
யாழ்.-காரைக்கால் படகு சேவை; இந்தியாவின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள போதும் இந்திய அரசாங்கம் இன்னும் அத்திட்டத்துக்கு உரிய அனுமதி வழங்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு இலங்கை சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய அரசாங்க அமைப்புகளுடன் ஏற்கனவே கலந்துரையாடி படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகுகளை இயக்குவதற்கு நான்கு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குத் தேவையான அனுமதி இதுவரை இந்திய அதிகாரிகளால் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் பாண்டிச்சேரியின் காரைக்கால் துறைமுகத்திற்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், காங்கேசன்துறை துறைமுகமானது மே முதல் வாரத்தில் படகு சேவைக்கு தயாராகும். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான படகுச் சேவைகள் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக முன்னைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் படகு சேவை ஆரம்பமாகுமெனவும் ஒரு பயணிக்கு 100 கிலோ பொதியினை கொண்டு செல்லவும் ஒரு வழி பயணக் கட்டணமாக 50 டொலர் அறவிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, பாண்டிச்சேரிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான நான்கு மணி நேர பயணத்தில் ஒரு படகு 150 பயணிகளை ஏற்றிச் செல்லும். முதற்கட்டமாக பகல் நேர சேவைகளை மாத்திரம் முன்னெடுப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

