செம்மணிப் புதைகுழி; அரசு மீது சந்தேகங்கள்; சாணக்கியன் எம் பி. தெரிவிப்பு

செம்மணிப் புதைகுழி; அரசு மீது சந்தேகங்கள்; சாணக்கியன் எம் பி. தெரிவிப்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் அதிகளவான மனித எலும்புக் கூடுகள் மீட்கப்படும் நிலையில் அவரசமான மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கத் தவறுவதன் காரணமாக அதனை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட .எம்.பி இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் சில விடயங்கள் நடைபெற்றுவருகின்றன .இதனை தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்தவேண்டிய தேவையிருக்கின்றது.

செம்மணியில் தொடர்ந்து மனித எச்சங்கள்மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் 33பேரின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த மனித எச்சங்கள் அதிகரித்துச்செல்லுமானால் சில நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.அரசாங்கம் அவற்றினை முன்னெடுப்பதிலிருந்து தவறிவருகின்றது .இதனால் இதனை சர்வதேசத்தின் கவனத்திற்கும் கொண்டுசெல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

33பேரின் எச்சங்கள் செம்மணியில்மீட்கப்பட்ட பின்னரும் அதனை பாதுகாப்பதற்கு கூடாரங்களோ அல்லது பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.புதைகுழியில் கண்டுபிடிக்கும் அடையாளங்களை பாதுகாப்பதற்கான கூடாரங்களை அமைத்தால் மாத்திரமே அவற்றினை பாதுகாக்கமுடியும்.மழைபெய்யுமானால் அவற்றிற்கு பாதிப்புகள் ஏற்படும்.டிஎன்ஏ பரிசோதனைகள் செய்யப்படும்போது சில கஸ்டங்கள் ஏற்படும்.எனவே இவை உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக அங்கு செய்தி சேகரிப்பினை மேற்கொள்ளும் ஊடகவியலாளர்களுக்கு ஐந்து நிமிடம் மாத்திரமே அங்கு சென்று பார்த்து செய்தி சேகரிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன .நாள்முழுவதும் வேலைகள் நடைபெறுகின்றன .ஆனால் ஐந்து நிமிடங்கள் மாத்திரமே ஊடகவியலாளர்களுக்கு செல்லக்கூடியவாறு உள்ளது.

காணாமல்ஆக்கப்பட்டவர்களின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் செல்லமுடியும் என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்று ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டுமே செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.கொக்குத்தொடுவாயில் ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் சென்று செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன .ஆனால் செம்மணியில் மாலை நேரம் ஒரு தடவை மட்டுமே அனுமதி வழங்கப்படுகின்றது.

இதில் பெரியளவில் சந்தேகங்கள் ஏற்படுதற்கான காரணம் ஞாயிற்றுக்கிழமை புத்தக பையொன்று கண்டுபிடிக்கப்பட்ட வேளையில் அதனை அங்கிருந்து அகற்றுமாறு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக எங்களுக்கு உறுதிப்படுத்தப்படாத சில தகவல்களும் கிடைத்தன.ஆனால் அங்கிருந்த ஊடக நண்பர் ஒருவர் அதனை உடனடியாக புகைப்படம் எடுத்ததன் காரணத்தினால் அது வெளிவந்திருக்கின்றது.இந்த விடயங்களை மூடிமறைக்க அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பிலும் எங்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கின்றன.ஓரளவு பொலிஸாரின் பாதுகாப்பும்,அப்பிரதேச மக்களின் பாதுகாப்பினையும் தவிர அப்பகுதியில் பாதுகாப்பினை உறுதிப்படுத்தகூடிய வகையிலும் மக்களின் நம்பிக்கையினை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.அரசாங்கம் ஏன் பதுகாப்பினை வழங்குவதற்கு தயங்குகின்றது?அப்பகுதியில் கூடுதலான பாதுகாப்பினை வழங்கி அப்பகுதியில் மேலும் ஆய்வுகளை செய்யக்கூடிய சூழலை உருவாக்கவேண்டுமே தவிர பாதுகாப்பு இல்லாமல் வைத்திருப்பதற்கான காரணம் என்ன என்பதே கேள்வியாகவுள்ளது.

இதுவரையில் அப்பகுதியில் சீசீரிவி கமராக்கள் பொருத்தப்படவில்லை. கொக்குத்தொடுவாயில் புதைகுழி அகழ்வின்போது சீசீரிவி பூட்டப்பட்டிருந்தது.ஆனால் செம்மணியில் 33 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னரும் சீசீரிவி கமராக்கள் பூட்டப்படவில்லை.இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் ஏன் அலட்சியமாக செயற்படுகின்றது என்ற கேள்வி எனக்குள்ளது.செம்மணியில் நடைபெறும் விடயங்கள் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை.இதனை பாதுகாக்க ஏன் அரசாங்கம் தயங்குகின்றது என்ற கேள்விவருகின்றது.

இந்த விடயங்கள் குறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தவேண்டும்.அவ்வாறு செய்யாவிட்டால் மக்களுக்கு அரசாங்கம் மீது பாரிய சந்தேகம் ஏற்படுவதுடன் இதற்கான நீதிமறுக்கப்படும்,மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்திசெய்யப்படாது என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது.அவ்வாறான சந்தேகங்களை நீக்கவேண்டுமானால் ஊடகவியலாளர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று தடவை சென்று செய்தி சேகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படவேண்டும்.சீசிரிவி கமராக்கள் பூட்டப்படவேண்டும்,அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவேண்டும்,அதேபோன்று விசாரணைகளுக்கும் பரிசோதனைகளுக்கு தேவையான வளங்களை அரசாங்கம் ஒதுக்கவேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )