இலங்கைக் குரங்குகளா?; மறுக்கின்றது சீனா

இலங்கைக் குரங்குகளா?; மறுக்கின்றது சீனா

இலங்கையிலிருந்து 100,000 குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான செய்திகளை மறுப்பதாகவும் எந்தவொரு தரப்பினராலும் இதுவரை அவ்வாறான கோரிக்கை விடுக்கப்படவில்லையெனவும் இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன தனியார் நிறுவனமொன்றுக்கு 100,000 குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளியான தவறான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே சீன தூதரகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பெய்ஜிங்கில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் எந்தவொரு தரப்பினரும் அத்தகைய கோரிக்கையை முன்வைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகம், காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை மேற்பார்வையிடும் மற்றும் நிர்வகிக்கும் முக்கிய அரச நிறுவனமாகும்.

சீனா தனது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை 1988 இல் ஏற்கனவே பல திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டது. சீன அரசாங்கம் எப்போதும் வனவிலங்கு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் சர்வதேச கடமைகளை தீவிரமாக நிறைவேற்றுகிறது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மற்றும் சட்ட அமுலாக்கத்தின் அடிப்படையில் சீனாவை உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக மாற்றுவதாகவும் இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 11ஆம் திகதி விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை விலங்குகளை சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 100,000 குரங்குகளை வழங்குவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இது தொடர்பான மேலதிக விடயங்களை ஆராய அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )