
உள்ளூராட்சித் தேர்தலில் 9 தமிழ் தேசியக் கட்சிகள் கூட்டு; தமிழ் அரசுக் கட்சியுடன் பேச்சு
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற பெயரில் சங்கு சின்னத்தில் போட்டியிட ஒன்பது தமிழ் தேசியக் கட்சிகள் இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பிலான இணக்கம் எட்டப்பட்டது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய ஐந்து கட்சிகளுடனும் இணைந்து தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம், சமத்துவக் கட்சி,கடந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட ஜனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பு உள்ளிட்ட இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் மாவட்ட வேட்பாளர் தெரிவுக் குழு, பிரதேச சபை ரீதியான வேட்பாளர் தெரிவுக் குழு என்பவற்றையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பில் தி.நிரோஷ், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் நா.சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வேந்தன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் வி.மணிவண்ணன், சமத்துவக் கட்சியின் தலைவர் மு.சந்திரகுமார், ஜனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பின் சார்பில் நாவலன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இதேவேளை எமது புதிய கூட்டணியில் இணைந்து போட்டியிட இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் பேசி வருவதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்தக் கூட்டணியில் இணைய ஏற்கனவே இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் நாங்கள் பேசியிருக்கின்றோம். அவர்கள் திட்டவட்டமான பதில்களை பதில்களை இதுவரை சொல்லவில்லை. அவர்கள் பேசி ஒரு முடிவு சொல்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கின்றது என்றார்.