
செம்மணி மனித புதைகுழிக்கு முழுமையான விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும்
செம்மணி மனித புதைகுழி விசாரணை முழுமையாகவும் வெளிப்படையாகவும் நிறைவுக்குக் கொண்டுவரப்படும் பட்சத்தில், அது தமது காணாமல் போன உறவுகளுக்கான பதில்களை இன்றும் தேடி அலையும் குடும்பங்களுக்கு ஓரளவு நீதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நீதி தாமதிக்கப்பட்டாலும் அது மறுக்கப்படமாட்டாது என்ற நம்பிக்கையை எம் மக்களுக்கு தரக்கூடிய ஒளிக்கீற்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என
தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவையின் பொதுச் செயலாளர் சுஜிதர் சிவநாயகம் தெரிவித்தார்.
தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவையினரால் இனப் படுகொலைக்கு நீதி வேண்டி செம்மணியில் நடந்த நேற்றைய கவனயீர்ப்பு போராட்த்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனித புதைகுழி தொடர்பான தகவல்கள் மீண்டும் பல தமிழ் மற்றும் சில ஆங்கில ஊடகங்களின் வழியாக வெளிக்கொணரப்பட்டிருப்பது குறித்து இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஆழ்ந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான செய்திகள் குறித்து பிரதான சிங்கள ஊடகங்களின் கவனம் குறைவாக இருப்பது மிகவும் கவலைக்குரியது.
ஒரு நாடாக, இவ்விதமான வலிமிகுந்த உண்மைகளிலிருந்து நாம் பின்வாங்க முடியாது.
இதே நேரம் 2017ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், 1980களின் இறுதியிலிருந்து இலங்கையில் 60,000 முதல் 100,000 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2017இல் நிறுவப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், பாதுகாப்பு படையினரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சுமார் 21,000க்கும் அதிகமான முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் குறித்த துயரம் எமது நாட்டில் ஒவ்வொரு சமூகத்தையும் பாதித்திருக்கிறது.
அதே வேளையில் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப முறையாக புதைகுழிகளைத் அகழ்வதில் எங்கள் திறன்களில் உள்ள கடுமையான பின்னடைவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
இதே நேரம் சர்வதேச தொழில்நுட்ப ஆதரவின் அவசியத்தை சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது, மேலும் அத்தகைய உதவியை தாமதமின்றி நாடுமாறு அரசாங்கத்தை கோருகின்றோம்.அத்துடன் வளங்கள் பற்றாக்குறையால் உண்மையை சமரசம் செய்ய முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.செம்மணி மனித புதைகுழி தனித்துவமான வேதனையை வெளிப்படுத்துகிறது.
மற்றைய மனித புதைகுழிகளில் இளையோர் மற்றும் முதியோர் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதும், இங்கு பாடசாலைப் பைகள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இவை உயிர்கள் அழிந்ததையும், மேலும் எமது நாட்டைச் சிதைத்த இன அரசியல் பரிமாணங்களையும் சாட்சியப்படுத்துகின்றன. இவ் அகழ்வுகள் மீதான மௌனம், சமூகங்களுக்கு இடையிலான அவநம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவதோடு, போரின் காயங்களை நீடிக்கச் செய்யும் ஆபத்தும் இதில் உள்ளது.
செம்மணி மனித புதைகுழி விசாரணை முழுமையாகவும் வெளிப்படையாகவும் நிறைவுக்குக் கொண்டுவரப்படும் பட்சத்தில், அது தமது காணாமல் போன உறவுகளுக்கான பதில்களை இன்றும் தேடி அலையும் குடும்பங்களுக்கு ஓரளவு நீதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நீதி தாமதிக்கப்பட்டாலும் அது மறுக்கப்படமாட்டாது என்ற நம்பிக்கையை எம் மக்களுக்கு தரக்கூடிய ஒளிக்கீற்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அந்த வகையில் இந்நாட்டின் மக்களாகவும் பாதிக்கப்பட்டவர்களோடும் அவர்களின் குடும்பத்தினரோடும் நாங்கள் எங்களை அடையாளப்படுத்துகிறோம்.
நீதி என்பது மனித உரிமை மட்டுமல்ல அது வேதாகமக் கட்டளையாகும். இதையே இறைவாக்கினர் நமக்கு நினைவூட்டுகிறார், “நேர்மையைக் கடைப்பிடித்தலையும் இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?”
எனவே, எத்தகைய வேதனையானதாயிருந்தாலும், உண்மையைத் தேடும் முயற்சியில் அரசு, சிவில் சமூகம் மற்றும் மத சமூகங்கள் ஒன்றிணைய வேண்டுமென நாங்கள் அழைக்கிறோம்.
அத்துடன் நேர்மையும் தைரியமும் கொண்டு நீதி நிலை நாடப்பட்டால் மட்டுமே குணமடையும் நிலையும் நல்லிணக்கமும் சமூகத்தில் வேரூன்றும் என்றார்.

