
சிறுவர்கள்,குழந்தைகளின் எலும்புக் கூடுகள் அதிகம்!; சி.ஐ.டி.யினர் விசேட கவனம்
செம்மணி மனித புதைகுழியில் அதிகளவில் அடையாளம் காணப்பட்டு சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடையதாக கருதப்பட்டு அகழ்ந்து எடுக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் தொடர்பிலான விசாரணைகளில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசேட கவனம் செலுத்தியுள்ளனர் என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழியில் கடந்த வெள்ளிக்கிழமை 37வது நாளாக அகழ்வு பணிகள் யாழ்ப்பாண நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.
அகழ்வு பணிகளுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் பல்வேறு கோணங்களில் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்றத்திற்கு அறிக்கைகளை சமர்ப்பிக்கும் போதே அது தொடர்பிலான மேலதிக விபரங்கள் தெரியவரும் – என்றார்.
செம்மணி மனித புதைகுழியில் ஒன்றோடு ஒன்று பிணைந்தவாறு
ஒரு எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியில் மற்றொரு எலும்பு கூட்டின் தலை இருக்கும் வகையில்
இரண்டு மனித எலும்புக்கூடுகள் இனங்காணப்பட்டுள்ளது. இவை சாதாரணமாக உயிரிழந்தவர்களை புதைப்பது போன்ற முறையல்ல. இது குழப்பகரமான முறையில் புதைக்கப்பட்டுள்ளது. அகழ்ந்து எடுக்கும்போதே அது தொடர்பிலான விபரங்களை அறிய முடியும் – என்றார்.