
தமிழருக்கான தீர்வு என்றால் அது வடக்கு கிழக்குக்கான தீர்வாகவே இருக்க வேண்டும்; தனித்து ஒரு மாகாணத்துக்கு அல்ல என்கிறார் சாணக்கியன் எம்.பி .
தமிழருக்கான தீர்வு என்றால் அது வடக்குக் கிழக்குக்கான தீர்வாகத்தான் இருக்க வேண்டும்.அதனைவிடுத்து ஓர் மாகாணத்திற்கான தீர்வாக அது இருக்க முடியாது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் 15ஆவது ஆண்டு நிறைவினை கொண்டாடும் முகமாக பெரியகல்லாறு கலா சார மண்டபத்தில் ஆண்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
தற்போதைய நிலையில் நாட்டினுடைய பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. விலைவாசி எகிறிக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் தற்போது பொருட்கள் காணப்பட்டாலும், அதனை வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லாத நிலை காணப்படுகிறது.எங்களுடைய வீதிகள் மற்றும் பாடசாலைகள், வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அத்தோடு எமது இளைஞர், யுவதிகளுக்காக வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு பல தேவைகள் இருக்கும் போது, இந்த அனைத்து தேவைகளையும் நாங்கள் பூர்த்தி செய்வதாக இருந்தால், தமிழர்களுக்காக எமது வடக்கு- கிழக்கில் நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தாலேதான் நாம் எமது தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யலாம்.
அவ்வாறு இல்லாவிட்டால், ஒரு சிலர் அமைச்சுப் பதவிகளை எடுக்கலாம். ஒரு சிலர் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை எடுக்கலாம்.அந்த அமைச்சுப் பதவி, இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வைத்து, ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும்தான் அவர்கள் உதவி செய்யலாம்.பொதுவாக எமது வடக்கு – கிழக்கில் இருக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டுமாக இருந்தால், எமது நீண்ட நாள் கனவு நனவாக வேண்டும்.
இந்நிலையில் எமது ஜனாதிபதி அண்மையில், எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குள் வடக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு எட்டப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நாம் ஜனாதிபதிக்கு ஒன்றைக் கூற விரும்புகிறோம். நீங்கள் தமிழருக்கான தீர்வு என்றால் அது வடக்குக் கிழக்குக்கான தீர்வாகத்தான் இருக்க வேண்டும்.தமிழர் வாழும் பிரதேசமான வடக்கு- கிழக்குக்கான ஒரு பொதுவான தீர்வை வழங்காவிட்டால், இந்தப் பிரச்சினை இன்னும் 75 வருடங்கள் தொடரவே செய்யும்.
இவ்வாறான நிலையில் சில அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் வடக்கில் மக்களின் சில காணிகள் விடுவிக்கப்படும் என்ற வாக்குறுதிகள் வரவேற்கப்பட வேண்டியவையே என்றார்.

