
பணத்துக்கு சர்வதேச விசாரணை இனத்துக்கு உள்ளூர் விசாரணை இனவாத முகத்தை காட்டும் அரசு – சுமந்திரன்
2009 ஆம் ஆண்டு மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு சர்வதேச பொறிமுறையிலான விசாரணையை மறுக்கும் அரசு, எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து விவகாரத்தில் நஷ்டஈடு பெற்றுக்கொள்ள பிறிதொரு நாட்டின் நீதிமன்றத்தை நாடியுள்ளது.இது அரசின் இனவாத முகத்தை முழு உலகுக்கும் காண்பித்துள்ளது.எமக்கு சர்வதேச நீதியை மறுத்த அரசு பணத்துக்காக பிறிதொரு நாட்டு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை 2 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
2009 ஆம் ஆண்டு மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்க வில்லை.அவர்கள் இப்போதும் சர்வதேச நீதி விசாரணையை எதிர் பார்த்துள்ளனர்.
அரசாங்கத்தின் இன அழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் சர்வதேச பொறிமுறையிலான விசாரணையை தொடர்ந்து வலியுறுத்தும் போது.சர்வதேச பொறிமுறை நாட்டின் இறைமைக்கு முரணானது,உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு காணலாம் என குறிப்பிட்டு அரசு இழுத்தடிப்புக்களை மாத்திரம் இதுவரை காலமும் முன்னெடுத்தது.
2009 ஆம் ஆண்டு மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு சர்வதேச பொறிமுறையிலான விசாரணையை மறுக்கும் அரசு எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து விவகாரத்தில் நஷ்டஈடு பெற்றுக்கொள்ள பிறிதொரு நாட்டின் நீதிமன்றத்தை நாடியுள்ளது.இந்த செயற்பாடு அரசாங்கத்தின் இனவாத முகத்தை முழு உலகுக்கும் காண்பித்துள்ளது.நாங்கள் சர்வதேச நீதிமன்றத்தை நாடியதை எதிர்த்த அரசு பணத்துக்காக பிறிதொரு நாட்டு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளது இவர்களின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சர்வதேச பொறிமுறையிலான விசாரணையை கோருகிறார்கள்.ஆகவே ஜனாதிபதியுடன் நாங்கள் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கான சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தவுள்ளோம் என்றார்.

