
தமிழர் பாரம்பரிய மரபுத் திங்கள்
ஒவ்வொரு ஜனவரி மாதத்தையும் தமிழர் பாரம்பரிய மரபுத் திங்களாக கொண்டாடுவதாக 2010 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நடைமுறை, இன்று உலகளாவிய ரீதியில் வியாபித்து வருகிறது. கனடாவில் ஆரம்பத்தில் தமிழர் அமைப்புகள் தாமாகவே இதனை முக்கியமான தமிழர் விழாவாகக் கொண்டாட ஆரம்பித்தன.
கனடாவில், தமிழ் மக்கள் அதிகமாக வாழும் ஒன்ராறியோ மாகாணசபை 2014ஆம் ஆண்டில் இதனை ஒரு சட்டமாக நிறைவேற்றியது. கன்சர்வேற்றிவ் ( Conservative ) கட்சி உறுப்பினரான ‘ரொட் சிமித்’ கொண்டு வந்த தனிநபர் பிரேரணை சகல கட்சிகளினதும் ஆதரவுடன் 2014 மார்ச் 17ம் திகதி 2ம், 3ம் வாசிப்புகளில் நிறைவேறியதை அடுத்து, மார்ச் 25ம் திகதி மாகாண பிரதி ஆளுநர் நாயகம் ஒப்பமிட்டதுடன் சட்டமாகியது.
கனடிய நாடாளுமன்றத்தில் எம்.24 இலக்கத்தில் தமிழர் பாரம்பரியத் திங்கள் ஒரு தீர்மானமாக 2016 செப்டெம்பர் 29 இல் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியால் முன்மொழியப்பட்ட இத்தீர்மானத்திற்கு சகல பிரதான கட்சிகளும் ஆத்ரவாக வாக்களித்தன.
ஒன்ராறியோவில் ரொறன்ரோ, மார்க்கம், ஒட்டாவா, பிராம்டன் உட்பட அனேகமான நகரசபைகளும், ரொறன்ரோ மாவட்ட கல்விச் சபையும் இதனைத் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளன. கடந்த மாதம் இங்கிலாந்தின் லண்டன் பெருநகர சபையும் தமிழர் பாரம்பரியத் திங்களை நிறைவேற்றியது. இதன் மூலம் இதன் எல்லைக்குட்பட்ட சகல நகர சபைகளும் தமிழர் பாரம்பரியத் திங்களைக் கொண்டாட வாய்ப்புக் கிடைத்துள்ளது.
தை மாதம் தமிழர்களுக்கு முக்கியமான ஒன்று. தைப்பொங்கல், உழவுக்குப் பெருமை தரும் பட்டிப்பொங்கல் உட்படப் பல கொண்டாட்டங்கள் இம் மாதத்தில் இடம் பெறுகின்றன. தமிழ் மொழி செம்மொழிகளில் ஒன்று. உலகளாவிய ரீதியில் இதுவரை பத்து தமிழாராய்ச்சி மாநாடுகள் இடம்பெற்றுள்ளன.
தமிழரின் உணவு, பழக்கவழக்கங்கள், குடும்பமாக வாழும் ஒழுக்கம், பெரியோரை மதிக்கும் உயரிய பண்பு, தூய்மை என்பவை காலங்காலமாகப் போற்றப்படுபவை. தொல்காப்பியமும் திருக்குறளும் தமிழரின் அரும்பெரும் சொத்துக்கள். தமிழரின் பன்முகப் பண்பாட்டையும், விழுமியங்களையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் அடுத்த தலைமுறையினருக்குக் கையளிப்பதற்கு தமிழர் பாரம்பரியத் திங்கள் வாய்ப்பளிக்கிறது. தமிழினத்தின் வேர்களை விழுதுகள் அறிவதற்கு இம்மாத நிகழ்வுகள் முக்கியமானவை.
உலகளாவிய ரீதியில் இடம்பெறும் தமிழர் பாரம்பரியத் திங்கள் தமிழர் தாயகத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டும். அங்குள்ள தமிழர் அமைப்புகளும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அவைகளும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
ஆதாரம் – தமிழர் தகவல்.