
பிரதமரா?, எதிர்க் கட்சித் தலைவரா?; மகிந்த குறித்து கட்சிக்குள் கருத்து மோதல்
மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஒரு அணியும் அவரை எதிர்க்கட்சித் தலைவராக்க வேண்டுமென்று இன்னுமொரு அணியும் முன்வைத்துள்ள கருத்துக்களால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போதைய நிலைமையில் மகிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக பதவியேற்று எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கட்சிக்குள் குழுவொன்று யோசனையை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை மகிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து விடைபெறுவாராக இருந்தால் அவர் கௌரவமான முறையில் செல்ல வேண்டும் என்றும், இதனால் அவர் பிரதமராக பதவியேற்பதே பொருத்தமானது என்றும் அந்த குழுவினர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தற்போதைய நிலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள திட்டமிட்டுள்ளதால், தாம் எதிர்க்கட்சி பக்கத்திற்கு செல்வதே பொருத்தமாகும் என்றும், இதன்போது மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்தக் கட்சியில் இன்னுமொரு குழு யோசனையை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கருத்துக்களால் பொதுஜன பெரமுனவுக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மகிந்த ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன், இந்த விடயத்தால் ராஜபக்ஷ குடும்பத்திற்குள்ளும் கருத்து மோதல்கள் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

