
இலங்கையின் அரசியல் ஆடுகளத்தில் தமிழர்கள்
சுமந்திரன் உள்ளடங்கிய மூவர் குழு அமெரிக்காவின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருப்பது இப்போது பரபரப்பாகப் பேசப்படும் ஒன்று. போகுமுன், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாகப் பேசப்போவதாக சுமந்திரன் பேட்டியளித்திருந்தார். தம்முடன் கலந்துரையாடாமல் அமெரிக்காவின் அழைப்பை இவர்களாக ஏற்ற வருத்தத்தில் இருந்த ஏனைய தமிழ்த்தரப்பினர், சமஷ்டி தொடர்பாக பேசுவதற்கு சட்டத்தரணிகள் குழு பொருத்தமானதுதான் என தம்மைச் சமாதானப் படுத்தி, அவர்களை வாழ்த்தி அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் அமெரிக்க தூதரக ருவிட்டர் செய்தி வேறொன்று சொல்கிறது. அங்கு அவர்கள் மனித உரிமைகள் தொடர்பாகவும், சர்வதேச குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பாகவும் கலந்துரையாடியதாக சொல்கிறது. தாயகத்தில், மகிந்தவை சர்வதேச குற்றத்திலிருந்து காப்பாற்ற சுமந்திரன் முயல்வதான கடுமையான குற்றச்சாட்டினை காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பு எழுப்பியுள்ள நிலையில், கனடிய தமிழர் முன்னணியும் சுமந்திரன் குழுவின் வருகைக்கு கடும் எதிர்ப்புக் காட்டியுள்ளது.
இதன் பின்னணிதான் என்ன? இந்து சமுத்திரப் பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை தேவைப்படுகிறது. இலங்கையைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க பல நாடுகள் அதி தீவிரம் காட்டுகின்றன. இவ்வளவு காலமும் இந்தியாவின் கையை மீறிப் போகாமல் இருந்த இலங்கை இப்போது சீனாவிடம் பெருந்தொகைக் கடன்பட்டு கிட்டத்தட்ட சீனாவின் பிடிக்குள் இருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கும், சீன விஸ்தரிப்பு பலவழிகளில் அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தப் பிரதேசத்தில் இந்தியாவை ஒதுக்கி எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் அமெரிக்கா இந்திய அனுசரணையுடன்தான் இலங்கை விவகாரங்களில் தலையிடுவதாகத் தெரிகிறது. முன்பு பின்னணியில், மறைமுகமாகச் செயற்பட்டு இலங்கையில் ஆட்சி மாற்றத்தைச் செய்ததுபோல இப்போது செய்யவும் வழியில்லை. ஆட்சியைக் கொண்டு நடத்துமளவுக்கு எந்தக் கட்சியும் ஸ்திரமாக இல்லை. எனவே, இப்போது பணவீக்கத்தால் அரசுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள இந்த நேரத்தில், அச்சுறுத்தலின் காரணமாக இந்தியா – அமெரிக்கா பக்கம் இலங்கை கொஞ்சம் திரும்பும் நேரத்தில், இலங்கையை மேலும் கட்டுப்பாட்டில் கொண்டுவர தமிழர் தரப்பின் துணை தேவைப்படுகிறது.
தமிழ்மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் அரசியல் யாப்பு ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என்ற சர்வதேச நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கை, எந்த அதிகாரப் பரவலுமற்ற, தமிழர்களுக்கு எதையுமே வழங்காத தீர்வொன்றை ஏற்கனவே தயாராக வைத்திருக்கிறது. அதைத் தமிழ்த் தரப்பு ஏற்கப் போவதில்லை. இந்த நிலையில், ‘என்னை அழையுங்கள், 13ம் திருத்தச் சட்டத்திலிருந்து தமிழர்க்கான தீர்வை ஆரம்பிக்கலாம்’ என்று ஒருபுறம் இந்தியா தமிழ்த் தரப்புக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறது, மறுபுறம் ‘இந்தியா சொன்ன 13ம் திருத்த சட்டத்துடன் பேச அழையுங்கள், மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்’ என்று அமெரிக்காவும் தமிழ் அரசியற் கட்சிகளுக்கு மாறிமாறி வலியுறுத்துகின்றனர். அதிலும் வட்டமேசை, சர்வகட்சி, திம்பு…… என்று அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் பங்குபற்றி தமிழர்களுக்கு எந்தத்தீர்வையுமே பெற்றுத் தராத பழம்பெரும் பெருச்சாளி சம்பந்தனிடம் பேசுவதற்கு அல்லது சம்பந்தனும் அதில் ஓர் முக்கிய அங்கமாகவிருப்பதற்கு விழைகிறர்கள் என்றார் அது எத்தகைய ஓர் தீர்வாகவிருக்கும்?
புலம்பெயர் தேசத்திலுள்ள எந்தப் பிரிவும் அல்லது தாயகத்தில் கண்ணசைவிற்காகக் காத்திருக்கும் எந்த தமிழ் அரசியற் கட்சியும் பலம் பொருந்திய நிலையில் இல்லாதிருப்பது தமிழர் தரப்பில் வேதனைக்குரிய விடயம். எந்தவொரு நாடும் எமக்கான விடுதலையைப் பெற்றுத்தரப் போவதில்லை. எந்த நாட்டுக்கும் இலங்கை பற்றிய அக்கறையுமில்லை. அங்கு தமிழர் இறைமை பறிக்கப்படுவது பற்றிய கவலையுமில்லை. இலங்கையின் கேந்திர ஸ்தானத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான அரசியல் சதுரங்கத்தில் தமிழர்கள் பகடைக் காய்களாக பயன்படுத்தப் படுகின்றனர் என்பதே உண்மை. எங்களுக்குள் ஆயிரம் கட்சிகள்…. பல்லாயிரம் பிரிவினைகள். எல்லாவற்றையும் துடைத்தெறிந்து ஓரணியில் ஒன்று திரண்டு, பலம் பொருந்திய ஒரு அமைப்பாக நாம் மாறும் வரை, யார் எமக்கு தீர்வைத் தருவார் என்று காத்துக் கிடக்க வேண்டியதுதான்.