விழித்துக்கொள் தமிழினமே!

விழித்துக்கொள் தமிழினமே!

(பாரி)

இலங்கை அரசு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்து திக்கித் திணறுகிறது. அரச ஊழியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை சீராகக் கொடுப்பதற்குக் கூட வங்கியில் பணமில்லை. அந்நியச் செலாவணிக்கான நிதி மிகமிக மோசமடைந்துள்ளது. இவை யாவற்றுக்கும் பலவேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சீனாவின் கடன் பிடியில் இலங்கை சிக்கியிருப்பதுதான் அவற்றில் மிக முக்கியமானது. அண்மைக் காலங்களில், இலங்கைக்கும் சீனாவுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது போன்றதொரு தோற்றப்பாடு தென்பட்டாலும் அது ஒரு மாயைதான்.

அண்மையில் சீனத் தூதுவர் தனது குழுவினருடன் யாழ் வந்திருந்தார். பருத்தித்துறை முனை சென்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். இந்தியக் கரை எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று அக்கறையாக விசாரித்திருக்கிறார். மக்களின் மனதைத் தொடும் வகையில் நல்லூர்க் கோவிலில் அர்ச்சனை செய்து வணங்கியிருக்கிறார். மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்கிறார். அரியாலை கடலட்டைப் பண்ணையைப் பார்வையிட்டிருக்கிறார். மிக முக்கியமாக, மன்னார் சென்று அங்கிருந்து விசைப்படகேறி இராமர் அணை என்று சொல்லப்படும் மணல் திட்டுகளில் மூன்றாவது திட்டுவரை சென்று இந்தியாவுக்கான தூரத்தை விசாரித்து, வரலாற்றைப் பற்றிக் கதைத்து, கடலைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார். இவையெல்லாம் பத்திரிகைகளிலும் காணொளிகளிலும் வந்த அண்மைய பேசு பொருள்.

ஒரே நாட்டுக்குள் தமிழர்களுக்குத் தீர்வை எட்டுவது என்பதை ஏகமனதாக ஏற்றுக் கொண்டதாகத் தெரியும் தமிழ்க் கட்சிகளிடையே ‘தீர்வை எட்டுவது’ என்ற போர்வையில் நடைபெறும் அதிகாரப் போட்டி இப்போது பரகசியம். சிங்கள அரசுக்கு யார் கூடுதலான விசுவாசத்தைக் காட்டுவது என்ற போட்டியாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த வேளையில் நடைபெற்ற சீனப் பிரதிநிதிகளின் யாழ் வருகை அவர்கள் தமிழர்களுக்கான மீட்பராக இருக்கக் கூடுமோ என்ற எதிர்பார்ப்பினை சிலர் மனதில் எழுப்பியிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. தீர்வைத் தருகிறார்களோ இல்லையோ ஒரு தீர்மானத்துடன் தான் சீனா தமிழர்களின் மீது அன்பை அள்ளிச் சொரிகிறது. 2009 இல், பாரிய இனப் படுகொலை நடைபெற்ற நேரத்தில், எங்களுக்கு காவலரணாக நின்று இரத்தம் சிந்தியவர்களும் எங்களின் குஞ்சு குழந்தைகளும் எங்களின் இன சனம் அத்தனையும் கருகிக் கிடந்த சூழ்ச்சியின் பின்னால் சீனாவின் கரம்தான் முன்னாலும் மும்முரமாகவும் நின்றதை எங்களால் மறக்க முடியுமா? இது பல நாடுகளின் கூட்டுச் சதியாக இருந்தாலும், அதன் பெரும்பான்மைக்கு சொந்தக்காரர் சீனாதான். போருக்குப் பின்னான நாட்களில், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்னும் சீனா, தமிழர்களின் மனங்களில் இடம் பிடித்து ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்கிற சிங்களத்தின் வேலையை இலகுவாக்க முனைகிறதா? அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் அகலக்கால் வைப்பதும் ஆயிற்று சிங்களத்திற்கான ஆதரவை வலியுறுத்தி இந்தியாவிற்கு ஆப்பு வைப்பதும் ஆயிற்று என்ற ஒரு கல்லில் இரு மாங்காய்கள் என்ற திட்டமா?

இலங்கை விவகாரத்தில் தலையிட இந்தியாவிற்கு இருக்கும் ஒரே பிடி தமிழர் பிரச்சனைதான். இலங்கையுடன் செய்து கொண்ட 13ம் திருத்தச் சட்ட ஒப்பந்தம் ஒன்றையே நம்பியிருக்கும் இந்தியாவை இரகசியமாகத் தீட்டப்படும் புதிய அரசியல் யாப்பின் மூலம் கழற்றி விடும் திட்டத்தில் இருக்கிறது இலங்கை. 13இனை அமுல் படுத்துவோம், எங்களை வந்து சந்தியுங்கள் என்று தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்பின் மேல் அழைப்பு அனுப்பிக் கொண்டிருக்கிறது இந்தியா. சீன ஆதிக்கம் இந்தியாவை வலுவாகச் சூழ்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் இந்தியா காலம் தாமதிக்க இயலாது. விரைந்து நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இலங்கையின் கடன் நெருக்கடிக்கான தற்காலிக தீர்வாக 1.1 பில்லியன் டாலர் பணத்தை இந்தியா வாரி வழங்கியிருந்ததும் இதன் ஒரு வெளிப்பாடுதான். மேற்குலகத்திடம் இலங்கை கடன் பெறும்போது இனப் பிரச்சனைக்கான தீர்வு மற்றும் பொறுப்புக் கூறலுக்கு முகம் கொடுக்க வேண்டும், இதனால்தான் நிபந்தனை விதிக்காத சீனாவிடம் சரணாகதியாகியது இலங்கை. அமெரிக்கா இந்தியக் கூட்டு, இந்தியாவை மீறி அமெரிக்கா தமிழர்களுக்கு உதவ விடாது. இதனால், இப்போதுள்ள சூழலில் தமிழ் மக்களிற்கான தீர்வை முன்னிறுத்துவது ஒன்றுதான் இந்தியாவை இலங்கையுடன் இணைக்கும் பாலமாக இருக்கும்.

எங்களுக்குள் ஆயிரம் பிளவுகள். இருக்கும் 13 இல் இருந்து ஆரம்பிப்போம், இந்தியாவிடம் செல்வோம் என்று ஒரு சாரார். 13 இற்கு மேலான உள்ளகப் பொறிமுறை ஒன்று வேண்டும், இல்லையெனில் வேறு சில நாடுகளில் இருப்பதுபோல வெளியகப் பொறிமுறை ஒன்றை மேற்குலக உதவியுடன் உருவாக்க வேண்டும் என்று இன்னொரு சாராரும், எல்லாவற்றையும் தூக்கியெறிந்து விட்டு சமஷ்டி ஒன்றுக்காக மட்டுமே குரல் கொடுக்க வேண்டும் என்று இன்னொரு பகுதியினரும் பிரிந்து நின்று ஆளையாள் விமர்சிக்கிறார்கள். ஒற்றையாட்சி என்ற சிங்களத்தின் தீர்க்கமான காய் நகர்த்தலுக்கு இவர்களின் பதில் என்ன என்பதை யாரும் வெளிப்படையாகத் தெரிவிப்பதைத் தவிர்த்து விடுகிறார்கள். முன்பு வாக்குறுதி அளித்தபடி, வடக்கு கிழக்கு நிரந்தர இணைப்பைச் செய்து, தமிழ் மக்களிடம் தான் பெற்றிருக்கும் அவநம்பிக்கையையும் வெறுப்புணர்வையும் போக்க இந்தியா இம்முறையாவது தயாராக இருக்கிறதா? எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து, சரியான அரசியல் வழியையும் அதற்கான நேர்மையான தலைமையையும் தேர்ந்தெடுக்க வேண்டிய கடப்பாடு எம் மக்களுக்கே உண்டு.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )