரளாக மக்கள். இடைக்கிடையே சில வாகனங்ஙளுக்கு இடம் விட்டு,வீதி ஓரத்தில் நிற்கும் நிலை.
சாவகச்சேரி எட்டாத தூரத்தில் இருப்பதாக இவர்களுக்குப் பட்டது.
அள்ளுண்டு சென்றார்கள். சாவகச்சேரிச் சந்தியை கண்ட போது முற்பகல்
பதினொன்றரை மணிசந்தியில் விவரிக்க முடியாத நெரிசல். கூடு முழுவதையும் மொய்த்துப் புரளும் தேனீக்களாய் மக்கள் திரள்..கேரதீவுப் பாதைத் திரளும் பிரதான வீதித் திரளும் அங்கு சங்கமித்துப் பெரும் திரளாய்ப்பரிமாணங் கொண்டது. இதை ஊடறுத்துச் செல்வது முயற் கொம்பு. போதாதற்குச் சில வாகனங்களும் நெரிசலைப் பிரமாண்டமாக்கிக் களேபரம் ஏற்படுத்தின.
. மீனாட்சிக்கும், பூமணிக்கும் வாழ்வே வெறுத்த நிலை. இந்த நிலை இன்னும் எத்தனை ஆயிரம் பேருக்கு ஏற்பட்டதோ?
நகர்வுக்காய் மேற்கொண்டபல்லாயிரம் பகீரதப் பிரயத்தனங்கள்
ஒன்றுடன் ஒன்று மோதின. பரிதாபக்குரல்களும்,அவல ஒலிகளும், குழந்தைகளின் அழுகுரல்களும் அந்தச் சதுக்கத்தையே உருக வைத்தன.
அலையால் எற்றுண்ட துரும்புகளாய் அள்ளுண்டு இந்துக் கல்லூரிக்குள் இருவரும் ஒதுக்கப்பட்ட போது நேரம் ஐந்து மணிக்கு மேலிருக்கும். பசியையும் தாகத்தையும் விஞ்சிய களைப்பு.
பல நூறு மக்கள் நின்றும்,நடந்தும், இருந்தும்,கிடந்தும்
உள்ளிடத்தை நிரப்பி இருந்தார்கள். இந்த இருவருக்கும் குந்தி இருக்க ஓரிடம் கிடைத்து விட்டது.
‘கந்தா,முருகா’
மீனாட்சி தண்ணீர் மட்டும் குடித்தாள்.பக்கத்தில் இருந்த சிறுமியொருத்தியுடன் பூமணி பலகாரத்தைப் பகிர்ந்து உண்டாள்.
நான்கு நாள். இரவும் பகலும் வருவோரும், தங்குவோரும், வெளியேறுவோரும், ‘அடுத்து என்ன? ‘ என்ற பிரச்சினைக்குத் தீர்வு காண இயலாத மக்களின்
அவலங்களுக்குச் சான்று ஆயினர்.
முருகேசரோ அவரின் சுவடோ காணப்படவில்லை. காலை நேரங்களில் கஞ்சி, பிற்பகல் சிறிய சோற்றுப் பொட்டலம். எவரோ புண்ணியாத்மா அரிசியும் பருப்புந் தர, அங்கு ஒதுங்கி இருந்த
பெண்கள் சமைத்துப் பகிர்ந்து வழங்கினார்கள்.
ஐந்தாம் நாள் காலை முருகேசர் அங்கு வந்தார். நாலு முழம் மட்டும். நலமுண்டைக் காணவில்லை. அவரது திருநீற்றுப்பட்டுப்பை அரையில் தொங்கிக் கொண்டிருந்தது.
நாலு புறமும் நோட்டம் விட்டார். பூமணி கண்டு விட்டாள்.
“அப்பா” என்ற கதறலுடன் அவரிடம் ஓடினாள். அவளை அணைத்தபடி, அவர் மீனாட்சி அருகில் வந்து ஒதுங்கி அமர்ந்தார்.
‘போன உயிர் மீண்ட’ உணர்வில் மீனாட்சி மிதந்தாள்.
யுவதிகள் சிலர் உணவுப் பண்டங்களை அங்கும் இங்கும் திரிந்து கொடுத்தார்கள். குறிப்பிட்ட சிலருக்கு, அவர்கள் அருகில் சென்று மருந்து வில்லைகளும் தந்தார்கள்.
அவர்கள் அணிந்திருந்த காற்சட்டை சேட்டும்,அவர்களின் சுறுசுறுப்பும் முருகேசர் கவனத்தை ஈர்த்தன. யுவதிகள் காட்டிய ஆதரவும்,அரவணைப்பும் தனக்கும் கிடைத்தாற்போல முருகேசர் ஆயாசந் தீர்ந்தார்.
“அப்பா! அம்மாவைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கோ” என்ற
பூமணி முருகேசரின் மடியில் அவர் துணிப்பையை வைத்தாள். அதனுள் அவள் எடுத்துச் செலவிட்ட தொகை போக மிகுதிப் பணம் இருந்தது.
“ஒருக்காப் போட்டு வாறன்.”
பெற்றோரை இரண்டு மூன்று தடவைகள் திரும்பிப் பார்த்தவள்
சிரித்துக்கொண்டே நடைவேகத்தை அதிகரித்தாள்.
உள்ளம் பூரித்தவளாய் மீனாட்சி எழுந்தாள்.
“நான் ஒருக்கா முகங் கழுவிப்போட்டு வாறன்.
இருந்து கொள்ளுங்கோ.”
பத்து நிமிஷங் கழித்து திரும்பி வந்தாள்.
முகத்தைத் துடைத்துக் கொண்டே
“உங்கடை வீபூதியிலை கொஞ்சம் தாருங்கோ” என்றாள்.
“என்னட்டை வீபூதி இல்லை மீனாட்சி”
“உங்கை பை வைச்சிருக்கிறியள், கொஞ்சம் எண்டாலும் கிடக்குந் தானே”
முருகேசர் சிரித்தார். வழமைக்கு மாறாகக் கதைக்கத் தொடங்கினார்.
“இரு… பக்கத்திலை இரு. இதுக்குள்ளை என்ன
இருக்கெண்டு பார்!”
பையை எடுத்துச் சுருக்கைத் தளர்த்திக் காட்டினார்.
உள்ளே விபூதி இல்லைத்தான்.. செந்நிறத்தில் ஏதோ இருந்தது.
“என்னப்பா இது?”
“பொறு சொல்லிறன். இந்த பயணத்திலை நான் தற்செலாக் கண்ணை மூடிட்டா? எனக்கு போடிற வாய்க்கரிசி இதுதான். இது எங்க வீட்டு
தோட்டத்துமண் செம்மண்…சொந்தமண்
மீனாட்சி விம்மி விம்மி அழத் தொடங்கி விட்டாள்.
“அழாதை மீனாச்சி! மனிசன் காரியம் நிச்சயமில்லை. எதுக்கும்
தயாராயிருக்கவேணுமெல்லே”
மீனாட்சியின் அழுகை மேலும் வலுத்தது. அழுகையும் விம்மலும் ஓய நீண்ட நேரம் எடுத்தது. பின்னர் மீனாட்சியும் சிரித்தாள்.
“நான் முந்தீட்டா….,உதிலை அரைவாசி எனக்கு” என்றாள்.
முருகேசரின் முகத்தில் புன்னகை தோன்ற முயன்று வேண்டாம் என மறைந்து விட்டது
இந்த சிறிய சம்பாஷணையின் எதிர்விளைவு அத் தம்பதியினர் மேல் மௌனமாய் கழிந்தது.
மதியங் கடந்து விட்டது. யுவதிகள் இருவர் வந்து
மீனாட்சியைப் பார்த்துவிட்டு, மூன்று உணவுப் பொட்டலங்களைத் தந்து
சென்றார்கள்.
‘ஓ பூமணியை இன்னுங் காணவில்லை. அவள் போய் எவ்வளவு நேரம்
ஐந்து மணித்தியாலங்களுக்கு மேல்’
மீனாட்சியை கலக்கம் பிடித்துக் கொண்டது. உணவுப் பொட்டலங்கள்
பிரிக்கப் படாமலே இருந்தது.
முருகேசர் நிஷ்டையில் இருப்பவர் போல மௌனித்திருந்தார். மீனாட்சி இடைக்கிடையே எழுந்து போய் வீதியின் இருபுறமும் பார்த்து ஏமாற்றமே உருவாகத் திரும்பி வந்தாள். மாலைப் பொழுது. மீனாட்சி பொறுமையின் எல்லையில் நின்றாள்.
“ஒருக்கா போய்த் தேடிப் பாருங்கோவன்”
முருகேசர் சிரித்தார்.
“அவள் எங்கடை மகள். அவள் பிழை செய்வாளே? எங்கை போனாள்? ஏன் திரும்பி வரேல்லை என்று கூட யோசிக்காதை”
தன் மடியில் செருகியிருந்த அந்தப் பையை எடுத்து மீனாட்சியிடம் கொடுத்தார்.
“கவனமாக வைச்சிரு”
(நன்றி - ஞாயிறு தினக்குரல்)