
எல்லாமே மாறிப்போச்சு………
(அஜந்தி)
பதின்நாலு வருசத்துக்குப் பிறகு யாழ்ப்பாணத்திலை கால் வைக்கப்போறன் எண்ட நினைப்பிலையோ என்னவோ…. ஒருக்காக் கூட எனக்கு நித்திரை வரேல்லை.
…… இன்னும் கொஞ்ச நேரத்திலை விடிஞ்சிடும்…. எப்பிடியும் பத்து மணிக்குள்ளை வசாவிளானுக்குப் போயிடலாம்…
….. இப்ப ஊருக்குப் போக வேண்டாமெண்டு மனிசனும் பிள்ளையளும் மறிக்க மறிக்க ஏதோ ஒரு பிடிவாதத்திலை வெளிக்கிட்டு வந்திட்டன்…. கொஞ்சம் ஒரு யோசனையாத்தான் இருக்கு….
… அட… அப்பிடிஎன்னதான் நடந்திடப் போகுது….? கடைசிச் சண்டை எண்டு எங்கடை சனத்தை ஆயிரக்கணக்கிலை அவங்கள் கொண்டு குவிச்சு…. அதுகும் பத்து வருசத்துக்கு மேலை ஆகிப்போச்சு…. இதுக்கு மேலை என்ன இனி?….
….ஆக மிஞ்சிப் போனா சின்னம்மா அங்கைதானை இருக்கிறா…. என்ன பயம்…?
….. எங்கடை இடத்திலை இப்ப ஆமி இல்லையெண்டு அறிஞ்ச பிறகு, ஒருக்கா ஊருக்குப் போட்டு வரவேணுமெண்ட ஆசையை என்னாலை கட்டுப்படுத்த முடியேல்லை….
…… எங்கடை ஊரைப் பற்றியும் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை பற்றியும் என்ரை பிள்ளையளுக்குத் தெரியாது…. சொன்னாலும் அவை சிரிப்பினம்…. அங்கை பிறந்து வளர்ந்தவைக்குத் தான் அந்த அருமை தெரியும்….
“கனகராயன் குளம்! ஆராவது இருக்கா….?”
கனபேர் நித்திரை… கொஞ்சப் பேர் அரைகுறை நித்திரை… திரும்பவும் கண்டக்டர் குரல் எழுப்பினார்.
“கனகராயன் குளம்!… ஆராவது இறங்க இருந்தா இறங்குங்கோ…. இனி முறுகண்டீலதான் பஸ் நிக்கும்….. இடையிலை நிக்காது….”
….. ஒருத்தரும் இறங்கேல்லை….. முறுகண்டி கிட்ட வந்திட்டுதா…?
சின்ன வயசில எத்தினை தரம் அம்மா அப்பாவோடை வவுனியாவுக்கும் கொழும்புக்கும் போய் வந்திருக்கிறம்….. எல்லாம் கண்ணுக்கை தெரியிற மாதிரிக் கிடக்கு……
….போகேக்கையும் திரும்பி வரேக்கையும் எப்படா முறுகண்டி வரும்…பஸ் நிப்பாட்டும்….. எண்டு, தம்பியும் நானும் அந்தக் கச்சான் கடலையைக் கொறிக்கிற நினைவோடை இருக்கிறதை நினைச்சா இப்பவும் சிரிப்பா இருக்கு…. ஆனா, அதையும் தாண்டி…ஒரு கவலையும் வருகுது….. ஏனெண்டுதான் விளங்கேல்லை…
…நானறிஞ்ச காலம் தொட்டு இந்தக் கண்டி வீதியாலை போறவாற எந்த வாகனமும் முறுகண்டிப் பிள்ளையாற்றை வாசல்லை நிப்பாட்டி, ஒருக்கா அவரைக் கும்பிடாமல் போனதில்லை…. புதுமையான கடவுளெண்டு எல்லாருக்கும் அப்பிடியொரு நம்பிக்கை… பக்தி…. முஸ்லீம்கள், வேதக்காரர்,… ஆரெண்டில்லை… கும்பிட்டுத்தான் போவினம்… ஏன்… இந்தச் சிங்களவங்கள்கூட வாகனங்களை நிப்பாட்டி இறங்கி, ‘கணபதி தெய்யோ’ எண்டு சொல்லிக் கும்பிட்டவை தானே…?
…… றோட்டுக் கரையிலை குடிசைபோலை ஓலைக்கூரை போட்ட ஒரு சின்னக் கோயில்தான்…. எப்ப பாத்தாலும் ரெண்டு பக்கமும் கரையில அடுக்கடுக்காய் வாகனங்கள் நிப்பாட்டி இருக்கும்….. சனக் கூட்டத்தில பிள்ளையார் வாசல் களை கட்டிக் கிடக்கும்…..
….. கோயிலுக்கு எதிரை கொஞ்சம் தள்ளி றோட்டுக் கரையிலை இருக்கிற பெரிய தண்ணித் தொட்டியிலை எல்லாரும் முகம் கை கால் கழுவி, பிள்ளையார் வாசலுக்குப் போவம்… வாசல்லை நட்டிருக்கிற கற்பூரச் சட்டியிலை சுவாலை விட்டு எரிஞ்சு கொண்டிருக்கிற தீபத்திலையிருந்து வாற கற்பூர வாசம் நல்லா இருக்கும்….. அதுக்குப் பக்கத்திலை ஒரு சீமெந்துத் தொட்டீக்குள்ளை சனங்கள் சிதறு தேங்காய் அடிக்கிற சத்தம் இடைவிடாமல் கேக்கும்… பிள்ளையாரைக் கும்பிட்டு சுத்தி வர, இடது பக்க முகப்பிலை ஒரு சந்தனக் கல்லு இருக்கும்…. அப்பா சந்தனக்கட்டையாலை அரைச்சு, எனக்கும் தம்பிக்கும் பொட்டு வைச்சு தானும் வைப்பார்….. அம்மாவும் அதிலை தொட்டுப் பொட்டு வைப்பா…..
…….. ஐயர் தீபம் காட்டேக்கை எல்லாரும் அரோஹரா எண்டு உரக்கச் சொல்லிக் கும்பிடுவினம்… அம்மாவாக்களும் அதுபோலை சொல்லிக் கண் கலங்கிக் கும்பிடுவினம்…… அதைப் பாக்க எனக்குள்ளையும் ஏதோ ஒருவித உணர்வு வரும்…. இப்ப நினைச்சுப் பாக்க…. அதுதான் ‘பக்தி’ எண்டு விளங்குது… கடவுளே……
…… கும்பிட்டு முடிய… அப்பா எங்களைக் கடைப்பக்கம் கூட்டுக் கொண்டு போவார்…. தம்பிக்கும் எனக்கும் அந்த நேரம் சந்தோசம் தாங்கேலாமை இருக்கும்!
……. நல்ல ருசியான வடை….. பிளெயின் ரீ…. எல்லாம் முடிய வறுத்த கச்சான் கடலை!
…… விளிம்பு வைச்ச வட்டமான பெரிய கூடையளிலை கச்சான் குவிந்திருக்கும்…..வரிசையா நிறையப் பேர் …. அனேகமா பெம்பிளையள் தான்….. வயசு போன அம்மாக்களும் பெரிய பெரிய காதுக் கடுக்கனுகளோடை இருப்பினம்….
……. சத்தியமாச் சொல்லுவன்…. இண்டு வரைக்கும் வேறை எந்த இடத்திலயும் அந்த முறுகண்டிக் கச்சான் போலை நான் காணவுமில்லை… சாப்பிடவுமில்லை. ஒவ்வொரு கச்சானும் நாங்கள் நல்லூர்த் திருவிழாவிலை வாங்கிற கச்சானை விட இரண்டு மடங்கு பெருசா நீளமா இருக்கும்… நாலு பருப்பு அல்லது சில வேளையளில அஞ்சு பருப்பும் உள்ளுக்கு இருக்கும்….. நல்ல பதமா வறுபட்டு….. அந்தச் சிவப்புத் தோலை நீக்கிப் பார்த்தா….. ஒவ்வொரு பருப்பும் மெல்லிய பிறவுண் நிறத்திலை மொறு மொறு எண்டிருக்கும்…….. நினைக்க ஆசையாய் இருக்கு…….. எவ்வளவு காலம்…. இந்த வயசுக்குப் பிறகும் அந்தக் கச்சான் ஆசை அப்பிடியே இருக்கு…..
……. பல பல எண்டு விடியுது……. முறுகண்டிக்குக் கிட்ட வந்திட்டமெண்டு நினைக்கிறன்…..
…..கோயில்…. தண்ணித் தொட்டி…… கற்பூரச் சட்டி…. சிதறு தேங்காய்… சந்தனக் கல்லு…..தேத்தண்ணிக் கடையள்….. கச்சான் யாபாரம்….இதெல்லாம் இப்பவும் அதேபோலை இருக்குமோ?… அல்லது எல்லாமே வித்தியாசமாய் இருக்குமோ…?
பஸ் மெதுமெதுவாக ஓடி ஒரு கரையில நிப்பாட்டுது…… முறுகண்டியானே….. எத்தினை வருசத்துக்குப் பிறகு உன்ரை வாசலுக்கு வாறன்…. ஊரிலை எங்கடை வீடு…. நான் விளையாடித் திரிஞ்ச இடங்கள்…என்ரை பள்ளிக்கூடம்….. எல்லாத்தையும் பாத்து….. தெரிஞ்சவை எல்லாரையும் சந்திச்சு மனம் விட்டுக் கதைச்சு ….. எல்லாம் முடிய….ஒரு பிரச்சனையுமில்லாமை சுகமா நான் லண்டன் திரும்பிறதுக்கு நீதான் துணை நிக்க வேணும்…
……கற்பூரம் கொழுத்தி…… சிதறு தேங்காய் அடிச்சு….. உண்டியலுக்கை காசு போடுவனப்பு…. சாமீ….
……. நல்லா விடிஞ்சிட்டுது…. இதென்ன பஸ் வேறை இடத்தில நிப்பாட்டியிருக்கு……கோயிலையும் தெரியேல்லை…..
என்னடா இது? எங்கை நிக்கிறம்? நாலைஞ்சு பேர் மட்டும் இறங்க மற்றவை அப்பிடியே இருக்கினம்…. திகைப்பாய் இருக்கு…..
“சாமி கும்பிடுற ஆக்கள் கெதியாய் போட்டு வாங்கோ…. பத்து நிமிசம்தான் பஸ் நிக்கும்….”
….. கண்டக்டர் ஏன் இப்பிடிச் சொல்லுறார்? எல்லாரும்தானே கும்பிடுறவை…? இது முறுகண்டியா வேறை இடமா?….
பக்கத்தில இருந்த அம்மாட்டைக் கேட்டன்… “ஏனம்மா கனபேர் இறங்காமை இருக்கினம்?”
“நீங்கள் வெளி நாட்டிலயிருந்து வாறியளே..? எண்டு அவ கேட்டா. “ஓம்…”
“இப்ப எல்லாம் வேற மாதிரி….. கோயில் வாசலாலை பஸ்ஸுகள் ..வாகனங்கள் போறேல்லை….சுத்துப் பாதையாலை தான் வரும்… இறங்கி கொஞ்சத்தூரம் நடக்க வேணும்… எல்லா பஸ்ஸும் நிக்காது…. சில பஸ் மட்டும்தான் நிக்கும்…கொஞ்ச நேரத்தில வெளிக்கிட்டிடும்…..அதாலை சிலபேர் மட்டும்தான் சுத்தி நடந்து போய் கும்பிட்டு வருவினம்…
“ஓ…. அப்ப நீங்கள் இறங்கேல்லையே….? நான் ஒருக்காப் போட்டு வாறன்…… நான் வாறதுக்கிடையில பஸ் வெளிக்கிட்டா ஒருக்கா மறிச்சு வையுங்கோ…. ப்ளீஸ்…”
….. சுத்துப் பாதையில கொஞ்சத்தூரம் நடக்க, கோயில் தெரியுது….. முந்தின கூரை இல்லை… ஓடு போட்டிருக்கு… றோட்டுக் கரையை அடைச்சுக் கொண்டு வரிசையா நிக்கிற வாகனங்களுமில்லை…. கூட்டமாய் நிண்டு கும்பிடுற சனங்களையும் காணேல்லை…
…….கவலையாக் கிடக்கு…எவ்வளவு பரிமளிப்பாய் இருக்கிற இடம்…இப்பிடி வெறிச்சோடிக் கிடக்கு…. வருசக் கணக்காய் இருந்த நடைமுறையை மாத்தி இப்ப என்ன புதுசாய் இப்பிடியொரு முறை?… இதெல்லாம் ஆற்றை வேலை..? முறுகண்டியானே!…. இதெல்லாம் என்னையா….? மனதுக்குள்ள ஏதோ பாரமாய் இருக்கு….
…இடம் மாறிக் கிடந்த தண்ணித் தொட்டியைத் தேடி கைகால் கழுவி பிள்ளையாற்ற வாசலில வந்து நிக்க, தனிச்சு விடப்பட்ட மாதிரி ஒரு உணர்விலை ஒரு நாளும் இல்லாத மாதிரி எனக்குக் கண் கலங்குது….
முந்தின ஞாபகம் வருகுது…. அம்மா… அப்பா…. தம்பி….எல்லாரையும் நினைக்கிறன்.
….. சுத்திக் கும்பிட்டு, உண்டியலில காசைப் போட்டிட்டுத் திரும்ப –
“அம்மா..! பூ…!” எண்ட குரல் கேக்குது.
அஞ்சாறு சின்னப் பையளில பூ வித்துக் கொண்டிருந்தா அந்தப் பிள்ளை….முப்பது முப்பத்தைஞ்சு வயசு தானிருக்கும்…… முகம் வாடிப்போய்க் கிடந்தது…….
…..அந்த முகம்….? இந்தப் பிள்ளையை நான் பாத்திருக்கிறன்… இடது கன்னத்தில சின்ன வண்டுபோலை அந்தக் கறுப்பு மச்சம்…..ரெண்டு பின்னல் பின்னி…. குறுக்கை வளைச்சுக் கட்டினபடி…… கையில துவக்கும் வைச்சுக் கொண்டு நிக்கிற இயக்கப் பிள்ளையளுக்கை இவவின்ரை சிரிப்பு புறம்பாய்த் தெரியும்….
……ரெண்டு மூண்டு தரம் எங்கடை வீட்டுக்கு வேற பிள்ளையளும் இவவுமாய் வந்திருக்கினம்….. பேர் கூட ஞாபகமிருக்கு, நிலமகள்..
…..போன மாதம் யாழப்பாணம் வந்திட்டுத் திரும்பிய கமலாக்கா சொன்னது டக் எண்டு நினைவுக்கு வருகுது…..
“…. இயக்கத்தில இருந்த பிள்ளையளும்… சண்டையில மனிசன்மாரை இழந்தவையும் இப்ப வாழ வழி தெரியாமைத் தவிக்குதுகள்…. நாட்டுக்காகப் போராடப் போனதுகள்….இப்ப சாப்பாட்டுக்கே வழியில்லாமை நிக்குதுகள்…. பெரிய கொடுமை என்னெண்டா இயக்கத்தில இருந்தவையை எங்கடை சனங்களும் இப்ப மதிக்கிறதில்லை….. ஏதோ குற்றவாளியளைப் போலப் பாக்கினம்….”
