குருந்தனூர் மலை

குருந்தனூர் மலை

தமிழர்களின் பாரம்பரிய நிலப்பிரதேசத்தில் அமைந்திருப்பது குருந்தனூர் மலை எனப்படும் குருந்தூர் மலை. இங்கு, தற்போது சிதிலமடைந்த நிலையில் கிடக்கிறது பண்டைக்காலத்துஆதி சிவனின் ஐயனார் கோவில்.இங்கு, ஐயனாருக்கு படையல் வைத்து வழிபாடு செய்யும் வழக்கத்தை சைவர்கள்அன்று தொட்டு அண்மைக்காலம் வரையும் தொடர்கின்றனர்.தமிழர் பிரதேசத்தில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும்,சைவர்களின் வழிபாட்டு இடங்களையும், தமிழர்களின் பண்டைய வரலாற்றுடன் தொடர்புடையதாக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த,பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களையும் குறிவைத்து நில அபகரிப்பை திட்டமிட்டு நடத்தி வருகிறதுஇனவாதம் கக்கும் சிங்கள அரசு.

‘அந்த இடங்களில் பௌத்த வழிபாடு நடைபெற்றது, அது பௌத்தர்கள் வாழ்ந்த இடம்’என்று பொய்யாக நிறுவி, அந்தந்த இடங்களில் விகாரைகளைக் கட்டி, தமிழர் நிலங்களை அபகரித்து, அவர்களின்பாரம்பரிய மண்ணிலிருந்து அவர்களை விரட்டியடிப்பதுதான் சிங்கள அரசின் நீண்ட காலத் திட்டம். இதனை முறியடித்து, தாம் பாரம்பரியமாக வாழ்ந்த நிலத்தைத் தக்க வைக்க தமிழ் மக்கள் நித்தம் போராட வேண்டியுள்ளது. இந்த வகையில், சில வருடங்களுக்கு முன்னர், தமிழர்களின் நீண்ட கால வழிபாட்டிடமான குருந்தனூர் மலையும் இரவோடிரவாக இராணுவ காவலுடன் வந்த சில பிக்குமார்களாலும் சிங்களவர்கள் சிலராலும் சுவீகரிக்கப்பட இருந்தது. திடீரென்று அங்கு முளைத்த புத்தர் சிலை அப் பிரதேச மக்களை கோபம் கொள்ள வைத்தது. நீதிமன்றத்தின் தடையுத்தரவையும் மீறி அங்கு கபோக் கல்லினால் ஆன புத்தர் சிலையும் விகாரையும் வேகவேகமாகக் கட்டும் வேலைகள் நடைபெற்றன. இப்போது அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு கிடைத்துள்ளது.

குருந்தனூர் மலை எங்குள்ளது?
வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் நெடுங்கேணி என்னும் இடம் உள்ளது. இங்கிருந்து வடகிழக்கே சுமார் 14 கிலோமீற்றர் தொலைவில் தண்ணிமுறிப்புக் குளம் உள்ளது. இந்தக் குளத்திற்கு வடக்கே கம்பீரமாக எழுந்து நிற்பதுதான் குருந்தூர் மலை.

குருந்தூர் மலையின் சுமார் 200ஏக்கர் நிலப்பரப்பு முழுவதும்,ஏராளமான பண்டைய காலத்திய கட்டட இடிபாடுகள் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றன. ஆதி சிவனின் வடிவமான ஐயனார் குடிகொண்டிருப்பதற்கான சான்றுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னமும் காணப்படுகின்றன. காலங்காலமாக, அங்கிருக்கும் சூலத்தின் முன்னால் படையல் வைத்து வழிபடுவதை இந்துக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

117 வருடங்களின் முன், எச்.சி.பி பெல் என்ற ஒரு ஆங்கில ஆராய்ச்சியாளர் குருந்தனூர் மலைப்பிரதேசத்தை ஆய்வு செய்துள்ளார். குருந்தனூர் மலையில் மிகப்பெரிய சிவாலயம் இருந்ததற்கான ஆதாரங்கள் அங்கு தென்படுவதாக, 1905 இல், இலங்கைத் தொல்பொருட் திணைக்களத்தின் Archaeological Survey of Ceylon –Annual Report எனும் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். பெல் அவர்களின் அறிக்கையின் படி, இந்த மலையில் ஒரு பெரிய சிவன் கோயிலும் தீர்த்தக்கேணியும் இருந்தது உறுதியாகிறது. இவை சோழர் காலத்தில் அல்லது அதற்கு முற்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் அவர்.

குருந்தூர் மலையில் ‘பெல்’ அவர்கள்கண்ட ஆவுடையார் ( ஒரு சிவலிங்கத்தில் இரண்டு பாகங்கள் உள்ளன. மேலே உருளையான வடிவிலுள்ள பாகம் லிங்கம் என்றும், அதன் கீழ் பரந்த வட்ட வடிவிலான பாகத்தை ஆவுடையார் என்றும் சொல்வார்கள். ) சுமார் 10 அடி சுற்றளவுள்ளதாக இருந்திருக்கிறது. திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம் போன்ற பெரிய சிவாலயங்களில் காணப்படும் பெரிய சிவலிங்கங்களை ஒத்ததாக இது காணப்பட்டுள்ளதால், குருந்தூர் மலை சிவாலயமும் மிகத் தொன்மையானதாக இருந்திருக்க வேண்டும். அதேசமயத்தில், வன்னியின் மேற்குப் பக்கத்தில் உள்ள வவுனிக்குளம் எல்லாள மன்னனால் கட்டப்பட்டிருக்கக் கூடிய சான்றுகள் இருப்பதாக ‘ஹென்றி பாக்கர்’ என்பவரின் நூல் குறிப்பிடுகிறது. இதன்படி பார்த்தால், வன்னியின் கிழக்கே அமைந்துள்ள குருந்தூர்மலையிலும் எல்லாள மன்னன் காலத்தில் கோவில் கட்டப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.

127 வருடங்களுக்கு முன்னர், இன்னுமொரு ஆங்கில ஆய்வாளரான திரு ஜே.பி.லூயிஸ் அவர்கள் குருந்தூர் மலையிலுள்ள சிவாலயம் பற்றி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். 1895 இல்அவர் எழுதிய ‘Manual of the Vanni Districts’ என்ற நூலில், குருந்தூர் மலையில் தான் கண்ட சிவன் கோவில் மற்றும் நாக கோவில் பற்றி எழுதியுள்ளார். தலை உடைந்த நிலையிலுள்ள நந்தி சிலை, வணங்கிய நிலையிலிருக்கும் சிற்பம், என்பனவற்றைப் பற்றி மட்டுமல்லாமல் ஐந்து தலை நாகத்தின் கற்சிலையுடன் கூடிய ஒரு பண்டைய கோயில் இருந்ததையும் அவர் அதில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொ.ஆ 1215 இல், ( பொதுமக்கள் ஆண்டு –கி.மு, கி.பி என்ற வருடக்கணக்கு பாவனைக்கு வருமுன், பொதுமக்கள் ஆண்டு என்று குறிப்பிடுவதே வழக்கத்தில் இருந்தது ) கலிங்கத்தைச் சேர்ந்த மாகோன், ஜயபாகு என்ற தமிழ் மன்னர்கள் இலங்கைமீது படையெடுத்து வந்து40 வருடங்கள் ( 1215– 1255 ) ஆட்சி புரிந்ததாக நூல்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் வீரசைவ மரபைப் பரப்பிய மன்னர்கள் என்றும், இவர்கள் அமைத்த மிக முக்கியமான ஏழு கோட்டைகளில் குருந்தூர் மலையும் ஒன்று என்றும் சொல்லப்படுகிறது. சூழவம்சத்திலும், பூஜாவலிய, ராஜாவலிய, நிக்காய, சங்கிரஹய என்ற நூல்களிலும்கூட இந்த விடயம் குறிப்பிடப் பட்டுள்ளது.

இவையெல்லாம் குருந்தூர் மலையைப் பற்றிய நீண்டகால வரலாற்றுச் சான்றுகள்.முல்லைத்தீவு குமுழமுனைப் பிரதேசத்திலேயே உயரமான இடம் குருந்தூர் மலைதான். அங்கிருந்து நாயாறு கடல் நீரேரி, செம்மலை சிவன் கோவில் போன்ற இடங்களை இலகுவாகப் பார்க்க முடியும். சுற்றிவரவுள்ள ஒரு பெரிய பிரதேசத்தை அங்கிருந்து கண்காணிக்கவும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முடியும்.இதனால், சிங்கள அரசு எப்போதும் இந்த இடத்தின் மீது ஒரு கண் வைத்திருந்தது. 1932 இல்வெளிவந்த வர்த்தமானி அறிவித்தலில் இந்த மலையை தொல்பொருள் இடமாகப் பிரகடனப்படுத்தி இருந்ததால், தமிழ் மக்களின் நடமாட்டம் அங்கு கட்டுப் படுத்தப்பட்டது. ஆனால் வழிபாட்டிற்குத் தடை விதிக்கப்படாத காரணத்தால், வருடத்திற்கு ஒருமுறையோ இரு முறைகளோ அங்கு சென்று பொங்கி, படையலிட்டு வழிபட்டனர் மக்கள்.

இவையெல்லாம் 2018 வரைதான். 2018 இல் இராணுவத்தின் உதவியோடு அங்கு வந்த சில பிக்குகள் சூலத்தைப் பிடுங்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் புத்தர் சிலையை வைத்து, அந்த இடத்தை உரிமை கொண்டாட முனைந்தனர். இராணுவத்தினதும் கொழும்பிலிருந்து அழைத்து வரப்பட்ட தொல்லியலாளர்களினதும் உதவியுடன் தமிழர் சான்றுகளை அழித்து, அந்த இடத்தில் பௌத்த சாயலில் பொய்யான சான்றுகளை நிறுவ இன்றுவரைமுயல்கின்றனர். மக்களின் கடுமையான எதிர்ப்பினால் அந்த நேரத்தில் அந்த முயற்சி கைவிடப்பட்டாலும் அவர்கள் திரும்பத்திரும்ப அத்துமீற முயன்றதால் பிரச்சனை நீதிமன்றம்வரை சென்றது. எந்தக் கட்டுமான வேலைகளும் செய்யக்கூடாது என்ற நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு புராதன பாணியில் பழைய காலத்து கட்டடங்களை ஒத்த செங்கற்களைப் பயன்படுத்தி, விகாரையைக் கட்டியுழுப்பும் அவர்களின் முயற்சி துரித கதியில் நடக்கிறது, சிலை நிர்மாணம் முடிவடைந்து விழா வரைக்கும் வந்துவிட்டது.

இப்போது, 14/07/2022 அன்று, கட்டப்படும் விகாரையும் சிலைகளும் சட்டத்திற்கு விரோதமானவை என்றும், இந்த சட்டவிரோத நிர்மாணம் உடனடியாக அகற்றப்பட்டு பழைய நிலைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் முல்லைத்தீவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு போட்டுள்ளது. அப்பிரதேசம் தொடர்பான தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அது கட்டளையிட்டு இருக்கிறது.

குருந்தூர் மலையிலுள்ள தாரா லிங்கத்தையும் கருவறையையும் விகாரை என்று சிங்களத் தொல்லியலாளர்களும் சாயம் பூச முயன்றாலும், தமிழ்நாட்டில் இருக்கும் சில பல்லவர் காலத்துதாரா லிங்க வடிவினை ஒத்ததாக இத்தம்பம் இருப்பதை மறைக்க முடியாது. இந்த தாராலிங்கத்தின் விட்டமும் ‘பெல்’ அவர்களது ஆய்வில் கண்ட ஆவுடையாரின் விட்டமும் ஒத்துப்போவதால் இவை ஒரே சிவலிங்கத்தின் பாகங்களாக இருக்க வேண்டும்.

குருந்தன் குளத்தின் மேற்கே, குருந்தனூர் மலையின் தெற்குப்புறச் சரிவில் ‘குருந்தனூர்’ என்னும் பட்டினம் புதைந்து கிடப்பதாக நம்பப்படுகிறது.இப்போது அப்பகுதி முழுவதும் அடர் காடாக காணப்படுகிறது. மலையில், மூன்று பக்கமும் சிதிலமடைந்த நிலையிலிருக்கும் மதில்களாலும் நான்காவது புறத்தில் குளத்தினாலும் சூழப்பட்ட சுமார் 200 ஏக்கர் நிலத்தில் பண்டைக்கால கட்டட சிதைவுகள், கிணறுகள், சிற்பங்கள், சிறிய தூபி, அருகில் பல கற்தூண்கள், சிதிலமடைந்த நிலையில் உள்ள நந்தி சிலை, ஆவுடையார், பக்கத்தில் 25 அடி ஆழக் கிணறு ( 20 அடிவரை செங்கல் அதற்குக் கீழே பாறை ), உட்கார்ந்தபடி வணங்கும் தோற்றத்தில் மனித சிலை, பல நாகக் கற்கள் என்று ஏராளமான புராதன எச்சங்கள் இன்னும் அங்கே உள்ளன.

குருந்தூர் மலையில் முறையான அகழ்வாராய்ச்சி எதுவும் இன்னமும் நடைபெறவில்லை –பௌத்தத்தை நிரூபிக்க கொழும்பிலிருந்து கொண்டு வரப் பட்டவர்களைத் தவிர. இங்கு ( சிங்களவர் அல்லாத )பக்கச் சார்பில்லாத, முறையான அகழ்வாராய்ச்சி நடைபெற வேண்டும். அதுவரையில் இந்த இடம் சிங்கள முலாம் பூசப்பட முடியாதவாறு காக்கப்பட வேண்டும். பௌத்தத்தைக் காக்கும் இனவாத அரசியலில் மாற்றம் எதுவும் வராத இந்த நிலையில், மீண்டும் மும்முரமாக நில அபகரிப்பு நடந்தேறலாம். கூட்டாக இணைந்து இம்முயற்சிகளை முறியடித்து தமது வாழ்விடங்களைக் காக்க வேண்டிய கடமை எல்லோருக்கும் உள்ளது.

-புலரி

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )