
“மறத்துக்கும் அஃதே துணை”
(அஜந்தி)
ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்குள்ள தமிழ் பாடசாலையொன்றில்
புலம் பெயர் சிறார்களுக்கு தமிழ்ப் பாடம் கற்பித்து வருகின்றேன். கடந்த சனியன்று பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென்று இடையில் ஒரு மாணவி கேட்டார்.
“நடுகல் என்றால் என்ன…..கல்லறை என்றா என்ன ரீச்சர்..?”
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. திடீரென்று ஏனிந்தக் கேள்வி?
“என்ன ….இருந்தாப் போலை நடுகல்லையும், கல்லறை பற்றியும் கேக்கிறியள்?..”
” இந்த மாசம் மாவீரர்நாள் வருகுதென்று அம்மா சொன்னவா. பிறகு அம்மாவும், அப்பாவும் ஊரிலை உள்ள துயிலும் இல்லங்கள் பற்றி கதைச்சுக் கொண்டிருந்தினம்…. சில மாவீரர்களுக்கு கல்லறையும், சில மாவீரர்களுக்கு நடுகல்லையும் வைச்சு ஒவ்வொரு வருடமும் நாம் 27ம் திகதி அங்க போய், விளக்கேத்தி எல்லாரும் கும்பிடுவதாக சொன்னா.”
“உண்மைதான் பிள்ளைகள்… சொல்லுறன். மிகப் பழைய காலம் தொட்டு தமிழரிட்டை நடுகல் வழிபாடு இருந்திருக்கு. நாட்டைக் காக்கிறதிற்காக தங்கடை உயிர்களையும் குடுத்து, பகைவரோடை போர் செய்து, வீரம் வெளிப்படுத்தியவர்களின் நினைவாக நடுகல் அமைத்து, அதிலை அவையளின்ரை பெயர், விபரம் எல்லாம்
பொறித்து வைத்து அந்த உயிர்கொடை செய்த அந்த வீரர்களைப் பற்றி வணங்கி வழிபட்டு வந்தினம்.”
” அப்ப கல்லறை எண்டா..:?”
“எங்கட நாட்டிலை நடந்து முடிஞ்ச போரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பியள். போரிலை உயிர்கொடை செய்த வீரர்களின் வித்துடல்கள் எடுக்க கூடியதாக இருந்தவைக்கு அவையளின்ர உடம்பை வைத்தே மூடி சிறிய சமாதி போல கட்டி வைப்பது கல்லறை. உடலை எடுக்க முடியாத நிலையில் போனவர்களுக்கு நினைவுக்கல் வைப்பது
நடுகல் முறை ….அதைப் போற்றி வணங்கிற நாள் தான் மாவீரர் நாள்.”
“அது எப்படி உடல் கிடைக்காமல் போகும்?” மாணவன் கேட்டான்.
“எங்கடை விடுதலைப் போராட்டத்திலே, எங்கடை வீரர்களின் உயிர்கொடை ….வேறை….வேறை மாதிரி…..இருந்தது. எல்லாமே அந்த மாவீரர்கள் மக்கள் மேல் வைச்ச அளவில்லாத அன்பின் வெளிப்பாடுதான்…..”
“ஒவ்வொருவற்றை சாவும் ஒரு வரலாறு…அந்த ஒவ்வொரு வரலாற்றுக்குப் பின்னாலேயே ஒரு கதை இருக்கும்”
“கதையா?”
“அப்படி ஏதாவது கதை உங்களுக்குத் தெரியுமா ரீச்சர்?”
” ம் தெரியும்” எனது குரலில் இழையோடிய சோகம் எனக்கே தெரிந்தது.
“எத்தனையெத்தனை சிலிர்ப்பூட்டும் கதைகள், தியாகத்தில் தோய்த்தெடுத்த கண்ணீர் காவியங்கள், தங்கள் உயிரை துச்சமென நினைத்த உயர்வீரத்தின்
இணையில்லா வடிவங்கள், உயிராயுதங்களால் உறங்காத கண்மணிகளாய், முகவரி மறைத்த முத்துக்களாய், வேருக்கு மட்டுமே தெரிந்த விழுதுகளாய்…”
“சொல்லுங்கோ ரீச்சர்….
அதிலை ஒரு கதையை எங்களுக்கு சொல்லுங்கோ …..பிளீஸ்…”. எல்லோரும் கேட்டார்கள்.”
“எங்கடை விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த துவக்க காலம் அது. போராளிகள் தங்களை வெளிப்படுத்தாமல், ஆருக்கும் தெரியாம, தலைமறைவாகத்தான் திரிவினம்… ..”
“ஏனப்படி திரிவினம்?”
” எல்லா இடமும் ஆமி நடமாடும்…இவைகளைக் கண்டா… சந்தேகத்திலை.,.பிடிச்சுக் கொண்டு போயிடுவாங்கள்….”
“ஓ”
“ஆனா விடுதலை அவசியம் என்பதைச் சனங்களுக்குத் தெரியப்படுத்த, மக்களோடை மக்களா இருந்தால்தான் அவங்களுக்கு விழிப்புணர்ச்சி
ஏற்படுத்தலாம். அப்படிச் செய்ய வேண்டிய தேவை இருந்தது. அதை விட வேறை வேறை வேலையளும் செய்ய வேணும்….அதுக்காகத்தான் ஆமியிட்டை பிடிபடாம கவனமாக இருந்தவை…”
“அப்பிடியே ரீச்சர்?”
“ம்.. ஆனா எங்கடை சனம் போராளியளுக்கு உதவியாய் இருந்தவை.
தங்க இடம் குடுப்பினம்……. ஆமி நடமாடுற பக்கம் போராளிகள் போகாமை
பாத்துக் கொள்வினம்…..”
“கேணல் கிட்டு என்ற மாவீரரைப்பற்றி கேள்விப்பட்டிருப்பியள் என்று நினைக்கிறேன்.”
“ஓம் ரீச்சர் கேள்விப்பட்டிருக்கிறம். அவர் ஒரு பெரிய வீரனாமே?”
“ஓம்! அந்தக் காலத்திலே அவரும் சில போராளியளுக்கும் ஒரு அம்மா சமைச்சு, சாப்பாடு குடுக்கிறவா….. எல்லாரும் வந்து சாப்பிட்டிட்டுப் போவினம். ஆருக்குமே தெரியாது. அந்த அம்மாக்கு ஒரு சின்ன பிள்ளை இருந்தா…
அவவுக்கு இந்த போராளி மாமாக்களோடு நல்ல விருப்பம். போராளிகளுக்கும் அவ என்டா உயிர்”
“ஒரு நாள் பின்னேரம்… 4 மணிக்குத்தான் கிட்டுவும், மற்ற போராளிகளும் வந்து சாப்பிடுவினம். வழமையாக அவையள் கூட வாற அன்பு எண்ட போராளி அன்னைக்கு வரல்ல.
“என்னடா…அன்பு எங்கை போனவன் ? இன்னும் வரல்லை.” என்று கிட்டு
கேக்க,
“தெரியல்லை அண்ணை. காணல்ல. அவன் இந்த நேரம் வந்திருக்க வேணும்” என்று மற்றவை சொல்கினம்.
இவை சாப்பிட்டு முடியுற நேரம் அன்பு வந்தான்.
“என்ன ஆளையே காணல்ல? எங்கயடா போனனீ?” என்று கேட்டார்.
“ஒரு வேலையாய் போனன் . கொஞ்சம் சுணங்கி போச்சு அண்ணை” என்று சொல்லி அன்பு சாப்பிட ஆயத்தமாக, மற்றவை வெளியால போய், வழமையான பம்பலை தொடங்கிச்சினம்.”
“பம்பலா? அது என்ன ரீச்சர்?..”
“பம்மல் என்றா ஜோக் அடிக்கிறது. எல்லாப் போராளிகளும் நல்லா
ஜோக் அடிப்பினம்…அதிலேயும் கிட்டர் இருக்கிற இடத்திலை பம்பலுக்கு
குறைவே இருக்காது”
….அன்புவுக்கு அம்மா சாப்பாட்டைக் கொண்டு வந்தா.. “சாப்பிடுங்கோ தம்பி பசியோடை வந்திருப்பியள்” என்று அம்மா சொல்லிப் போட்டு போய் விட்டா.
அறையில் கீழை இருந்து சாப்பிட துவங்கிய அன்பு தோளில மாட்டியிருந்த துவக்கைக் கழட்டி அருகிலே வைச்சுட்டு, இடுப்பிலே கட்டியிருந்த கைக்குண்டையும் எடுத்துக் கீழே வைக்க முற்பட்டபோது, அவனே கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
கைக்குண்டின்ரை கிளிப் கழன்று போச்சு….! கிளிப் கழன்றால் நாலு செக்கனில் குண்டு வெடிச்சுடும்.”
வெளியே சந்தோசமாக சிரித்துக் கொண்டிருந்த தோழர்கள், உள்ளுக்குள்
அம்மா…..அன்பு மாமா என்று ஆசையா ஓடி வாற அந்த குழந்தை…….
குண்டு வெடிச்சா அவ்வளவு உயிரும் போயிடும். ஒரு செகன்டிலை இதையெல்லாம் அன்பு யோசிச்சிருப்பான் போலை. அடுத்த நொடியிலை அந்த குண்டுக்கு மேலை தன் உடம்பை வைச்சுக் குப்புறக் படுத்துக் கொண்டான்”
பெரிய அதிர்வோடை குண்டு வெடிச்சது. வெளியால இருந்த போராளிகள்
அந்த அதிர்வால் குலுக்கப்பட்டு, என்ன நடந்தது என்று தெரியாம எழும்பி ஓடி வந்தினம். அறை முழுக்க புகை மண்டலமாய் இருந்தது. எல்லாரும் ஒடி வந்து பார்க்க தசைத் துண்டுகளாய்ச் சிதறிப் போன அந்த வீரன்ரை உடம்பு சுவர்களிலேயும், நிலத்திலேயும் ஒட்டிக் கிடந்தது. எல்லா இடமும் இரத்தம்…..ஓடி வந்த கிட்டரும், தோழர்களும் அங்கை என்ன நடந்திருக்கும் என்பதை விளங்கி கொண்டினம்.
வெளியாலை சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்த அன்பான தோழர்கள், உள்ளுக்குள் வேறை இடத்தில அந்த அம்மா…எல்லோரும் ஆசையா பழகிய அந்த பிள்ளை, அந்த நிலையில்…. குண்டு வெடிச்சா அவ்வளவு பேர்களின் உயிரும் போயிரும். ஒரு செகன்ட் கூட தாமதிக்காமல், எல்லாற்றை உயிரையும் பாதுகாக்கிறதிற்காக அன்பு என்ற வீரன்
இப்படியொரு முடிவையெடுத்து தன்னையே அழித்துக் கொண்டான் எண்ட உண்மையை உணர்ந்தபோது, அன்பு நெஞ்சம் கொண்ட அந்த வீரனைக் கண்ணீரோடை நின்று கும்பிட்டினம்”
மாணவ, மாணவியரின் கண்கள் கலங்கியிருந்தன. அத்தனை முகங்களிலும் சோகம் பரவியிருந்தது.
“எங்கடை மண்ணின்ரை பல்லாயிரக்கணக்கான மாவீரர்களிலை, ஒவ்வொருவருடைய கதையும் வீரவரலாறுதான். இந்த வீரத்துக்கு மண்மீதும், மக்களின் மீதும் அவர்கள் வைத்த அன்பு தான் காரணம்.
இதைப்பற்றி ஒரு திருக்குறளும் படித்தோம்.. நினைவிருக்கா? ஆராவது ஓராள் அந்தக் குறளை சொல்லுங்க பார்ப்பம்…..?”
“அறத்திற்கே அன்புசார்பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.”
ம்…. இப்ப எங்கடை மண்ணிலே நடுகற்கள், கல்லறைகள்
எல்லாம் பகைவராலே அழிக்கப்பட்டிட்டுது….
ஆனா…..விடுதலைக்காக தங்கடை உயிர்களைக் குடுத்த எங்கடை மாவீரர்களின் நினைவை எப்பவும் ஆராலும் அழிக்க முடியாது.
“எப்ப ரீச்சர் விடுதலை கிடைக்கும்?”
“கிடைக்கும் நிச்சயமாய் கிடைக்கும்…..எங்கடை மாவீரர்களின்ரை உயிர்க்
கொடை ஒருநாளும் வீண் போகாது…… ! நம்பிக்கையோட இருப்பம்”
கையை உயர்த்தி நான் இப்படி சொல்ல அத்தனை மாணவச்செல்வங்களின் கைகளும் சேர்ந்தே உயர்ந்தன.