நாடெங்கும் சட்டவிரோத துப்பாக்கிகள், தோட்டாக்கள்!; தொடர்ந்து மீட்கப்படுவதால் மக்கள் மத்தியில் பதற்றம்

நாடெங்கும் சட்டவிரோத துப்பாக்கிகள், தோட்டாக்கள்!; தொடர்ந்து மீட்கப்படுவதால் மக்கள் மத்தியில் பதற்றம்

நாடு முழுவதும் இடம்பெற்றுவரும் தொடர் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு மத்தியில் ஆங்காங்கே சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்படுவது மக்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

சட்டவிரோத துப்பாக்கிகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் கல்கமுவ, விலாஓயா, கலகொட, கிண்ணியா, வெலிகெபொல மற்றும் ஹபரதுவ உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத துப்பாக்கிகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹபரதுவ பொலிஸ் பிரிவின் வெல்லேகேவத்த பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 02 ரிவால்வர்கள், தோட்டாக்கள் மற்றும் 02 வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லேகேவத்த பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிவால்வர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிவால்வர், 2 பிஸ்டல் தோட்டாக்கள் மற்றும் 2 வாள்கள் பொலிஸார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளையில் ஒரு பஸ்ஸில் இருந்து 123 தோட்டாக்களை பொலிஸார் மீட்டுள்ளனர். கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பஸ்ஸின் பொதிகள் வைக்கும் பெட்டியில் இருந்த பையில், ஒரு சிறிய உலோகப் பெட்டியில் தோட்டாக்கள்; கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதில் 113 பிஸ்டல் தோட்டாக்களும், 9 ரி 56 தோட்டாக்களும் இருந்ததாகவும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கண்டி ஹசலக எல பகுதியில் பல பாடசாலை மாணவர்களின் உடைமையில் பல துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பிள்ளைகளில் பலர் தங்கள் வீடுகளைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவர் இந்த தோட்டாக்களைக் கண்டெடுத்ததாகவும் பின்னர் பிள்ளை தனது நண்பர்களிடையே தோட்டாக்களை விநியோகித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் ஒரு பிள்ளை வீட்டிற்குச் சென்ற பிறகு தனக்குக் கிடைத்த தோட்டாவை அடுப்பில் வீசியமையால் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தையடுத்து வீட்டு உரிமையாளர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இராணுவம், காவல்துறை மற்றும் விசாரணை அதிகாரிகள் வந்து வெடிப்பு நடந்த வீட்டை ஆய்வு செய்தனர், மேலும் அங்கு நடத்தப்பட்ட விசாரணைகளின் போது மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது.

அதன்படி, ஏனைய பிள்ளைகளின் வீடுகளையும் சோதனை செய்தபோது, இந்த தோட்டாக்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன. முதலில், இந்த தோட்டாக்களைக் கண்டுபிடித்த பிள்ளையிடம் விசாரித்தபோது, அவர்களது வீட்டிற்கு அடுத்துள்ள மற்றொரு வீட்டின் மரக்கட்டையிலிருந்து தோட்டாக்களைக் கண்டுபிடித்தது தெரியவந்தது. பிள்ளைகளிடமிருந்து இருந்து சுமார் 30 தோட்டாக்கள்; கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )