
இரத்தக் களரியாகுமா இலங்கைத்தீவு?
ஆயுதங்கள் எதுவுமின்றி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் நித்திரையில் இருந்தபோது,நடுநிசியில்,ஒரு வன்முறை அரங்கேறி இருக்கிறது. புதிய சனாதிபதி தனக்குக் கிடைத்திருக்கும் அளவில்லா அதிகாரங்களை அப்பாவி மக்கள் மீது பிரயோகித்து, தனது பதவிச்செருக்கைக் காட்டத் தொடங்கி விட்டார்.
என்ன நடந்தது?
சனாதிபதி மாளிகையின் ஒருபகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களால் நிர்வகிக்கப்படும் நூலகம் இயங்குவதும், அதே கட்டடத்தின் மறுபகுதியில் பொலிஸார் நிலை கொண்டுள்ளதும் தெரிந்ததே. 22/07/2022 அன்றைய தினத்தில்சனாதிபதி மாளிகையை முற்றாக அரசிடம் ஒப்படைப்பது என்றும், அரசை நடத்த ரணிலுக்கு மூன்று மாதகாலம் அவகாசம் கொடுத்துப் பார்க்கலாம் என்றும் முடிவெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், 21/07/2022 அன்றே வெளியேற்றத்திற்குரிய நடவடிக்கைகளிலும் இறங்கியிருந்தனர். ரணில் பதவிக்கு வந்தவுடன், பண்டாரநாயக்க சிலையைச் சூழ 50 மீற்றர் சுற்றுவட்டாரத்தினுள் எந்த ஆர்ப்பாட்டமும் நடைபெறக் கூடாது என்ற கொழும்பு கோட்டை நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, அன்றே செஞ்சிலுவைச் சங்கக் கூடாரம்கூட அகற்றப்பட்டு விட்டது. போராட்டக்காரர்களின் கோசங்கள் கூட அமைதியாகிவிட, பிசுபிசுத்துப் போகுமா போராட்டம் என்ற ஐயம் எழுந்தது என்னவோ உண்மைதான்.
அரச கட்டடங்களைக் கைப்பற்றியோர் மீது நடவடிக்கை, போராட்டத்தில் மும்முரமாக நின்றவர்கள் மீது விசாரணைகள், கைதுகள், முந்தைய வருட போராட்டம் ஒன்றைக் காரணம் காட்டி பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத் தலைவர் கைது என்று பதவி கிடைக்கும்வரை அமைதியாக இருந்த ரணில் அதிரடி காட்டியபோதே,நிலைமை மாறப் போவதில்லை என்பது ஊகித்ததுதான். 22/07/2022 நள்ளிரவில், அத்தனை பொலிசாரும் திடீரென்று காணாமற்போக, 5000இற்கும் அதிகமான விசேட அதிரடிப் படையினரால் ‘கோத்தா கோ கம’, ‘ரணில் கோ கம’ என்று ‘அரகாலியா’வின் அத்தனை இடங்களும் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டு, கூடாரங்கள் சிதைக்கப் பட்டிருக்கின்றன. போராட்டக்காரர்கள், பத்திரிகை நிருபர்கள், சட்டத்தரணிகள், கூடாரங்களில் படுத்திருந்த குழந்தைகள், முதியவர், காது கேளாதவர், வாய் பேச முடியாதவர் என்ற எந்த வேறுபாடும் இன்றி தாக்கப்பட்டிருக்கின்றனர். கடுமையான காயங்களுக்கு உள்ளான பலரால் அதிரடிப் படையினரைக் கடந்து வைத்தியசாலைக்குச் செல்ல முடியவில்லை. விடிந்ததும், குவிக்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படையினருடன் பொலிசாரும் இணைந்து அந்தப் பிரதேசம் இப்போது கொதிநிலையில் உள்ளது. போராட்டத்திற்கு ஆதரவாக மீண்டும் மக்கள் கூடத் தொடங்கிவிட்டார்கள், ரணிலின் மீதான வெறுப்பை அவர்கள் வெளிப்படுத்த, மீண்டும் ஆர்ப்பாட்டம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. இவ்வளவுக்கும் சூத்திரதாரியான ரணில் அவர்கள் புதிய பிரதமரான திரு தினேஸ் குணவர்த்தனவின்பதவிப் பிரமாண விழாவில் இருக்கிறார்.
யார் இந்த ரணில் விக்கிரமசிங்க? மக்கள் தெரிவின் மூலம்நாடாளுமன்ற உறுப்பினராகக்கூடஉள்நுழைய முடியாதவாறு மக்களால் தூக்கியெறியப்பட்ட ஒருவர். தேசியப் பட்டியல் மூலம் பின்வாசல் வழியாக நாடாளுமன்றம் சென்ற ஒரேயொரு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர். ஐந்துமுறைகள் தட்டுத்தடுமாறி பிரதமராகியும் நிலைக்க முடியாது மண் கவ்வியவர். ராஜபக்ச குடும்பத்தின் எடுபிடி. ராஜபக்சக்களையும் அவர்களின் சொத்துக்களையும் காக்கும் ‘டீல்’ உடன், அவர்கள் கட்சி வாக்குகளுடன் அரியணை ஏறியவர். ரணிலின் பின்னால் மேற்குலகின் பெருந்தலைகள் இருப்பது வெளிப்படையான ரகசியம். பூச்சியத்திலிருந்து, கோலோச்சும் நிலைக்கு ரணிலைக் கொண்டு சென்றவர்களின் முயற்சிகள் அறுவடையாகும் நேரத்தில் இராணுவத்தின் துணையுடன், நிருபர்கள் பலரின் முன்னிலையில் அராஜகம் அரங்கேற்றப் பட்டிருக்கிறது மேற்குலகை நிலைகுலைய வைத்திருக்கிறது.
ரணில் பதவியேற்றவுடன் வாழ்த்துக்களை அள்ளிச் சொரிந்தவர்கள் இப்போது திகைத்துப் போயுள்ளனர். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும், இங்கிலாந்தும் முந்திக்கொண்டு தங்கள் விசனத்தையும் கவலையையும் தெரிவித்து இருக்கின்றன.சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிரிவு தமது கடுமையான கண்டனத்தை ‘ருவிட்டரில்’ பதிவு செய்திருக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது மக்களின் உரிமை என்றும் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பத்திரிகையாளர் ‘கோத்தா கோ கம’ வினுள் சென்று அங்கு அகப்பட்டிருப்பவர்களைச் சந்திப்பதைத் தடுக்கக் கூடாது என்றும் அது கடுமையாகச் சாடியிருக்கிறது. இடையே, இலங்கைக்கான இந்தியாவின் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்கிறது இந்தியத் தரப்பு.கொழும்பிற்கான கிறிஸ்தவப் பேராயர் தனது கடுமையான கண்டனத்தையும் மக்களின் பாதுகாப்பு தொடர்பான கவலையையும் உடனடியாகவே ஊடகங்களின் முன்னால் பதிவு செய்திருக்கிறார். இன்னும் யார்யாரோவெல்லாம் கவலை தெரிவித்தாலும் இராணுவக் குவிப்பும், நாடளாவிய மக்களின் எதிர்ப்பும், பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையும்தான் இலங்கைத்தீவின் இன்றைய யதார்த்தம்.
ஸ்திரத் தன்மையை நிலைநாட்டுவார் ரணில் என்ற நம்பிக்கையுடன், உதவி வழங்கத் தயார் என்று அறிக்கை விட்ட IMF இனி என்ன முடிவெடுக்கப் போகிறது?ஊடகங்களின் முன்பு துணிச்சலுடன் மக்களைத் தாக்குகிறது இலங்கை இராணுவம்.34 வருடங்களில் முதற் தடவையாக சிங்கள மக்களே குற்றம் சுமத்தும் இராணுவமும் அதன் தலைமைகளும்தொடர்ந்தும் பாதுகாக்கப்படுவார்களா? அல்லது போர்க்குற்றம் புரிந்திருப்பார்கள் என்பதை இனியாவது ஐ.நா நம்புமா? பனாமாவின் கிளர்ச்சி போல இலங்கை நிலைமையும் ஆகிவிடுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.