
இந்த நான்கு பேரும் எங்கே செல்வார்கள்?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா் ஆகிய ஆறு பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
இவர்களில் முருகன் என்ற ஸ்ரீஹரன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையின்போது அவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதனை நிரூபிக்க அவர்கள் எந்த ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்கவில்லை.
இப்போது எழுந்திருக்கும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், விடுதலை செய்யப்பட்ட பிறகு, இந்த நால்வரும் எங்கே செல்வார்கள்? என்பதுவே.
இவர்களில், இந்திய குடிமகள் நளினியை திருமணம் செய்து கொண்ட முருகன், இந்தியாவில் தங்கியிருக்க உரிமை பெறலாம். ஏன் என்றால், இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955ன் பிரிவு 5(1)(சி)-ன்படி, இந்தியக் குடிமகனை/மகளை திருமணம் செய்யும் நபர், இந்தியக் குடியுரிமை கோரலாம் என்கிறது. ஆனால் இதுவும் சந்தேகம்தான். ஏனென்றால், நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் உரிமை கோர இயலாது.
மற்ற மூன்று பேரைப் போலவே, முருகன் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்து, தங்கியிருந்தார். எனவே, இவர்கள் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் எங்குச் செல்வார்கள்? எங்கே செல்ல வாய்ப்பு இருக்கிறது? என்பது குறித்து ஆராய்ந்ததில் கிடைத்த சில தகவல்கள்..
நான்கு பேரும் சிறையில் இருந்து வெளியே வந்ததும், இந்திய குடிமக்களில் யாரேனும் ஒருவர், இவர்களுக்காக உறுதிப்பத்திரம் வழங்கி, இலங்கை அகதிகள் முகாம் இருக்கும் மாவட்டத்தின் ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு விண்ணப்பம் அளித்து, இவர்கள் அனுமதி அளிக்கும்பட்சத்தில், நால்வரையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இவர்கள் இந்தியாவில் தங்கியிருப்பதில், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட இதர விவகாரங்களைக் கருத்தில் கொண்டுதான் மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும் அனுமதி அளிக்க முடியும்.
இரண்டாவது, சிறையில் இருந்து அவர்கள் வெளியே வந்ததுமே, அவர்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு, உடனடியாக இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படலாம். உரிய ஆவணங்கள் இன்றி, இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, இலங்கை முகாம்களில் தங்கியருக்கும் இதர குடிமக்களுடன் ஸ்ரீஹரன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தங்கவைக்கப்படலாம்.
மூன்றாவது, இலங்கை அரசு, இவர்கள் நான்கு பேரும், தங்கள் நாட்டு குடிமக்கள் என்பதற்கான விவரங்கள் மற்றும் ஆவணங்களை அளித்து, முறைப்படி அவர்களை இலங்கைக்கு நாடுகடத்துமாறு கோரிக்கை விடுக்கலாம். அவ்வாறு கோரிக்கை விடுத்தால், நால்வரின் சம்மதம் பெற்று நால்வரும் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம். ஆனால், இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு வாழும் மக்களே அகதிகளாக இந்தியாவுக்கு வரும் நிலையில், இவர்கள் நால்வரும் இலங்கைச் செல்ல விரும்புவார்களா என்பது கேள்விக்குறிதான்.
நான்காவதாக, இவர்கள் இந்தியா அல்லது வேறு நாடுகளுக்கு தஞ்சம் கோரி கடிதம் அனுப்பலாம். இந்தியா அல்லது வேறு எந்த நாடு இவர்களை தஞ்சமடைய அனுமதிக்கிறதோ, அந்த நாட்டுக்கு இவர்கள் நால்வரும் முறைப்படி அனுப்பி வைக்கப்படலாம்.
அல்லது, இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள், எங்கே செல்வார்கள் என்ற கேள்வி எழுந்திருப்பது குறித்து தமிழக அரசு கவனத்தில் எடுத்து, சட்டத்திட்டங்களுக்கு உள்பட்டு ஏதேனும் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிந்திய தகவலின் படி,நளினியை திருமணம் செய்து கொண்ட முருகன் லண்டனிலுள்ள மக்களிடமும் யாழ்ப்பாணம் வடமராச்சியிலுள்ள தாயாரிடம் சாந்தனும் செல்லவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

