
தினேஷ் சாப்டர் படுகொலை; கனத்தை மயானத்துக்குள் கார் சென்றது எப்படி ?
இலங்கையின் பிரபல காப்புறுதி நிறுவனத்தின் தலைவரான வர்த்தகர் வர்த்தகர் தினேஷ் சாப்டர் படு கொலை செய்யப்பட்ட கடந்த 15ஆம் திகதியன்று பொரளை பொது மயானத்துக்கு, அவர் சென்ற வீதிகள் தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணை வளையத்துக்குள் பலரும் கொண்டு வரப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய குறித்த வீதிகளிலுள்ள சி.சி.ரி.வி காணொளிகள் பெறப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தினேஷ் சாப்டரின் (51 வயது) கொலை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வெவ்வேவேறு பிரிவுகளின் ஊடாக தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் கீழ் இயங்கும் மனித கொலை மற்றும் திட்டகுற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை பிரிவின் ஊடாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளரான தினேஷ் சாப்டர் கிரிக்கெட் நிர்வாகியும் வர்த்தகருமான சந்திரா சாப்டரின் மகனாவார்.
பொரளை பொது மயானத்துக்கு அருகில், கைகளும், கால்களும் கட்டப்பட்ட நிலையில், பலத்த காயங்களுடன், காரிலிருந்து மீட்கப்பட்ட தினேஷ் சாப்டர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பில் இதுவரையில் சுமார் 23 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.பொரளை பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு அமைய இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டவர்களுக்கு இடையில் மூத்த கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸும் உள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றமும் அவரின் வெளிநாட்டுப் பயணத்தைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.உயிரிழந்த வர்த்தகரிடம் இருந்து பெறப்பட்ட 143 கோடி ரூபா கடன் தொகை தொடர்பில் நிலவி வரும் சர்ச்சை தொடர்பில் அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் பிரபல காப்புறுதி நிறுவனத்தின் தலைவரான வர்த்தகர் தினேஷ் சாப்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவிடமும் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்டதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கொலை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைப்பிரிவிற்கு நேற்று அழைக்கப்பட்டிருந்த சமரவிக்ரமவிடம் சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
தினேஷ் சாப்டரின் கொலை சம்பந்தமாக சமுதித்த சமரவிக்ரம, சம்பவம் நடந்த தினத்திலேயே செய்தியாளரும் விமானப்படையின் முன்னாள் அதிகாரியுமான கீர்த்தி ரத்நாயக்கவுடன் இணையத்தள வலைத் தளத்தில் நடத்திய சுமார் 40 நிமிடம் ஓடக்கூடிய பேட்டியை அடிப்படையாக கொண்டு இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது எனவும் அந்த பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டியின் போது கீர்த்தி ரத்நாயக்க, பொலிஸாரின் விசாரணை, கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என சந்தேகிக்கப்படும் நபர் தொடர்பிலும் தகவல்ளை வெளியிட்டிருந்தார்.
ஆங்கில கிரிக்கெட் வர்ணையாளர் ஒருவரிடம் தினேஷ் சாப்டர் உட்பட பலர் பல பில்லியன் ரூபா பணத்தை முதலீடு செய்திருந்தாகவும் முதலீடு செய்த அந்த பணம் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் கூறியிருந்தார்.
தினேஷ் சாப்டர், 15ஆம் திகதி பிற்பகல் 2.05 மணியளவில் கொழும்பு 7, மால் வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து 143 கோடி ரூபாவை மோசடி செய்த பி.ரி.(BT) என்ற வர்த்தகரை சந்திப்பதற்காக புறப்பட்டுள்ளார்.இது தொடர்பில் தமது நிறுவனத்தின் செயல் அதிகாரிக்கு அவர் தகவல் தெரிவித்த நிலையில், லைவ் லொகேஷனை அனுப்புமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மதியம் 2.05 மணியளவில் தினேஷ் சாப்டர் வீட்டை விட்டு வெளியேறி, பிற்பகல் 2.48 மணிக்கு,தனது மனைவி மற்றும் நிர்வாக அதிகாரியுடன் நேரலை இடத்தைப் பரிமாறிக்கொண்டுள்ளதாகவும், அவர் பொரளை மயானத்தில் இருந்தமையை உறுதி செய்துள்ளது.இருப்பினும், இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, அது தொடர்பான இணைப்புகள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின் படி, தினேஷ் சாப்டரின் கார், காசல் வீதிக்கு அருகில் உள்ள பண்ணை வீதியில் உள்ள வாயில் ஊடாக பொரளை கனத்தை மயானத்திற்குள் நுழைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இத்தகவலின் அடிப்படையில் பொரளை மயானத்திற்கு அருகில் கித்துல்வத்த வீதியூடாக ராஜகிரிய நோக்கி சென்ற நிர்வாக அதிகாரி தினேஷ் சாப்டரின் கார் பொரளை மயானத்தில் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டுள்ளார். பின்னர் கைகள்
கம்பியால் கட்டப்பட்டிருப்பதும், கழுத்தில் கம்பியால் கட்டப்பட்டிருப்பதும், மார்புப் பகுதியும் இறுக்கமான முறையில் கட்டப்பட்டிருப்பதினையும் அவதானித்து வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொரளை பொது மயானத்தில் இறுதிக் கிரியைகளுக்காக வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு இரண்டு இடங்கள் உள்ளன, இவ்வாறானதொரு பின்னணியில் படுகொலை செய்யப்பட்ட தினேஷ் சாப்டரின் கார் மயானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது.மேலும், பொரளை பொது மயானத்தில் அன்றைய தினம் 6 மரண இறுதிக்கிரியைகள் இடம்பெற்றதாகவும், இதனால் அதிகளவான வாகனங்கள் அங்கு வந்துள்ளதுடன் அதிகளவான மக்கள் மயானத்துக்குள் பிரவேசித்துள்ளதாகவும் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கனத்தை மயானத்துக்குள் பிரேத வண்டிகளைத் தவிர வேறு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை என்ற நிலையில் இவரது கார் எப்படி கனத்தை மயானத்துக்குள், அதுவும் விமானப்படையினருக்கென ஒதுக்கப்பட்ட தனியானதோர் இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் நின்றது குறித்து தற்போது விசாரணைகள் நடைபெறுகின்றன.
மேலும் கனத்தை மயானத்துக்குள் செல்வதற்கு 5 நுழைவாயில்கள் இருக்கின்றன. ஒரு நுழைவாயில் திருத்த வேலைகள் காரணமாக மூடப்பட்டுள்ள நிலையில் ஏனைய நான்கு நுழைவாயில்களிலும் தனியார் பாதுகாப்பு பிரிவினர் கடமையில் இருந்த நிலையில் இவரது கார் எவ்வாறு உள்ளே சென்றது என்பது குறித்து கொழும்பு மாநகரசபையும் பொலிஸாரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கமைய, தொழிலதிபர் தினேஷ் சாப்டரின் கொலை தொடர்பான தகவல்களைக் கண்டறிய அவர் பயணித்த வீதியைச் சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட சிசிடிவி கமராக்களின் காட்சிகள் சரிபார்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய 5 பொலிஸார் கொண்ட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்,கொலை சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை இந்நாட்டில் இடம்பெற்ற திறைசேரி பிணைமுறிச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தினேஷ் ஷாப்டர் வழங்கிய சாட்சியத்தின் மூலம் பல உண்மைகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தினேஷ் ஷாப்டர் வழங்கிய வாக்குமூலம் பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பக்கம் 223 இல் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்,அக்காலத்தில் தினேஷ் ஷாப்டர் வழங்கிய சாட்சியங்கள் பலருக்கு சிக்கலாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

