13 ஆவது திருத்தம் நாட்டை பிளவுப்படுத்தும் சிங்கள மக்களே வீதியில் இறங்குங்கள்

13 ஆவது திருத்தம் நாட்டை பிளவுப்படுத்தும் சிங்கள மக்களே வீதியில் இறங்குங்கள்

வடக்கிற்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாட்டின்

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் -சரத் வீரசேகர அழைப்பு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக நாட்டை பிளவுப்படுத்துமாறு புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும்,தமிழ் அரசியல் கட்சிகளும் ஜனாதிபதிக்கு கடுமை அழுத்தம் பிரயோகிக்கின்றன.எனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்கிய மக்கள் தேசியத்தை பாதுகாக்கவும் போராட்டத்தில் இறங்கவேண்டுமென முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான சரத் வீரசேகர அழைப்பு விடுத்தார்.

அத்துடன் 13 ஆவது திருத்தம் ஊடாக நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் ,விடுதலை புலிகள் அமைப்பின் மீள் எழுச்சிக்கான முயற்சிகள் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் பின்னணியில் வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகும் எனவும் அவர் எச்சரித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

வீடு தீப்பற்றி எரியும் போது அந்த தீயில் இருந்து புகைப்பிடிப்பதற்காக தீ எடுப்பதை போன்று தமிழ் அரசியல் கட்சிகள் பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக நாட்டை பிளவு படுத்த முயற்சிக்கிறார்கள்.நாட்டை பிளவுப்படுத்துமாறு புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும்,தமிழ் அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கடும் அழுத்தம் பிரயோகிக்கின்றன.

இலங்கை -இந்திய ஒப்பந்தத்தில் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகார பகிர்வு தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. இலங்கையானது நிலப்பரப்பினால் சிறிய நாடு, ஒன்பது மாகாணங்கள் ஊடாக அரச நிர்வாகம் வேறு படுத்தப்பட்டுள்ளமை அவசியமற்றது.

இலங்கையின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வரலாற்று ரீதியில் பல்லாயிரம் கணக்கானோர் உயிர்த் தியாகம் செய்துள்ளார்கள். ஒருமைப்பாட்டை முன்னிலைப்படுத்தித் தான் 69 இலட்ச மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தேவைகளுக்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.

இந்தியாவின் தேவைக்காகவே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டது.நிறைவேற்றுத்துறையை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முன்னிலைப்படுத்தி செயல்படும் இலங்கையில் 13 ஆவது திருத்தம் அவசியமற்றது.13 ஆவது திருத்தம் ஊடாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு பகிரப்பட வேண்டும் என தமிழ் தலைமைகள் அழுத்தம் பிரயோகிக்கிறார்கள்.

காணி அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். ,மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் வழங்க வேண்டிய தேவை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது,ஆகவே காணி அதிகாரம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய தேவை கிடையாது.பொலிஸ் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் மாத்திரம் பொறுப்பாக்கப்பட வேண்டும்.

நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை தீர்மானிக்கும் அதிகாரத்தை அரசியல்வாதிகளிடம் பொறுப்பாக்கினால் பொலிஸ் ஆணைக்குழு எவ்வாறு சுயாதீனமாக செயற்படும்?.நாட்டில் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளதுடன்,விடுதலை புலிகள் அமைப்பின் மீள் எழுச்சிக்கான முயற்சிகள் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.இவ்வாறான பின்னணியில் வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகும்

அரசியமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஒருசில விடயங்கள் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன.மாகாண சபை முறைமை வெள்ளை யானை போன்று பயனற்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.நாட்டை பிளவு படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்கிய மக்கள் தேசியத்திற்காக போராட்டத்திலும் ஈடு பட வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )