
2000ஆம் ஆண்டுக்கு முன் வடக்கு,தெற்கில் காணமல்போன 10,000 முறைப்பாடுகள் குறித்து முதலில் விசாரணை
2000ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு மற்றும் தெற்கில் காணமல் போனதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ள இதுவரையில் விசாரணை நடத்தப்படாத பத்தாயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஏற்பாட்டில் கொழும்பு அலரிமாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச காணாமல் போனோர் நினைவு தின நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அமைச்சர் தெரிவித்துள்ளதாவது,
காணாமல் போனோர் நினைவு தினம் என்பது நமது வரலாற்றில் மிகவும் உணர்வு மிக்க மற்றும் வேதனையான அத்தியாயத்தை மீண்டும் நினைவுபடுத்தும் ஒரு நாளாகவே உள்ளது. யுத்தம், போராட்டங்கள் மற்றும் பல்வேறு அரசியல் நெருக்கடிகள் காரணமாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது உறவுகள் தொடர்பான எந்த தகவலும் இல்லாமல் இன்னும் வேதனையில் தவிக்கின்றனர். கணவன், பிள்ளை அல்லது சகோதரனை இழந்த தாய் அல்லது மனைவியின் வேதனை என்றென்றும் நீடிக்கும் வலியாகவே உள்ளது.
இன்று இங்கு கூடியிருக்கும் உங்களில் பலருக்கு, காணாமல் போனவர்கள் என்பது கடந்த கால நிகழ்வு மட்டுமல்ல. அதுவொரு உயிருள்ள காயமாகும். ஒவ்வொரு காலையிலும், நீங்கள் “என் மகன் எங்கே? என் மகள் எங்கே? என் கணவர், என் மனைவி, என் தந்தை, என் தாய் எங்கே? அவர்களுக்கு என்ன ஆயிற்று?” என்ற கேள்வியுடன் எழுந்திருக்கிறீர்கள்.
எனவே நான் ஒன்றை தெளிவாகச் சொல்கிறேன். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே காணாமல் போனவர்கள் பற்றிப் பேசி, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நம்மை நம்பும் மக்களை ஏமாற்ற முடியாது.
நமது நாட்டின் வரலாறு வன்முறை, அடக்குமுறை மற்றும் அழிவு கோடுகளால் குறிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் ஒரு குழுவிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, இன, மத மற்றும் அரசியல் ஊடாக பயணித்தது.. நீண்ட உள்நாட்டுப் போரின் போது காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களை தமிழ் குடும்பங்கள் இன்னும் தேடி வருகின்றன. தெற்கு கிளர்ச்சியின் போது காணாமல் போன இளைஞர்களின் நினைவு சிங்கள இதயங்களில் பதிந்துள்ளது. முஸ்லிம் குடும்பங்கள் இடம்பெயர்வு மற்றும் காணாமல் போனதன் வடுக்களை தாங்கி நிற்கின்றன. இது நம் அனைவருக்கும் சொந்தமான கவலையாகும்.
இந்த இழப்புகளின் வலி நமது அரசியல் இயக்கத்திற்கு நெருக்கமானது என்பதையும் நான் நன்கு அறிவேன். கடந்த காலங்களில் நமது ஆயிரக்கணக்கான இளம் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போயுள்ளனர். எனவே, உண்மை, நீதி மற்றும் கடந்த காலங்களை பற்றிப் பேசும்போது நாம் வெளியாட்களாகச் செயல்படுவதில்லை.
வலுக்கட்டாயமாகக் காணாமல் போவது சாதாரண நிகழ்வுகள் அல்ல. அவை குற்றங்கள். இந்தக் குற்றங்கள் வாழ்வின் அடிப்படை உரிமைகள், குடும்ப ஒற்றுமைக்கான உரிமையை வேண்டுமென்றே மீறுவதாகும். எனவே, அரசின் பங்கு, இவற்றை மறுப்பதோ அல்லது அவர்கள் சார்பாகச் செய்ய வேண்டிய பணிகளைத் தாமதப்படுத்துவதோ அல்ல, மாறாக ஒப்புக்கொண்டு செயல்படுவதாகும். அதனால்தான், தேசிய மக்கள் சக்தியின் தலைமையின் கீழ், அரசாங்கம், நல்லிணக்கம் மற்றும் நீதியை எங்கள் கொள்கைப் பிரகடணத்தில் கொண்டுள்ளது.
இந்த நேரத்தில் நாம் செய்து வரும் மூன்று முக்கிய பணிகளை மட்டுமே நான் முன்வைக்க விரும்புகிறேன். அதாவது உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியனவாகும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் உண்மையை அறியும் உரிமை உண்டு. உண்மையை அறிவது என்பது மக்களின் உரிமை, அது உறுதி செய்யப்பட வேண்டும். எனவே, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவ நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். இது ஒரு அரசியல் வாக்குறுதியோ அல்லது ஒரு கண்காட்சியோ அல்ல. இது உங்களுக்கு செவிசாய்ப்பதற்கும், ஒப்புக்கொள்வதற்கும், பதில்களை வழங்குவதற்கும் அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான மற்றும் நம்பகமான, பாதிக்கப்பட்டவர்களை அடிப்படையாகக் கொண்ட பொறிமுறை என்று நாங்கள் நம்புகிறோம்.
அதேபோன்று 2000ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு மற்றும் தெற்கில் காணமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள மற்றும் இன்னும் விசாரிக்கப்படாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைத் ஆரம்பிக்க அமைச்சரவை தேவையான ஒப்புதலை வழங்கியது. இந்த நடவடிக்கைகளுக்காக ரூ. 375 மில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதேவேளை காணாமல் போகச் செய்வது என்பது குற்றமாகும். நீதி எப்போதும் பக்கச்சார்பாக இருக்கக் கூடாது. நம்பிக்கையை கொண்டதாக இருக்க வேண்டும். இதன்படி நாங்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டத்தை முன்வைப்போம். காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு .இழப்பிட்டை வழங்குவதற்கான புதிய முறைமைகளை அறிமுகப்படுத்துவோம் என்றார்.