ஒரு காலத்திலை இயக்கமெண்டா எங்கடை சனம் எவ்வளவு மதிப்பு வைச்சிருந்துது…. றோட்டிலை இயக்கம் நிக்கிறதைக் கேள்விப்பட்டா அதைப் பாக்கிறதுக்காகவே சனம் கூடிவிடும்….
“அம்மா….! பூ…?” மீண்டும் கேட்ட அந்தக் குரல் என்னைச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தது….
எனக்கு வயசு போனதாலை … அவ என்னை அடையாளம் கண்டிருக்க மாட்டா…. நானும் தெரிஞ்ச மாதிரிக் காட்டிக் கொள்ளேல்லை….
“அம்மா…! பூ…?” திரும்பவும் கேட்ட அந்தக் குரல் என்னை சுய நினைவுக்குக் கொண்டு வந்தது.
“ஒரு பக்கற் எவ்வளவு….?”
“முப்பது ரூபா….:
ரெண்டு பக்கற்றை வாங்கிக் கொண்டு நூறு ரூபாயைக் கொடுத்தன்..
“மிச்சத்தை நீங்களே வைச்சிருங்கோ…..!”
…..ஐயரிட்டைப் பூவைக் குடுத்திட்டு, பஸ் வெளிக்கிட்டிடும் என்ற அவதியில அவசரம் அவசரமாய் நடக்க, அந்தப் பிள்ளை என்னைக் கூப்பிட்டுக் கொண்டு பின்னாலை ஓடி வந்தா….
“இந்தாங்கோ….. மிச்சக் காசு…” எண்டு சொல்லி நாற்பது ரூபாயைத் தந்தது.
“பரவயில்லை… நீங்களே வைச்சிருங்கோ…”
“இல்லையம்மா…. ரெண்டு பக்கற் அறுபது ரூபா….அதுக்கு மேலை எனக்கு வேண்டாம்…. நன்றி!” எண்டு சொல்லி அந்தக் காசை என்ரை கையிலை வைச்சிட்டுத் திரும்பிப் போகுது…
…. இந்தப் பிள்ளை நிலமகள்தான்…., சந்தேகமே இல்லை…
..கிளிநொச்சி… பரந்தன்…. ஆனையிறவு….எல்லாம் தாண்டி சாவகச்சேரியிலை பஸ் போய்க் கொண்டிருக்கு….
ஊருக்குக் கிட்ட வந்தாச்சு எண்ட சந்தோசத்தைக் காணேல்லை… அது எங்கையோ துலைஞ்சு போச்சு….. மனம் இருண்டு போய்க் கிடக்கு….
….ஊரிலையும் இன்னும் இப்பிடி என்னத்தைப் பாக்கப் போறனோ……? வேண்டாமெண்டு சொல்லச் சொல்லக் கேக்கமை வெளிக்கிட்டு வந்தது பிழையோ எண்டு இப்ப மனம் அங்கலாய்க்குது…..
…..கடவுளே…! எங்கடை நாட்டுக்கு என்ன நடந்தது…? எப்பிடி இருந்த இடம்… எல்லாம் தலைகீழா மாறிப்போய்….
ஏனிப்பிடி……?
நினைக்க நினைக்க தாங்கேலாமை இருக்கு…..
….பூ வித்துக் கொண்டிருந்த அந்தப் பிள்ளையின்ரை முகமும் மாறிப் போன சனங்களும்….. வெறிச்சோடிக் கிடக்கிற முறுகண்டியான்ரை வாசலும்…. மாறி மாறி நினைவிலை வந்து அலைக்கழிக்குது…..
…… என்னாலை தாங்க முடியேல்லை….
…..ஓவெண்டு குரலெடுத்துக் கத்தி அழவேணும் போல இருக்கு….
…..என்னை நானே கட்டுப் படுத்திக் கொள்ள… – கண்ணீர் வழிஞ்சோடுது……