
ராஜீவ் குடும்பத்தை நானோ என்னை அவர்களோ சந்திக்கப் போவதில்லை
ராஜீவ் காந்தி குடும்பத்தினரை நான் சந்திக்கப்போவதுமில்லை அவர்கள் என்னை அழைக்கப்போவதுமில்லை எனத்தெரிவித்த நளினி ,தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொலிஸ் துறையில் இருந்தவர். அப்படியிருக்கும் போது அவர் எப்படி எனக்கு விடுதலை தருவார் என எதிர்பார்க்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைப் போல தங்களையும் விடுவிக்க வேண்டும் என நளினி உள்ளிட்ட ஆறு பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் 6 பேரை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது.இதனைத் தொடந்து நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்டோர் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலை பெற்றுள்ள நளினி மற்றும் அவரது வழக்கறிஞரும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்
அப்போது செய்தியாளர் ஒருவர் நளினியிடம், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தியை சந்திப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நளினி, “கடவுளே! தயவுசெய்து வேண்டாம்” இது கற்பனையான கேள்வி. அவர்கள் என்னை அழைக்கப்போவதும் இல்லை. நான் அவர்களை சந்திக்கப்போவதும் இல்லை.” என்றார்.
நளினி மேலும் கூறுகையில்,.
சிறைவாசம் பெரிய பல்கலைக்கழகம் அங்கு நிறைய விடயங்கள் கற்று கொண்டேன். நான் விடுதலையான நிலையில் 32 ஆண்டுகள் என்னை பிரிந்திருந்த எனது மகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். அம்மா நீ இனி உன் வாழ்க்கையை வாழ வேண்டிய தருணம் இது” என என்னிடம் என் மகள் சொன்னாள். நான் செய்யாத தவறுக்கு தண்டனையை அனுபவிக்க வேண்டும் என என் தலையில் எழுதியிருந்தது. இதற்கு யார் என்ன செய்ய முடியும்?
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 32 ஆண்டுகள் சிறைவாசம் பல பாடங்களை கற்று தந்தது. சிறையிலிருந்து வெளிவர மேலும் சிறிது காலம் ஆகும் என்ற நினைத்த நேரத்தில் வெளியே வந்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கணவர் தெரிவித்தார். சிறையில் இருந்த 32 ஆண்டுகளில் நான் எந்த தவறும் செய்ததில்லை,. சிறையில் இருந்த நேரத்தில் பல தடைகளுடனே 6 ஆண்டு உயர்கல்வி படித்து முடித்தேன்
சிறையில் இருந்தபோது தையல்,ஓவியம்,சேலை டிசைன்,கைவினை பொருட்கள் செய்வது,போன்ற பல சுய தொழில்களை கற்று கொண்டேன். ஒரு மாத காலம் சிறை விடுப்பு ( பரோல் ) வழங்கிய முதல்வருக்கு நன்றி மேலும் அகதிகள் முகாமில் இருந்து என் கணவர் முருகனை விடுவித்து, என் மகளுடன் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.அதுவரையில் கணவர் முருகனுடன் வசிக்க அனுமதி கேட்டுள்ளேன்
மத்திய மாநில அரசுகளுக்கும் மற்றும் தமிழக மக்கள் எங்கள் மீது செலுத்திய அன்பிற்கும் நன்றி. சிறையில் இருந்தாலும் என் குடும்பத்தினரின் நினைவில்தான் வாழ்ந்தேன். இந்த வழக்கில் கைதான அன்றிலிருந்து வெளியில் வருவோம் என்ற நம்பிக்கை இருந்தது. விரைவில் சிறையிலிருந்து வெளியே செல்வோம் என்று எண்ணிய நேரத்தில் தூக்கு தண்டனை என்ற தீர்ப்பு வந்தவுடன் வாழ்க்கையை முடித்து கொள்ள வேண்டுமென பல முறை நினைத்ததுண்டு.முதல்வர் சந்திக்க நினைத்தால் நிச்சயம் அவரை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவிப்போம்.
நான் விடுதலையானது குறித்து சிறை காவலர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி. சத்தியமாக பொது வாழ்க்கைக்கு வரமாட்டேன்.லண்டனுக்கு சென்று எனது மகளுடன் வசிக்கவே விரும்புகிறேன். தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி. இந்த 10 மாத சிறை விடுப்பு எனக்கு பெரும் உதவியாக இருந்தது .
பிரதமர் குண்டு வெடிப்பு நடைபெற்ற சம்பவ இடத்திற்கு சென்றதாக மட்டுமே என் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டேன் ஆனால் கைதான முதல் நாளிலிருந்தே தூக்கு தண்டனை கைதி போலவே நடத்தப்பட்டேன். மருத்துவர்கள் பிரசவம் பார்க்க முடியாது என்று கூறிய பின்பே சிறையின் கதவை திறந்தனர். அதுவரையில் கைது செய்யப்பட்ட நாள் அன்றிலிருந்தே 24 மணி நேரமும் சிறையின் கதவை திறக்கவில்லை.
பிரியங்கா காந்தி சிறையில் என்னை சந்தித்த போது அவரது தந்தை இறப்பின் காயம் குறித்து மனம் விட்டு பேசி கண் கலங்கினார் பிரதமரின் இறப்பு ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம்,
அப்போது செய்தியாளர் ஒருவர் 30 ஆண்டுகள் கடந்த விடுதலையான பின்பும் கணவர் முருகனால் வீட்டிற்கு வர முடியாத சூழல் நிலவுகிறதே இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டார். இந்த கேள்வியைக் கேட்டவுடன் நளினியால் சில நொடிகள் எதுவுமே பேச முடியவில்லை. அவரது கண்களில் பரிதவிப்பு அனைவராலும் பார்க்க முடிந்தது. கணவர் வீட்டிற்கு வர முடியாத சூழல் மகிழ்ச்சியானதாக இல்லை என்பது போலத் தலையசைத்தார்.

