
தாழ்ந்து போகும் தமிழர் நிலைமையும் தமிழ் அரசியற் கட்சிகளும்
(பாரி )
13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், ஏழு தமிழ் அரசியற் கட்சிகள் கூட்டாகக் கையொப்பமிட்ட கடிதம், 18/01/22 அன்று, அட்டமி இல்லாத நல்லநாளாகப் பார்த்து, சம்பந்தர் தலைமையில் கையளிக்கப் பட்டிருக்கிறது. சிறிலங்காவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இதனைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். சொல்லி வைத்தது போல அல்லது சொல்லி அடித்தது போல, கோத்தபாயவின் சிம்மாசன உரையும் அன்றே அரங்கேறியிருக்கிறது. எதிர்பார்த்தது போல, தமிழர்களைப் பற்றியோ அவர்களின் பிரச்சனை பற்றியோ மறந்தும் தொடவில்லை கோத்தபாய.
13ம் திருத்தச் சட்டம் ஒரு தீர்வல்ல, தீர்வுக்கான முதல் முயற்சி என்றும் கடிதத்தில் வேறு கோரிக்கைகளும் இருக்கின்றன என்றும் கூட்டமைப்பினர் பீலா விட்டுக் கொண்டிருக்க, சமஷ்டி வேண்டும் – அதற்கும் மேலான ஒன்று வேண்டும் என்று கஜேந்திரகுமார் தரப்பிலிருந்து பிரசாரங்கள் கிளம்ப, மக்கள் எதைப்பற்றியும் கவலைப்பட்டு எதுவும் ஆகிவிடப் போவதில்லை என்று தம்பாட்டில் இருக்கிறார்கள். உண்மையில் மக்கள் மயப்படுத்தப் படாத இந்த இரு தரப்பிற்கும் இடையில் பெரிய வேறுபாடு எதுவுமில்லை. இவர்கள் தமிழர் பிரச்சனையைத் தீர்க்கப் போவதுமில்லை. இதுவரை கால நீண்ட போராட்ட வரலாறு, தியாகங்கள், சுயமான தற்சார்பு வாழ்க்கை முறை அத்தனையும் மறந்த அல்லது மறக்கடிக்கப் பட்ட மக்களிடம் இப்போதைய அரசியல் நிலைமை பற்றி எந்தத் தெளிவுமில்லை, எதிர்பார்ப்புமில்லை. சிறிலங்கா அரசும் அதன் சார்பு சக்திகளும் திட்டமிட்டு மக்களின் சிந்தனையை மழுங்கடித்து வருகிறார்கள். தமிழ்க் கட்சிகளோ எந்த விதமான அடிப்படைக் கொள்கைத் திட்டங்களுமின்றி, மக்களைச் சென்றடையாத ஒரு அரசியலை தேர்தலை மட்டுமே குறியாகக் கொண்டு செய்து வருகிறார்கள்.
புத்திஜீவிகள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழிற் சங்கங்கள், மாணவர் சக்தி போன்றோர் சரியான தளம் அமைத்துக் கொடுக்கப் படாமையினாலும் தாமாகத் தளத்தை அமைத்து இயங்க முற்பட்டாலும் அவர்களைக் கை தூக்கி விட்டு, அவர்களை முன்னிலைப் படுத்த எந்த அரசியற் கட்சியும் முன்வராததாலும் மக்களிடையே அரசியற் அறிவுப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. இளைய சமுதாயம் தவறான, எழுச்சியுறா அரசியலைப் பார்த்துப் பார்த்து, அதை மட்டுமே உள்வாங்கி வாளாவிருக்கிறார்கள். இவையனைத்துக்கும் தமிழ் அரசியற் கட்சிகளின் அசமந்த, தேர்தல் நோக்கிய பயணிப்பு மட்டுமே காரணமாக இருக்கிறது. இது தமிழர் வாழ்வியலுக்கு மிகவும் ஆபத்தானது. உள்ளிருந்தே அரித்து எமது விடுதலை வேணவாவினை ஒன்றுமில்லாமற் செய்துவிடும். பொருளாதாரத்தடை, தொடர் குண்டு வீச்சுகள், இனப்படுகொலைகள் மத்தியிலும் சுயதேவைப் பூர்த்தியுடனும் ஒழுக்க விழுமியங்களுடனும் தம்மை ஸ்திரப்படுத்தியிருந்தவர்கள் எம் மக்கள். இன்று, ‘கார்ப்பெட் வீதி’, நவீன கைபேசிகள், சினிமா, மோட்டர் சைக்கிள்கள் என்று வசதிகள் திறந்து விடப்பட்டதும் சுதந்திரம் கிடைத்ததாக மகிழ்கின்றனர்.
எம்மிடம் இருந்ததை பறித்தெடுத்து விட்டு, நீண்ட கால போராட்டங்கள், உயிர்த்தியாகங்களின் பின் கொஞ்சம் கிள்ளிப் போட்டிருக்கிறார்கள் எம்மை அழிக்க நினைப்பவர்கள். பதிலுக்கு, திட்டமிட்டபடி நில அபகரிப்பு, கலாசார சீரழிவு, தமிழர் பிரதேசத்தில் குடிப்பரம்பலைக் குறைத்தல் என்று பாரிய இனவழிப்பி வேலைகள் தொடர்கின்றன. நாம் ஒரு இனமாக, தாயக நிலப்பரப்பு அற்றவர்களாக ஆக்கப்பட்டுக் கொண்டிருப்பதை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது தமிழ்க் கட்சிகளின் கடமையல்லவா?
இப்போது, கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது வரவேற்கத் தக்க விடயம் என்ற கருத்து சிலரிடையே இருந்தாலும், அண்மைய கடிதக் கையளிப்பு தமிழர்களின் அரசியலை மிகக் கீழ்நிலைக்கு எடுத்துச் சென்றிருப்பதான ஒரு கருத்தும் புத்திஜீவிகள் மட்டத்தில் நிலவுகிறது. இந்தியாவிற்கு எந்த அக்கறையுமில்லை என்பது 13ம் திருத்தச் சட்டம் வந்த இந்த 35 வருட காலத்தில் நிரூபணமாகியிருக்கிறது. ஆனாலும், பிராந்தியத்திலும் உள்நாட்டிலும் தனது நலனைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அது தமிழர்களை மீண்டும் மீண்டும் பலியிடத் தயங்கப் போவதில்லை. சிங்கள அரசியலைப் பொறுத்தவரை, கோத்தபாயவின் உரையில் கூட தமிழர்களுக்கு இடமில்லை எனும்போது அவர்கள் அதிகாரம் எதனையும் பகிர்ந்தளிக்கப் போவதில்லை. ஆயிரம் பிளவுகளும் அறுபத்தெட்டுக் கொள்கைகளும் கொண்ட தமிழ்க் கட்சிகள் ஒன்றாகக் கூடிக் கையொப்பமிட்டது தமிழர் நலன் கருதியல்ல, தமது நலன் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் என்பது வெளிப்படையான அரசியலாகி விட்டது.
தமிழ்த் தேசியத்தின் பால் அக்கறை கொண்ட மக்கள் தளமும் வளமும் இல்லாது தவிக்கிறார்கள். மக்களை மையப்படுத்திய அரசியலைச் செய்ய எவருமில்லாத நிலை தமிழ்த் தேசியத்தை, எமது விடுதலையின் பாதையிலிருந்து இன்னும் பின்னோக்கித் தள்ளுகிறது. தம்மை விஞ்சி விடுவார்களோ என்ற அச்சத்தில் மக்களை முன்னிறுத்தாத அரசியலைச் செய்யும் மனோபாவம் இருக்கும் வரை எமக்கு நிரந்தரத் தீர்வு எதுவும் கிடைத்து விடாது.
தமக்கிடையேயான வேறுபாடுகளை உண்மையிலேயே துறந்து தொழிற்சங்கங்கள், மாணவர்கள், புத்திஜீவிகள், ஆய்வாளர்கள், ஊடகத்துறையினர் என்று பலரையும் இணைத்து ஒரு சிவில் சமுகமாக முன்னிறுத்தி, ஒரு தெளிவான பொறிமுறையுடன் மக்கள்முன் செல்லும் போது மட்டுமே மறுபடியும் ஒரு பலம் மிக்க தேசிய இனமாக எம்மால் நிமிர்ந்து நிற்க முடியும்.