
குட்டிமணி தங்கத்துரை சிலைகளை நிறுவ இன்று வரை தற்காலிக தடை; பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் கட்டளை
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் சிலையை நிறுவுவதற்கு இன்று புதன்கிழமை (05) வரை தற்காலிக தடை விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
கடந்த 25/07/2026 அன்று தியாகிகள் குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது 43 வது நினைவு நாளில் அவரது சகோதரனால் அவரது சொந்த காணியில் சிலை வைப்பதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருந்த நிலையில் கடந்த 22/07/2026 அன்று முன்னாள் வல்வெட்டிதுறை நகரசபை உப தவிசாளர் சதீஸ் அவர்களை கைது செய்து நீதி மன்றில் முற்படுத்தி பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (04)வரை குட்டிமணி தங்கதுரையின் சிலை நிறுவ தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கு பருத்தித்துறை நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந் நிலையில் பொலிசாருடன் அரச சட்டத்தரணி ஆஜரானார். அவர் புலனாய்வு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மேலும் 14 நாள் தடை உத்தரவை கோரினர்.
குற்றவியல் 106 சட்டத்தின்படி 14 நாட்களிற்கே தடை உத்தரவை வழங்கலாம் எனவும் அதற்கு மேல் நீடிப்பதாக இருந்தால் அமைச்சர் ஒருவரால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
அதனை அரச சட்டத்தரணி ஏற்றுக்கொண்டதுடன் இன்று புதன்கிழமையுடன் (05) 14 நாள் முடிவடைவதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதனை ஆராய்ந்த மன்று இன்று புதன்கிழமை (05) வரை வழக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் சிலை நிறுவுவதற்கும் இன்று புதன்கிழமை (05) வரை தற்காலிக தடை விதித்து கட்டளை பிறப்பித்துள்ளது. வேறு விண்ணப்பம் யாராவது செய்வதாக இருந்தால் இன்று புதன்கிழமை (05) செய்யலாம் எனவும் நீதவான் கட்டளை பிறப்பித்தார்.
மூத்த சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, விஸ்வலிங்கம் மணிவண்ணன், உட்பட்ட ஐந்து சட்டத்தரணிகள், வல்வெட்டித்துறை பொலிசாரல் குற்றம் சாட்டப்பட்ட கந்தசாமி சதீஸ் சார்பில் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

