
பசிலை பிரதமராக்க மொட்டு கட்சி தீவிரம்!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை மீண்டும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து அவரை பிரதமர் பதவிக்கு நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் 21 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கை பாராளுமன்ற உறுப்புரிமையை பெறுவதற்கு தகுதியற்றவராக இருக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை மீண்டும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பது மிக நீண்ட சுற்றாக அமைந்துள்ளது.
21 ஆம் திருத்தத்துக்கு மாற்றாக மீண்டுமொரு திருத்தம் நிறைவேற்றப்படும் பட்சத்திலேயே இதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன அல்லது தற்போதைய அமெரிக்க குடியுரிமையை பசில் ராஜபக்ஷ இரத்துச் செய்ய வேண்டும். இரண்டில் ஒன்று நிறைவேறுமாயின் நாட்டின் பிரதமராக பசில் ராஜபக்ஷவுக்கு வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு இடம் பெறும் பட்சத்தில் அவரை தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரொருவர் பதவி விலக வேண்டிய தேவையும் காணப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்துக்குப் பின்னர் நிதி அமைச்சு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பசில் ராஜபக்ஷவும் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்சவும் இராஜினாமா செய்திருந்தனர்.
மறுபுறம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்கான முயற்சியில் களமிறங்கியுள்ளனர். அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து செயற்படுவதற்கும் ஒரு குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

