
புதிய அரசியலமைப்புக்கு கூட்டாக முடிவெடுப்போம்; தமிழ் அரசுக் கட்சி தெரிவிப்பு
புதிய அரசியலமைப்பு வருகின்ற பொழுது நிச்சயமாக நாங்கள் எல்லா தமிழ் தேசிய கட்சிகளோடும் கூட்டாக இணைந்து ஒரு நிலைப்பாட்டை எடுப்போம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
புதிய அரசியலமைப்பு தொடர்பில் சுவிஸில் சில கலந்துரையாடல் நடைபெற்றதாக பார்த்தேன். அரசாங்கம் சார்பில் போனவர்களில் ஜே.வி.பி. சார்ந்த பலமானவர்கள் செல்லவில்லை.
எந்த காலத்திலும் தமிழரசு கட்சிக்கும் ஒற்றையாட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதை நாங்கள் ஏற்கவில்லை என சொல்லிவிட்டோம். அதை கதைப்பதில் அர்த்தம் கிடையாது.
அரசியலமைப்பை பற்றி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இதுவரை பேசவில்லை. அது உத்தியோகபூர்வமாக வெளி வருகின்ற பொழுது நிச்சயமாக ஒற்றையாட்சியையும் ஏக்கிய ராஜ்ஜியவையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.அதற்கு மேலதிகமாக இது தொடர்பில் பிரசாரம் செய்வது அரசியல் தந்திரோபாயமே தவிர யதார்த்தம் அல்ல.
எங்கள் கட்சியினுடைய நிலைப்பாடு ஒற்றையாட்சி அல்ல. பிறகு நாங்கள் எவ்வாறு அதை ஏற்றுக் கொள்வோம். அது தெளிவானது.
ஏக்கிய ராஜ்ஜிய அடிப்படையில் சில விடயங்களை பரிசீலிக்கலாம் என தற்போதைய அரசாங்கம் சொன்னதே ஒழிய ஏக்கிய ராஜ்ஜியவை கொண்டு வருவோம் என அவர்கள் சொல்லவில்லை.
அதனை நாங்கள் மறுதலிக்கிறோம். புதிய அரசியலமைப்பு வருகின்ற பொழுது நிச்சயமாக நாங்கள் எல்லா தமிழ் தேசிய கட்சிகளோடும் கூட்டாக இணைந்து ஒரு நிலைப்பாட்டை எடுப்போம். அதை உறுதியாக சொல்ல விரும்புகிறோம். புதிய அரசியலமைப்பை அரசாங்கம் முன்னெடுக்கின்ற பொழுது எமக்கு தனித்த கருத்திருந்தாலும் கூட எல்லாத் தமிழ் தேசிய கட்சிகளையும் சேர்ந்து ஒருமித்த கருத்தை முன் வைப்பதற்கான சூழ்நிலையை நாங்கள் முன்னெடுப்போம்.
இணைந்து செயல்பட்டு முன் எடுப்பதற்கு நாங்கள் கட்டாயம் செயல்படுவோம்.அதற்கான சிந்தனையும் எண்ணப்பாடும் எமக்கு உண்டு அது சம்பந்தமாக கட்சியிலும் மத்திய செயற்குழுவிலும் நாம் பேசுவோம் என்றார்.

