பறிபோகுமா ஆரியகுளம்?

பறிபோகுமா ஆரியகுளம்?

யாழ் மாநகர முதல்வர் திரு விஸ்வலிங்கம் மணிவண்ணனின் ‘தூய கரங்கள், தூய நகரம்’ திட்டத்தின் ஒரு பகுதியாக யாழ் நகரில் அமைந்துள்ள வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க ‘ஆரியகுளம்’ புனரமைக்கப் பட்டுள்ளது. துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப் பட்டு, புதுப் பொலிவுடன் இன்பச் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக திருத்தி அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியதே.

திறப்புவிழாவுக்கு வந்திருந்த, அருகிலிருக்கும் ‘நாக விகாராதிபதி’ தனக்கு முன்னால் தெருவை நிறைத்த ‘கண்டிய நடனம்’, தன்னைச்சூழ தனது பரிவாரங்கள் என்று வந்ததுதான் நெருடலான விடயம். பேட்டி ஒன்றின்போது, திரு மணிவண்ணன் அவர்கள் தனக்கும் கண்டிய நடனம் தெருவில் வந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார். தமது நிகழ்ச்சி நிரலில் அப்படி எந்த நடனமும் இடம்பெறவில்லை, தேரர் தன்னுடன் அவர்களைக் கொண்டுவந்தால் நான் எப்படிப் பொறுப்பாக முடியும், அதுவும் அது தெருவோடு நின்று விட்டது என்கிறார். அது சரி… அதை யார் ஒழுங்கு செய்தார்கள் என்பது இன்றளவும் எனக்குத் தெரியாது என்று மாநகர முதல்வர் சாதிக்கிறார் பாருங்கள்…. இதை அன்றே தீர்க்க தரிசனத்துடன் கூறிய கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதை இங்கே……

நாக விகாரையில்
பூசை நடந்ததாம்
ரூபவாகினி சொல்லிற்று…..
இனி என்ன?
‘காமினி ரீ றூம்’
கதவுகள் திறக்கும்!
சிற்றி பேக்கறியும்
சீனிச் சம்பலும்
நகரப் பகுதியில்
அறிமுகமாகும்!

புத்தன் கோவிலுக்கு
அத்திவாரம் போட
ரத்வத்த வரக்கூடும்!
சிங்கள மகாவித்தியாலயம்
திரும்ப எழுமா?
எழலாம்….

வெசாக் கால வெளிச்சக் கூட்டை
எங்கே கட்டுவார்?
ஏன் இடமாயில்லை?
வீரமாகாளியின்
வெள்ளரசிற் கட்டலாம்,
முனியப்பர் கோவில்
முன்றலிலும் கட்டலாம்.
பெருமாள் கோவில் தேரிலும்
பிள்ளையார் கோவில்
மதிலிலும் கட்டலாம்!

எவர்போய் ஏனென்று கேட்பீர்?
முற்ற வெளியில்
‘தினகரன் விழாவும்’
காசிப்பிள்ளை அரங்கில்
களியாட்ட விழாவும்
நடைபெறலாம்!
நாக விகாரையிலிருந்து
நயினா தீவிற்கு
பாதயாத்திரை போகும்!
பிரித் ஓதும் சத்தம்
செம்மணி தாண்டி வந்து
காதில் விழும்!

ஆரிய குளத்து
தாமரைப் பூவிற்கு
அடித்தது யோகம்!
பீக்குளத்து பூக்களும்
பூசைக்குப் போகும்!
நல்லூர் மணி
துருப்பிடித்துப் போக
நாக விகாரை மணியசையும்!

ஒரு மெழுகுவர்த்திக்காக
புனித யாகப்பர் காத்துக் கிடக்க
ஆரிய குளத்தில்
ஆயிரம் விளக்குகள் சுடரும்!
எம்மினத்தின்
இளைய தலைமுறையே,
கண் திறக்காது கிடக்கின்றாய்.
பகைவன்
உன் வேரையும்
விழுதையும் வெட்டி
மொட்டை மரமாக்கி விட்டான்!!

பி.கு: ஆரியகுளத்தை புனிதப் பிரதேசமாக மாற்றுமாறு யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதி ஶ்ரீ விமல தேரர் தெரிவித்துள்ளார் என்பது பிந்திய செய்தி.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )