
தேர்தலை நடத்தாவிடின் வேட்பு மனுக்களை ரத்துச் செய்யுங்கள்
அரசியலமைப்புக்கு அமைய உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும் அல்லது அந்த தேர்தலை போட்டியிட ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்ய வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் சுயாதீன எதிரணி எம்.பி.யுமான உதய கம்மன்பில வலியுறுத்தினார்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் எத்துல்கோட்டே அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு வலியுறுத்திய உதய கம்மன்பில எம்.பி மேலும் கூறுகையில்,
தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்கெடுப்புக்கு திகதி அறிவிப்பதும் பின்னர் நிதி நெருக்கடியால் தேர்தல் வாக்கெடுப்பை ஒத்திவைப்பதும் வழமையாகி விட்டது.தேர்தல்கள் ஆணைக்குழு,நிதியமைச்சு ஆகிய தரப்பினரது முரண்பாடான செயற்பாடுகளினால் வேட்பு மனுத்தாக்கல் செய்து விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் சட்டத்தின் 102 ஆவது உறுப்புரையில் ‘தேர்தல் ஒன்றுக்கு போட்டியிட தீர்மானிக்கும் அரச சேவையாளர் வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தல் பணிகள் நிறைவு பெறும் வரை சேவையில் ஈடுபட கூடாது’எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவது இழுபறி நிலையில் உள்ள பின்னணியில் விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தை மாத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தற்போதைய பொருளாதார பாதிப்பு,வாழ்க்கை செலவுக்கு மத்தியில் அடிப்படை சம்பளத்தை கொண்டு எவ்வாறு தேவைகளை நிறைவேற்றுவது?
எனவே தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.அரசியலமைப்புக்கு அமைய உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும் அல்லது உள்ளூராட்சி சபைகளுக்கு போட்டியிட ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்ய வேண்டும் என்றார்.

