
தமிழர்களின் இராணுவ மரியாதை
உலகிலுள்ள எல்லா இராணுவக் கட்டமைப்பிலும் இராணுவ மரியாதை
( சல்யூட் ) என்பது மிக முக்கியமானது. இராணுவ மரியாதை இல்லாத ஒரு இராணுவக் கட்டமைப்பை பார்க்கவே முடியாது. மேலைத்தேய நாடுகளில் அரச குடும்பத்தினருக்கும் பிரபுக்களுக்கும் வணக்கம் வைப்பதற்கான மரியாதை முறையை எல்லாப் பொது மக்களும் கடைப்பிடிப்பார்கள். சிறு பிள்ளைகள் கூட இலாவகமாக வணக்கம் வைப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதுகூட இராணுவ வணக்க முறையை ஒத்ததுதான்.
பல நாடுகளின் இராணுவத்தினரும், சில விடுதலைப் போராட்ட அமைப்பினரும் தத்தமது பாணியில் இராணுவ மரியாதை முறையை மாற்றியமைத்துக் கொண்டுள்ளனர். சகல கட்டமைப்புகளையும் கொண்டு ஒரு அரசை நிர்வகித்துக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு உலகின் தலைசிறந்த விடுதலைப் போராட்டங்களில் ஒன்று. ஆரம்பத்தில் எல்லா நாடுகளும் பின்பற்றும் சாதாரண இராணுவ மரியாதை முறைமையே அங்கு பின்பற்றப் பட்டாலும், பின்னர் தலைவர் பிரபாகரன் தமிழர்களுக்குரிய தனிச்சிறப்புடன் ஒரு இராணுவ மரியாதையை நடைமுறைப் படுத்தியிருந்தார். சாதாரணமாக மரியாதை செலுத்தும்போது இரு கைகளையும் நெஞ்சோடு கூப்புவது தமிழர் பண்பாடு.
அதனோடு இணைந்ததாக, இடது கையை விரைப்பாக கீழே தொங்கவிட்டு, வலது கையின் பெரு விரல் கூப்புவதுபோல நெஞ்சோடு ஒட்டியிருக்க விரைப்பாக நிற்பதாக இந்த இராணுவ மரியாதை அமைந்துள்ளது. தமிழீழத் தேசியக் கொடி ஏற்றலின் போது, தமிழீழ தேசிய நிகழ்வுகளின் போது, அணிவகுப்புகளின்போது என்று பல இடங்களில் இந்த இராணுவ மரியாதை நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பதை புகைப்படங்களில் பார்க்கக்கூடியதாக உள்ளது.