வெடுக்குநாறி மலை பூசகர் உட்பட இருவர் கைது

வெடுக்குநாறி மலை பூசகர் உட்பட இருவர் கைது

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிசாரால் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.

எனினும் இவர்கள் வவுனியா நீதிமன்றால் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

வெடுக்குநாறிமலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விக்கிரகங்கள் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஆலயத்தில் பூஜை நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்ததுடன் நேற்றையதினம் சங்காபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது.

இதில் மழையையும் பொருட்படுத்தாமல் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிலையில் விசாரணை ஒன்றிற்காக ஆலய நிர்வாகத்தினரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு நெடுங்கேணி பொலிசாரால் நேற்று முன் தினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஆலயத்தின் பூசகர் மற்றும் நிர்வாக உறுப்பினர் ஒருவர் உட்பட இருவர் நேற்று காலை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் அவர்களை கைதுசெய்து வவுனியா நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தினர். எனினும் இந்த வழக்கின் முறைப்பாட்டாளர்களாக ஆலய நிர்வாகமும் பூசகரும் இருப்பதனால் அதே வழக்கில் அவர்களை சந்தேக நபர்களாக பெயரிடுவது வழக்கிற்கு முரணாக அமையும் என்று சுட்டிக்காட்டிய நீதவான், வழக்கிலிருந்து அவர்களை விடுவித்தார்.

அத்துடன் ஆலயத்தில் கட்டுமானங்களையோ மாற்றங்களையோ ஏற்படுத்தக்கூடாது என்று தெரிவித்ததுடன், பூஜை வழிபாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதேவேளை இறை விக்கிரகங்களை உடைத்தவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறும் பொலிசாருக்கு பணிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஆலய நிர்வாகம் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி தி.திருவருள் தலைமையிலான வவுனியா சட்டத்தரணிகள் குழாம் முன்னிலையாகியிருந்தது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )