நாட்டில் ஒரு கட்சி ஆட்சிக்கான முயற்சியை தடுக்க வேண்டும்; அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் வலியுறுத்து 

நாட்டில் ஒரு கட்சி ஆட்சிக்கான முயற்சியை தடுக்க வேண்டும்; அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் வலியுறுத்து 

நாட்டை ஒரு கட்சி ஆட்சி என்ற நிலைப்பாட்டிற்குள் கொண்டு போக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முனைகிறது என அமெரிக்க காங்கிரஸ் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டிய எம்.ஏ.சுமந்திரன், அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக ஒத்துழைப்புக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையேயான சந்திப்பு வெள்ளிக்கிழமை(29) கொழும்பில் நடைபெற்றது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக ஒத்துழைப்புக் குழுவின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஈடுபட்டனர்.

சந்திப்பு தொடர்பாக தினக்குரலுக்கு கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்,

அமெரிக்க காங்கிரஸ் செனட் அதிகாரிகள், பொதுவாக இலங்கை நிலவரத்தைப் பற்றி அறிய ஒவ்வொரு வருடமும் வந்து செல்வார்கள். நாங்கள் மூன்று கட்சிகளின் பிரதிநிதிகள் அவர்களைச் சந்தித்தோம். வடக்கு கிழக்கு, முஸ்லிம், மலையக தமிழ் மக்கள் என மூன்று தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து பேசினார்.

நல்லிணக்கப் பொறிமுறைகள் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. அமெரிக்கா,ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இல்லாவிட்டாலும் கூட அந்தப் பொறிமுறியையை உருவாக்கியது அமெரிக்காவே. அது எந்தளவு தூரத்தில் இருக்கிறது என்பது பற்றி பேசப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு அகழப்படும் நிலையில் அதில் இனிமேல் என்ன செய்யப்பட வேண்டும் அதில் உள்ள சாட்சியங்கள் மிக முக்கியமானது என்பவை தொடர்பாக பேசப்பட்டது.

புதிய அரசியலமைப்பு ஊடாக அதிகாரப் பகிர்வை செய்வதாக இந்த அரசாங்கம் சொல்லி இருக்கிறது. புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆறு வருடங்கள் கடந்தும் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படாததால் மாகாண சபைகள் இயங்குநிலையில் இல்லை. மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.

மே மாதத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நடாத்துவதாக அரசாங்கம் தமக்கு வாக்குறுதி அளித்ததாக தூதுக் குழுவினர் தெரிவித்தனர்.

ஒவ்வொரு தடவையும் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டு வருகின்றது,தேர்தலை வைக்கிறார்கள். மே மாதம் வரை பொறுக்கவில்லை. அதை உடனடியாக செய்யலாம் என நாம் வலியுறுத்தினோம்.

இந்த அரசாங்கம் ஒரு கட்சி ஆட்சி என்ற நிலைப்பாட்டிற்குள் கொண்டு போக முனைகிறது. எங்கள் நாடு பன்மைத் தன்மை கொண்ட நாடு. அதுவே போதும் இந்த ஒரு கட்சி ஆட்சி திசையில் செல்வதை தடுக்க வேண்டும் என்பதைத் தெரிவித்தோம் – என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )