பலாலி காணி இழப்பீட்டுக் கூட்டம் போர்க்களமானது: மண்டபத்திற்குள் புகுந்து பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

பலாலி விமான நிலைய விரிவாக்கத்திற்காகச் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில்   நடைபெற்ற கலந்துரையாடல் கடும் குழப்பத்திலும், முடிவடைந்துள்ளது!அதிகாரிகளுடனான காரசாரமான வாக்குவாதத்திலும் 1986-இல் பலாலி மேற்கு, மயிலிட்டி வடக்கு, தென்மயிலை, குரும்பசிட்டி ஆகிய பகுதிகளில் சுவீகரிக்கப்பட்ட 267 ஏக்கர் காணிகளுக்குச் சொந்தமான 436 உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கூட்டத்தின் இறுதியில் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், பின்னர் மக்களைச் சந்திக்காமல் சென்றது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

2022ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படியே இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும், தனிநபர் காணி மதிப்பீட்டு விபரங்களை தெளிவாக வழங்காமல் அவசர அவசரமாக சத்தியக்கடதாசியில் கையொப்பமிடுமாறு அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர்.

வழங்கப்பட்ட சத்தியக்கடதாசியில் தெளிவின்மை இருந்ததால், சந்தேகமடைந்த மக்கள் கையொப்பமிட மறுத்து அதிகாரிகளுடன் கடுமையாக மோதினர்.

சூழ்நிலை முற்றாகக் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால்,அசம்பாவிதங்களைத் தவிர்க்க உடனடியாக பொலிஸார் மண்டபத்திற்குள் வரவழைக்கப்பட்டனர்.சமரசப் பேச்சுகளின் பின்னர் சில முடிவுகள் எடுக்கப்பட்டன:

காணி உரிமையாளர்கள் சார்பில் 7 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு அமைப்பு.அவர்களின் ஆலோசனையின்படி சத்தியக்கடதாசியில் திருத்தங்கள் செய்யப்பட்டு, மதிப்பீட்டுத் திணைக்கள ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஒப்புதல் கிடைத்த பின்னரே உரிமையாளர்கள் மீண்டும் அழைக்கப்படுவார்கள். இருப்பினும், இத்தீர்வை ஏற்காத ஒரு சாரார் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினர்.

“எங்களுக்கு இழப்பீடு வழங்கி ஏமாற்றுவதை விட, முதற்கட்டமாக எங்களது சொந்தக் காணிகளை மீள வழங்கி மீள்குடியேற்றத்தை உறுதி செய்யுங்கள்! அதன் பின்னரே விமான நிலைய சுவீகரிப்பு பற்றிப் பேச முடியும் என மக்கள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளின் அலட்சியமும், வெளிப்படைத்தன்மையற்ற அணுகுமுறையுமே இந்த மோதலுக்கு முக்கிய காரணம் என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )