
3 கோரிக்கைகளையும் ஜனாதிபதி ஏற்றுள்ளார்; சுமந்திரன் எம்.பி. கூறுகிறார்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயங்கள், எஞ்சி இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளினுடைய விடுதலை அதேபோல காணி அபகரிப்பு என்கின்ற பிரதானமான விடயம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு.இதனை முதலாவது பேச்சு வார்த்தையில் ஜனாதிபதியும் ஏனையவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தினால் நடத்தப்பட்ட இரத்ததான முகாமின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
வடகிழக்கில் அதி உச்ச அதிகார பகிர்வாக எங்களுடைய உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஒரு சமஸ்டிக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டுமென அனைத்து தமிழ் கட்சிகள் சேர்ந்து ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கையில் தெட்டத் தெளிவாக சொல்லி இருக்கின்றோம். இதைக் கேட்டு புரிந்து கொள்கின்றவர்களுக்கு அல்லது வாசித்து புரிந்து கொள்கின்றவர்களுக்கு எங்களுடைய நிலைப்பாடு என்னவென்று தெட்டத் தெளிவாக தெரியும்.
தூங்குவதுபோல பாசாங்கு செய்பவர்களை தட்டி எழுப்ப முடியாது. ஆகையினால் வெளிப்படையாக எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் பகிரங்கப்படுத்தி தான் இந்த பேச்சுவார்த்தைக்கு சென்றிருக்கின்றோம்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதைத்தான் நாங்கள் முன் வைத்திருக்கின்றோம் இதே வசனங்கள் தான் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தொடர்ச்சியாக இருந்து வருகின்றன.அதை நாங்கள் பகிரங்கமாக வெளிப்படையாக பல தடவைகள் பாராளுமன்றத்திலேயும் ஜனாதிபதியோடும் உரையாடுகின்ற போதும் இவற்றை முன்வைத்துதான் இந்த பேச்சு வார்த்தை நடத்துகிறோம்.
இந்தப் பேச்சுவார்த்தையிலே மூன்று சமாந்தரமான அணுகுமுறைகளை கையாளுகின்றோம். மூன்றும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும் என்பது எமது சிந்தனை.அதனை முதலாவது பேச்சு வார்த்தையில் ஜனாதிபதியும் ஏனையவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
உடனடி பிரச்சினைகளாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயங்கள், எஞ்சி இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளினுடைய விடுதலை அதேபோல காணி அபகரிப்பு என்கின்ற பிரதானமான விடயம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு.அவை நடைபெறுகின்ற அதே வேளையில் ஏற்கனவே அதிகார பகிர்வு சம்பந்தமாக அரசியல் அமைப்பு சட்டத்தில் இருக்கின்ற விடயங்கள் அமுல்படுத்தப்பட்டு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும், மூன்றாவதாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திலே நாங்கள் ஏற்கனவே சொன்ன அடிப்படையிலே ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.
இந்த மூன்று விடயங்களும் ஜனாதிபதி தானாகவே சொல்லி இருக்கின்ற காலக்கெடு அதாவது இலங்கை சுதந்திரம் அடைந்து 75ஆவது ஆண்டு நிறைவை அடுத்த வருடம் பெப்ரவரி நான்காம் திகதி கொண்டாடுவதற்கு முன்பதாக செய்து முடிக்க வேண்டும் என ஜனாதிபதி சொல்லி இருப்பதை நாங்கள் முற்று முழுதாக ஏற்று இருக்கின்றோம். அந்த காலகட்டத்துக்குள்ளே இந்த மூன்று விடயங்களில் ஒரு இணக்கப்பாடு, முடிவு ஏற்பட வேண்டும் என்பதனை நாங்கள் நிபந்தனையாக சொல்லி இருக்கின்றோம் என்றார்.

