கிடுக்கிப்பிடிக்குள் இலங்கை

கிடுக்கிப்பிடிக்குள் இலங்கை

(பாரி)

ராஜபக்சேக்களின் குடும்பத்தின் பிடியில் அரச அதிகாரம் வந்ததிலிருந்து இலங்கையின் அந்நிய செலாவணி ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. அரச ஊழியர்களுக்கு மாதச் சம்பளப் பணம்கூடக் கொடுக்க முடியாத நிலையில் திணறுகிறது அரசு. ராஜபக்சேக்கள் தமது குடும்ப நலனுக்காக நாட்டினதும் மக்களினதும் இறைமையை அடகு வைத்து பலகாலமாகிவிட்டது. கடந்த மாதம் உர இறக்குமதியால் எழுந்த நெருக்கடி, அதன் பின்னான சீனாவின் கறுப்புப் பட்டியலில் ‘மக்கள் வங்கி’ என்பனவற்றின் பின்னால் இலங்கை வாழ் மக்களின் வாழ்வியலில் ஒரு பெரும் அச்சுறுத்தல் இருக்கிறது.

2010 இல், மக்களின் அச்சத்தையும், பல வெளிநாடுகளின் அதிருப்தியையும், புவிசார் அரசியலில் தமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவிருக்கும் என்ற இந்தியாவின் கண்டனத்தையும் மீறி, தனது சொந்த இடத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில், அம்பாந்தோட்டவில் ஆழ்கடல் துறைமுகத்தை அமைத்து அதனை விஸ்தீரணப் படுத்தினார் மகிந்த. இதற்கான பணத்தின் 85% த்தினை மகிழ்வுடன் சீனாவிடமிருந்து கடனாகப் பெற்றுக் கொண்டார். வளர்ந்துவரும் நாடுகளை கடன் பொறிக்குள் தள்ளி, தனது கால்களை ஆழப் பதிக்கும் சீனாவின் திட்டத்திற்கு இது மிகவும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதன்போதே கொழும்பு துறைமுக நகர் அமைக்கும் திட்டத்தையும் மகிந்தவின் தலையினுள் புகுத்தி, அதற்கான காரியத்திலும் இறங்கியது சீனா. ஆனால், மகிந்தவின் ஆட்சி கவிழ்ந்ததால் அந்த நேரத்தில் அந்த வேலை இடைநிறுத்தப் பட்டது.

ஆட்சிக்கு வந்த ‘நல்லாட்சி’யால் கடன் சுமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நாட்டின் பொருளாதாரத்தின் 50-60% கடனுக்கான வட்டிக்கு மட்டுமே போவதால், எதிர்ப்பையும் மீறி, அம்பாந்தோட்ட துறைமுகத்தையும் அதைச் சூழவுள்ள சுமார் 540 ஏக்கர் நிலத்தையும் சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு விட்டனர் அவர்கள். மீண்டும் மகிந்த குடும்பம் ஆட்சிக்கு வர, கொழும்புத் துறைமுக நகர் வேலைகள் மீண்டும் புத்துயிர்ப்பு அடைந்தன. பாராளுமன்றில், ‘கொழும்பு பொருளாதார ஆணைய மசோதா’ சட்டம் 149 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. துறைமுக நகர் கோலாகலமாகத் திறக்கப்பட்டு 99 வருட குத்தகையில் சீனாவின் கையில் போய்ச் சேர்ந்தது. இவை பழைய கதைகளாச்சே…. இதற்கும் உர இறக்குமதிக்கும் என்ன சம்பந்தம் என்று எண்ணுகிறீர்களா? இருக்கிறது.

ஆரம்பத்தில் இலங்கை மறுதலித்திருந்தாலும், அங்கு ‘பொருளாதார நெருக்கடி நிலை’ பிரகடனப் படுத்தப் பட்டிருந்தது உண்மையே. பொருட்களின் விலைவாசி கட்டுக்கடங்காமல் போயிருந்தது….. இருக்கிறது. பணவீக்கம் அதிகரித்து ரூபாயின் பெறுமதி அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டது. இலங்கையின் அந்நிய செலாவணி ஆட்டம் கண்டுவிட்டது. கடல் சார் பட்டுப் பாதைத் திட்டம், இலங்கையின் உள்நாட்டுக் கட்டமைப்பைச் சீர் செய்வது என்று இலங்கையின் சுமார் 85% அபிவிருத்திக்குப் பின்னால் சீனாவின் ‘கடனுதவி’ இருக்கிறது. இதனால் இலங்கை சீனாவின் நெருங்கிய நட்பு நாடாகிவிட்டது.

இலங்கை ஒரு விவசாய நாடு. இலங்கையின் விவசாயத்துக்கான உர இறக்குமதி இதுவரைகாலமும் இந்தியாவிடம் இருந்துதான் பெறப்பட்டு வந்தது. கையிருப்பில் அந்நியச் செலாவணியாக இருக்கும் அமெரிக்க டொலர் கணிசமாகக் குறைந்துவிட்ட நிலையில் உரம் வாங்கப் போதிய பணமில்லை. காரணம் வெளித்தெரிந்தால் மக்கள் கொந்தளித்து விடுவார்கள், அரசு ஆட்டம் கண்டுவிடும். இதனால் அந்தர் பல்டியடித்தது ராஜபக்சே அரசு. மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு, இனி நாட்டில் சேதனப் பசளை (organic fertiliser ) பயன்படுத்தப்படும் என்றும், அதற்கான ஊக்குவிக்கியாக இருக்கும் உரவகைகள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும் என்றும் அறிவித்தது அரசு. கரிம உரம் பயன்படுத்தும் போது அறுவடை குறையும், உற்பத்திச் செலவு அதிகரிக்கும். இது மீண்டும் மக்கள் தலையில்தான் போய் விழும். இது பற்றிய காரசாரமான விவாதங்கள் மக்களிடையே ஓடிக் கொண்டிருந்தன.

அரசு, சீனாவின் ‘சீவின் பயோரெக்’ (Seawin Biotech ) நிறுவனத்திடம் தொன்றூற்றாறாயிரம் தொன் ஊக்குவிப்பு உரம் பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தம் செய்தது. இதற்கு ‘பொருள் வந்தபின் பணம் தரப்படும்’ ( Line of Credit ) என்ற உத்தரவாதத்தை ‘இலங்கை மக்கள் வங்கி’ மூலம் செய்துகொண்டது. இலங்கை உரக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து அரசு சுயேச்சையாக எடுத்த முடிவு இது. ஒப்பந்தத்திற்கு முன் உரம் பரிசோதிக்கப் படவில்லை. அந்த உரம் இந்த மண்ணிற்கு சரியானதாக இருக்குமா என்றோ உரத்தினால் வேறு பக்கவிளைவுகள் ஏற்படுமா என்றோ பார்க்கப்படவில்லை. இதனையடுத்து, National Plan Quarantine என்ற அமைப்பு உரமாதிரியை சோதித்தது. அந்த உரத்தில் பிற்காலத்தில் பயிர்களை முற்றாக அழித்துவிடும், நிலத்தை மலட்டுத் தன்மையாக்கும் ஒரு பக்ரீரியா இருப்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளிவந்தது. உரத்தை வாங்க வேண்டாம் என்ற கடும் எதிர்ப்பு இலங்கை முழுவதும் அலையலையாக எழுந்தது. கடும் அழுத்தத்தின் மத்தியில், வேறு வழியில்லாமல் ‘உரம் வேண்டாம், இங்கு சுத்திகரிக்க முடியாது. அதற்கும் பெருந்தொகை செலவாகும். நீங்களே சுத்திகரித்துத் தாருங்கள், இல்லையேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள்’ என்று தனது நட்பு நாட்டிடமே சொல்ல வேண்டி வந்துவிட்டது. ‘உரம் வேண்டாம், பணமும் கொடுக்க வேண்டாம்.’ என்ற உயர் நீதிமன்ற உத்தரவு வேறு ஆப்பாக அமைந்துவிட்டது.

பெருந்தொகைப் பணத்தைக் கடனாகக் கொடுத்த சீனா சீற்றம் கொண்டது. ஏற்கனவே உரத்துடன் கப்பல்கள் புறப்பட்டு விட்டன. இந்த நிலையில் இலங்கைக்கு என்ன துணிச்சல்….? ஒப்பந்தத்தில் பணத்துக்கு உத்தரவாதம் கொடுத்த ‘மக்கள் வங்கி’யை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது சீனா. இனிவரும் காலத்தில் எந்த சீன நிறுவனமும் மக்கள் வங்கியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட முடியாது. அத்துடன், ‘மூன்று நாட்களில் பசளையில் பக்ரீரியா இருப்பதை உறுதிப் படுத்த முடியாது, எனவே இந்தக் காரணம் ஆதாரமற்றது’ என்ற வாதத்தை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்று, இலங்கையைத் தனிமைப் படுத்தவும் கட்டுப்படுத்தவும் சட்டரீதியிலான நடவடிக்கையில் இறங்கி விட்டது சீனா. இலங்கைக்கான சீனாவின் அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் மேற்பரப்புக்கு வரத் தொடங்கி விட்டன.

இனி என்னவெல்லாம் நிகழலாம்? இதில் தமிழ் மக்கள் என்ன பாதிப்புக்கு உள்ளாகப் போகிறார்கள்?

அம்பாந்தோட்ட துறைமுகம் சீனாவிடம் குத்தகைக்காக விடப்பட்ட போது அந்த ஒப்பந்தத்தில் இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்த முடியாது என்ற சரத்து இடம் பெற்றிருக்கிறது. கொழும்புத் துறைமுக நகர் அப்படியல்ல. ஏற்கனவே துறைமுக நகர் இலங்கையின் பிடியிலிருந்து நழுவி சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதன் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரவேண்டுமானால் அதைச்சூழவுள்ள 240 – 400 ஏக்கர் நிலத்தையும் எழுதித் தரவேண்டும் என்ற சீனாவின் அழுத்தத்திற்கமைய தனியார் வசமிருக்கும் அந்த நிலங்களைப் பிடுங்கும் பணியில் இலங்கை அரசு மும்முரமாக இருக்கிறது. இந்த நிலையில் இலங்கையைக் கிடுக்கிப் பிடியினுள் வைத்திருப்பதற்காக துறைமுக நகர் ஊடாக தனது இராணுவத்தை சீனாவால் இறக்க முடியும்.

அம்பாந்தோட்டவை சீனாவிடமிருந்து மீளப் பெறுவோம், அவர்களின் கடனை குறித்த தவணையில் கட்டி முடிப்போம் என்று இப்போது ராஜபக்சேக்கள் சொல்லத் தொடங்கி விட்டார்கள். அந்நிய செலாவணி அதல பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது. ‘குறுகிய தவணை – அதிக வட்டி’ என்ற நிபந்தனையை ஏற்று, மீண்டும் மீண்டும் சீனாவிடம் கடன்பட்டு இலங்கையைப் புதைகுழிக்குள் தள்ளியாகி விட்டது. இந்த நிலையில் எங்கிருந்து கடன் அடைப்பது? பெருந்தொகைப் பணத்தைக் கட்டமுடியாத நிலையில், சீனா இங்குள்ள நிலத்தை இலங்கையிடமிருந்து சொந்தமாக எழுதி வாங்கவும் வாய்ப்புக்கள் அதிகமுள்ளன.
தமிழர் தாயகப் பிரதேசத்திலும் அகலக் கால் பதித்திருக்கிறது சீனா.

மன்னாரில் எண்ணெய் வள ஆய்வு, வடக்கு கிழக்கெங்கும் விவசாய, மின்வள அபிவிருத்திக்கு உதவுதல், எமது தாயகத்தின் தங்கக் கடற்கரையிலிருந்து கறுப்பு மணலில் காரீயம் எடுத்தல், வீதி அபிவிருத்தி என்று எங்கு பார்த்தாலும் சீனப் பிரசன்னம். நெடுந்தீவு – அனலைதீவு – நயினாதீவுப் பகுதிகளில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் சீன ஒப்பந்தம் இந்திய நெருக்கடியினால் கிடப்பில் இருக்கிறது. ஆனால் கடலட்டை வளர்ப்பிற்காக வடக்கு கடலோரக் கிராமமொன்றில் சீனாவுக்கு நிலம் ஒதுக்கப் பட்டிருக்கிறது தெரிய வந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் காங்கேசன்துறையில் மகிந்தவால் அமைக்கப்பட்ட சுற்றுலாக் கட்டடத் தொகுதிகளையும் சீனாவிற்கு விற்பதற்கான திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக பரவலாக அபிப்பிராயம் எழுந்துள்ளது.

உரப் பிரச்சனையின் பின்னும் சிறிலங்கா சீன நிறுவனங்கள் பங்குபற்றிய ஒரு மாநாட்டை இலங்கையில் நடத்தியுள்ளது. இதில் சீனாவின் விதைகள் தொடர்பான ஒரு நிறுவனமும் பங்குபற்றியிருப்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது. சீனாவின் விலையுயர்ந்த கார்களைத் தயாரிக்கும் தளங்கள் இலங்கையில் அமைக்கப்படும் என்று சீனா அறிவித்திருந்தாலும், இலங்கையின் எந்தப் பகுதியில் என்பது தெளிவாகவில்லை. போகிற போக்கைப் பார்த்தால், பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்த தமிழர் தாயக பூமியில் இப்போது சிங்களவன் வாழ்ந்தான் என்று காட்ட, அகழ்வாராய்ச்சியில் புதைக்கப்பட்ட தடயங்கள் வெளிவருவதுபோல இனி வரும் காலத்தில் சீன எச்சங்கள் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
தலைவன் பிரபாகரன் காலத்தில் எந்தவொரு வெளிச் சக்தியும் உள்நுழைய முடியாதவாறு பாதுகாக்கப் பட்டிருந்த எமது நிலம் இன்று அந்நியர்களின் அதிகாரத்தின் கீழ் கிடக்கிறது. மக்களின் கையறு நிலையைப் போக்க நாம் என்ன செய்யப் போகிறோம்? இதில் புலம்பெயர் தமிழ் மக்களின் பங்கு என்ன?

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )