46 சபைகளில் இலக்கை அடைந்த தமிழ் அரசு; பெரும் வெற்றி என்கிறார் சுமந்திரன்

46 சபைகளில் இலக்கை அடைந்த தமிழ் அரசு; பெரும் வெற்றி என்கிறார் சுமந்திரன்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்குக் கிடைத்த பெரு வெற்றி என்பதற்கு அப்பால், மக்கள் எமக்குக் கொடுத்திருக்கும் ஆணையை நாம் ஏற்றுக் கொண்டு உள்ளூராட்சி சபைகளின் முழு அதிகாரங்களையும் உபயோகித்து மக்களுக்கு சேவையாற்றுவோம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பதிவில்,வடகிழக்கில் கடைசியாக இரு சபைகள் இன்று அமைக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய இரண்டிலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நிர்வாகத்தை அமைத்திருக்கிறது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 58 சபைகளில் போட்டியிட்டாலும், 12 சபைகளில் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதிகளைப் பெறுவதற்காகவே அவற்றில் நாம் போட்டியிட்டோம், அப்படி பிரதிநிதித்துவத்தைப் பெற்றும் கொண்டோம்.

மிகுதி 46 சபைகளில் 34 சபைகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நிர்வாகங்களை அமைத்துள்ளது. ஆகவே, 58 சபைகளில், 46 இல் எமது இலக்கை அடைந்துள்ளோம். மிகுதி சபைகளிலும் இரண்டாவது இடத்தை வகிக்கிறோம்.

இது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்குக் கிடைத்த பெரு வெற்றி என்பதற்கு அப்பால், மக்கள் எமக்குக் கொடுத்திருக்கும் ஆணையாக நாம் ஏற்றுக் கொண்டு உள்ளூராட்சி சபைகளின் முழு அதிகாரங்களையும் உபயோகித்து மக்களுக்கு சேவையாற்றுவோம்.

இந்த மாபெரும் வெற்றிக்காக அயராது உழைத்த எமது தலைவர், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள், அபிமானிகள் ஆகியோருக்கும் எமது வேட்பாளர்கள் அனைவருக்கும் கட்சி சார்பில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்தோடு நிர்வாகங்களை அமைப்பதில் ஜனநாயகத் தீர்ப்புக்களை மதித்து தவிசாளர், பிரதி தவிசாளர் தெரிவுகளில் எம்மோடு ஒத்துழைத்த மற்றைய கட்சியினருக்கும் எமது நன்றிகள் – என்றுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )