வடமராட்சி கடலில் தத்தளித்த 104 ரோகிங்கியர்களும் யாழில்

வடமராட்சி கடலில் தத்தளித்த 104 ரோகிங்கியர்களும் யாழில்

-பங்களாதேஷ் ஊடாக இந்தோனேசியா செல்ல முயன்ற போது மீட்கப்பட்டனர்

-காங்கேசன்துறை கொண்டு செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை

பங்களாதேஷில் இருந்து படகு மூலம் தப்பிச் செல்ல முயன்ற நிலையில் கடலில் தத்தளித்த 104 மியான்மார் – ரோகிங்கியா அகதிகள் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் மீட்கப்பட்டதுடன், அனைவரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களில் உடல் நிலை பாதிக்கப்பட்ட சிலர் நேற்று தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பங்களாதேஷில் இருந்து இந்தோனேசியா நோக்கி 104 பேருடன் பயணித்த படகே வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தத்தளித்த நிலையில் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டனர்.

படகிலிருந்த அனைவரும் வைத்தியர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மருத்துவ பரிசோதனையில் சிறிய காயமடைந்த மற்றும் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களே நேற்று தெல்லிப்பழை ஆதார வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை பெரிய மீன்பிடிக் படகொன்று நூற்றுக்கணக்கானவர்களுடன் தத்தளித்துக்கொண்டிருந்ததை அவதானித்த உள்ளூர் மீனவர்கள், உடனடியாக வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்துக்கு தகவல் வழங்கினர். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அமைச்சர் ஊடாக கடற்படைத் தளபதிக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து கடற்படையினர் 3 படகுகளை அந்த இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சென்ற கடற்படையினர் படகுடன் அகதிகளை மீட்டு நேற்று முன்தினம் இரவே காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி நேற்று ஞாயிற்றுக்கிழமைகாலை கிடைத்ததைத் தொடர்ந்து படகில் இருந்தவர்கள் கடற்படையினரால் முகாமிற்கு மாற்றப்பட்டதுடன், அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதிகம் உடல்நலப் பிரச்சினைகளுடன் அடையாளம் காணப்பட்ட நான்கு பேர் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷில் இருந்து இந்தோனேசியாவுக்கு தப்பிச் சென்ற போது, தமது மீன்பிடி படகு நடுக்கடலில் இயந்திரக் கோளாறு காரணமாக, மிதக்கத் தொடங்கியதாக படகில் இருந்த அகதிகள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் வழங்கிய அகதிகளுக்கான அடையாள அட்டையை இவர்கள் வைத்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்படை, தெல்லிப்பளை பிரதேச செயலாளர் காரியாலயம், பொலிஸார் மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவரகத்தின் அதிகாரிகள், இவர்களை முகாமில் தங்கவைப்பது குறித்த கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

நீர்கொழும்பில் உள்ள அகதிகள் முகாமுக்கு இவர்களை மாற்றுவதே சிறந்தது என பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், மீட்கப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )