
காலிமுகத்திடல் போராட்டத்தை வன்முறையாக மாற்றியது யார்?
காலி முகத்திடல் ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக மாற்றியவர்கள் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உள்ளதால் அந்தப்போராட்டத்தைப்பற்றி அரச தரப்பினர் விமர்சிப்பது பயனற்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.யான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை 2 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதியாகவிருந்த கோத்தபாய ராஜபக்ஸவை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இடம்பெற்ற ஜனநாயக போராட்டம் மே 9 ஆம் திகதிக்கு பின்னர் தான் வன்முறையாக மாற்றமடைந்தது.
ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக யார் மாற்றியது என்பது தொடர்பில் ஆராய வேண்டும்.போராட்டத்தை ஆளும் தரப்பினர் அவரவர் எண்ணம் போல் விமர்சிக்கிறார்கள்.ஆனால் உண்மையை மறைத்து விடுகிறார்கள்.மே 9 காலை அலரி மாளிகையில் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக ஒன்றுகூடிய தரப்பினர் காலி முகத்திடலுக்கு சென்று அமைதிவழி போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
காலி முகத்திடல் போராட்டக்களத்தின் மீது அரசாங்கம் தாக்குதல் நடத்தினால் அரசாங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்போது டுவிட்டர் ஊடாக செய்தி வெளியிட்டார்.ஆனால் தாக்குதல் மேற்கொண்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
காலி முகத்திடல் ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக மாற்றியமைத்த தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது உள்ளார்கள்.என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள் என்றார்.

