தமிழ் மக்களுக்காக அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு

தமிழ் மக்களுக்காக அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு

தமிழ் தரப்புக்கள் அனைத்தும் ஒற்றுமைப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதனுடைய ஒரு கட்டமாக கடந்த தேர்தலில் போட்டியிட்ட தமிழ் மக்களினுடைய தேசிய இன பிரச்சினைக்காக குரல் கொடுக்கக்கூடிய போராடக் கூடிய அமைப்புகளை ஒன்றிணைத்து இருக்கின்றோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற பெயரில் சங்கு சின்னத்தில் போட்டியிட 9 தரப்புக்கள் இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய ஐந்து கட்சிகளுடனும் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம், சமத்துவக் கட்சி, கடந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட ஜனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புகள் ஒன்றாக இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை போட்டியிடுவதாக தீர்மானித்து இருக்கின்றோம்.

இந்த தேர்தல் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிக முக்கியமான தேர்தலாகும். வெளியில் இருக்கக்கூடிய முக்கியமான கட்சிகளும் இதில் இணைவார்களாக இருந்தால் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தை திட்டமிட்ட வகையில் கொண்டு செல்வதற்கு அது உதவியாக இருக்கும்.

இன்று இருக்கக்கூடிய அரசாங்கமானது தமிழ் மக்களுடைய உரிமையை புறந்தள்ளி வெறுமனே அபிவிருத்தி செய்கிறோம் என்ற மாஜையை காட்ட முயற்சிக்கின்றார்கள். தமிழ் தரப்புகள் அனைத்தும் தங்களிடம் இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். தமிழ் மக்களுடைய தீர்வு விடயத்தில் இதுவரை எந்தவிதமான ஒரு அணுகுமுறையையோ கருத்துக்களையோ தெரிவிக்காத சூழ்நிலையே தொடர்ந்து இருந்து வருகிறது. ஆகவே தமிழ் மக்கள், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய கட்சிகள் அனைத்தும் ஓரணிதிரள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அந்த வகையில் ஏற்கனவே இருந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகளுடன் புதிய நான்கு தரப்புக்கள் இணைந்து தற்போது ஒன்பது தரப்புகளாக நாங்கள் ஒன்றாக அணிதிரண்டுள்ளோம்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற பெயரிலும் அதனுடைய சின்னமான சங்குச் சின்னத்திலும் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.

இதனுடைய அடுத்த கட்டமாக மாவட்ட ரீதியாக வேட்பாளர் தெரிவுக் குழுவை நியமிப்பதற்கு முடிவு செய்திருக்கிறோம். அது மாத்திரமில்லாமல் இந்த தேர்தலை முகம் கொடுக்க வடக்கு கிழக்கு மாவட்டங்களில் மாவட்ட வேட்பாளர் தெரிவுக் குழுவை நியமிப்பது மாத்திரமல்ல அதற்குக் கீழாக உள்ள பிரதேச சபை ரீதியாகவும் வேட்பாளர் தெரிவுக் குழுவை நியமிக்கவும் தீர்மானித்துள்ளோம்.

ஆகவே எதிர்வரும் தேர்தலில் ஒற்றுமைக்காக, தமிழ் மக்களுடைய எதிர்கால அரசியல் பிரச்சினையை தீர்ப்பதற்காக, தமிழ் மக்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இயன்றவரை ஒற்றுமையாக பயணிப்பதற்கான முழு முயற்சியை நாம் மேற்கொண்டிருக்கின்றோம்.

வெளியில் உள்ள தரப்புகளும் இந்த ஒற்றுமை முயற்சிக்கு இணைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். தமிழ் மக்கள் நீண்ட காலமாக போராடி இலட்சக்கணக்கான உயிர்களை காவு கொடுத்தற்கு எதிர்காலம் சரியான முறையில் திட்டமிடப்பட வேண்டும். உள்ளூராட்சி சபை தேர்தல் உள்ளூர் பிரச்சினையை பேசுகின்ற ஒரு தேர்தலாக இருக்கலாம். இருந்தாலும் கூட தமிழ் தேசிய பரப்பில் இந்த தேர்தலுக்கு முக்கியத்துவம் இருக்கின்றதென நாங்கள் கருதுகிறோம். அந்த வகையில் தமிழ் மக்கள் நீண்ட காலம் போராடிவந்த இன்றைய சூழலில் எதிர்காலத்தை திட்டமிட்டக்கூடிய வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.ஒற்றுமைக் கூட்டணியை முன்னெடுத்துச் செல்கின்றோம். ஏனையோரும் இதில் இணைய வேண்டும் என நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம் – என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )