செம்மணி புதைகுழி அகழ்வை திசை திருப்ப சிலர் முயற்சி; ஏ.ஐ. படங்களை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை

செம்மணி புதைகுழி அகழ்வை திசை திருப்ப சிலர் முயற்சி; ஏ.ஐ. படங்களை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை

சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை நுண்ணறிவுப்(ஏ.ஐ.)படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வலியுறுத்திய சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா, எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து இவ்வாறான படங்கள் பகிரப்படுமாக இருந்தால்

குற்றவியல் விசாரணைகளை இடையூறு செய்தார் என்ற அடிப்படையிலும் நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையிலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

புதைகுழி அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புகளின் உருவ மாதிரிகளை வைத்து செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பிழையான விதத்தில் படங்கள் சமூக வலைத்தளங்களிலும் பொது தகவல் வெளியிலும் பரப்பப்படுகிறது.

குற்றவியல் விசாரணை நீதிமன்ற நடவடிக்கை ஊடாக செல்வதால் இவ்வாறான பிழையான விடயங்களை சமூக வலைத்தளங்களிலும் பொது தரவு தளத்திலும் பரப்புகின்ற விடயங்கள் குற்றவியல் விசாரணைக்கு தடையை ஏற்படுத்துகின்ற ஒன்று என பாதிக்கப்பட்ட தரப்புகள் கருதுகிறது.

பாதிக்கப்பட்ட நபர்களுடைய உருவ அடையாளங்கள் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு இருக்குமா அல்லது இந்த வழக்கைப் பிழையாக கையாளுவதற்கான உத்தியாக இதை கையாளுகிறார்களா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.

நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு என்ற காரணத்தால் இவ்வாறான விடயங்களை நீதிமன்றத்திற்கு முறைப்பாடு செய்து நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தின் கீழ் அவர்களை கையாள முடியுமா என்பது தொடர்பான ஆலோசனை தற்போது நடத்தப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் இவ்வாறான விடயங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வலியுறுத்துவதுடன் இனிவரும் காலத்தில் தொடர்ந்து இவ்வாறான படங்கள் பகிரப்படுமாக இருந்தால் பாதிக்கப்பட்ட தரப்புகளின் சார்பில் குற்றவியல் விசாரணைகளை இடையூறு செய்தார் என்ற அடிப்படையிலும் நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றை அவமதிக்கின்ற செயற்பாடு என்ற அடிப்படையிலும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாதிக்கப்பட்ட தரப்புகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் ஊடாக நியாயமான நிதியை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைக்கு மக்களினுடைய பங்களிப்பு என்பது மிக முக்கியம். இந்த சந்தர்ப்பத்தை தெளிவாக விளங்கி வழக்கை திசை திருப்ப முயற்சிக்கும் முயற்சிகளை தவிர்த்து சரியான விதத்தில் விசாரணைகளை கொண்டு செல்ல ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் – என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )